மடிசார் புடவையுடன் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா!

கடைசி நேரத்தில் சுஜாதாவுக்குக் கிடைத்த ‘பரிட்சைக்கு நேரமாச்சு’ வாய்ப்பு
மடிசார் புடவையுடன் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா!

அந்தக் காலத்தில் நாடகங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. நாடகங்களைப் பற்றி திரையுலகினர் பேசிக்கொண்டே இருப்பார்கள். ‘புதுசா என்ன நாடகம் வந்திருக்கு, எப்படியிருக்கு?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒய்.ஜி.பார்த்தசாரதி அரங்கேற்றிய நாடகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. கூட்டம்கூட்டமாக வந்து பார்த்தார்கள். ‘இதைப் படமாக எடுத்தால் என்ன?’ என்று முக்தா சீனிவாசனுக்குத் தோன்றியது. சிவாஜியும் அந்த நாடகத்தைப் பார்த்து வியந்துபோயிருந்தார். உடனடியாக அந்த நாடகத்தை சினிமாவாக்கினார்கள். ‘பரிட்சைக்கு நேரமாச்சு’ என்ற பெயரில் சிவாஜியும் சுஜாதாவும் நடிக்க வெளியானது.

சிவாஜிக்கும் சுஜாதாவுக்கும் ஒரு மகன். அவன் கொஞ்சம் அசமந்தமாக இருப்பவன். அப்பாவியாக இருப்பவன். அரசுப் பணியில் குமாஸ்தாவாக இருக்கும் தன்னைப் போலவே தன் மகனும் எப்படியாவது பாஸ் செய்து அரசுப் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் சிவாஜியின் ஆசை, லட்சியம், கனவு எல்லாமே!

ஆனால் ஒவ்வொரு முறையும் ஃபெயிலாகிக் கொண்டே இருப்பான் மகன். ஒருகட்டத்தில் தேர்வு எழுதச் செல்லும்போது, எதிரில் வந்த வாகனம் மோதி, மகன் இறந்துவிடுவான். இதில் சித்தபிரமை பிடித்தது போலாகிவிடுவார் சுஜாதா. ஒருபக்கம் மகனை இழந்த துக்கம், இன்னொரு பக்கம் மனைவி இப்படியாகிவிட்டாளே என்கிற வேதனை எனத் தவித்துக் கலங்குவார் சிவாஜி. ’என் பையனை மோதிக் கொன்னவனை பழிவாங்கியே தீருவேன்’ என்று கொதித்துப் போயிருப்பார்.

இப்படியான தருணத்தில் ஒருநாள்... திருடன் ஒருவன், போலீஸிடம் சிக்கிக்கொள்ளாமல் ஓடிவருவான். அவன் ஓடிவந்து ஒளிகிற இடம், சிவாஜியின் வீடாக இருக்கும். பார்த்தால்... சிவாஜியின் மகனைப் போலவே இருக்கும்.

சுஜாதாவுக்கு அவனைப் பார்த்ததும் பழசெல்லாம் நினைவுக்கு வந்துவிடும். சிவாஜியும் ஆறுதலாவார். அவன் வேற்று இனத்தவராக இருந்தபோதும், தங்கள் பிள்ளையாகவே பாவித்து வளர்ப்பார்கள்.

ஒருகட்டத்தில், ‘நம் மகனை வாகனத்தை தாறுமாறாக ஓட்டிவந்து கொன்றவனைத்தான் மகனைப் போல வளர்த்து வருகிறோம்’ என்பது சுஜாதாவுக்குத் தெரிந்துவிடும். ‘இதை என் கணவருக்குத் தெரிந்தால் நீ அவ்வளவுதான். உன்னைக் கொன்றுபோட்டு விடுவார்’ என்று எச்சரித்து, தானும் சொல்லாமல் இருப்பார் சுஜாதா.

ஆனால், சிவாஜிக்கு இதெல்லாம் தெரிந்துவிடும். அவனைக் கொல்வதற்கு அரிவாளைத் தூக்கிக்கொண்டு வருவார். ஓங்குவார். ஆனால் கொல்ல முடியாமல் மருகுவார். “நீ என் பையனைப் போலவே இருக்கே. உன்னை என்னால கொல்ல முடியாது” என்று அழுவார். பிறகு, “நீயாவது நல்லபடியா பரிட்சை எழுது. பாஸ் பண்ணு. அரசாங்க உத்தியோகத்துக்குப் போ” என்று படிக்க வைப்பார். அவனும் படிப்பான். தேர்வு நாளன்று பரிட்சை எழுதச்செல்வான். பஸ் ஏறும்போது விழுந்து அவனும் இறந்துபோவான் என்பதுடன் படம் நிறைவடையும்.

சிவாஜி - சுஜாதா ஜோடிக்கு மகனாகவும் அந்தத் திருடனாகவும் டபுள் ரோல் செய்திருப்பார் ஒய்.ஜி.மகேந்திரன். நாடகத்தில் சிவாஜி கேரக்டரில் ஒய்.ஜி.பார்த்தசாரதி நடித்தார். மகன் கதாபாத்திரத்தில் மகேந்திரன்தான் நடித்தார். ’’நீங்கள் மகன் கேரக்டருக்கு யாரைப் போடச் சொல்கிறீர்களோ அவரைப் போட்டுக்கொள்ளலாம்’’ என்று முக்தா சீனிவாசன் சிவாஜியிடம் சொன்னார்.

அதற்குக் காரணமும் உண்டு. அப்போது பிரபு நடிக்க வந்துவிட்டார். ஒருவேளை, சிவாஜியின் மனதில் மகனாக பிரபு நடிக்கட்டும் என்று நினைப்பாரோ என்னவோ என்று முக்தா சீனிவாசன் இப்படிச் சொன்னார். உடனே சிவாஜி, ‘’வேற யாரும் வேணாம். மகேந்திரனே டிராமால நல்லாப் பண்ணிருக்கான். அவனையே போட்டுக்கலாம்’’ என்று சொன்னார்.

நரசிம்மாச்சாரி எனும் ஐயங்கார் கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்து அசத்தினார். ஏற்கெனவே, ‘வியட்நாம் வீடு’, ‘கெளரவம்’ முதலான படங்களில், பிராமணக் கதாபாத்திரத்தில் ஐயராக நடித்தவருக்கு, ஐயங்கார் கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஒன்றும் சிரமம் இருக்கவில்லை. அது சரி... எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்துவாங்குகிற சிவாஜிக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?

சுஜாதாவும் சிறப்பாக நடித்திருந்தார். அப்பாவித்தனமாக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மீது மிகுந்த அன்பு கொண்டவராக பூர்ணிமா ஜெயராம் நடித்தார். வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, தேங்காய் சீனிவாசன், டெல்லி கணேஷ், ராதாரவி, ஒய்.ஜி.பார்த்தசாரதி என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தார்கள். ஒய்.ஜி.மகேந்திரன் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.

திருவல்லிக்கேணியில் உள்ள ஒண்டுக்குடித்தன வீடுகள் கொண்ட இடம்தான் கதைக்களம். எனவே திருவல்லிக்கேணியிலும், அதேபோல் கிணறு, வீடுகள் கொண்ட செட் போட்டும் படமெடுத்தார்கள்.

வியட்நாம் வீடு சுந்தரம்தான் கதை வசனத்தை எழுதினார். முக்தா வி.ராமசாமி ‘வித்யா மூவிஸ்’ எனும் பெயரில் தயாரித்தார். முக்தா சீனிவாசன் தனக்கே உரிய பாணியில் இயக்கினார்.

நாடகங்களில் நடித்து வந்த சுப்புணி எனும் நடிகரையும் சில்க் ஸ்மிதாவையும் வைத்துக்கொண்டு காமெடிக் காட்சிகள் வைத்திருந்தார்கள். மகன் ஒய்.ஜி.மகேந்திரனின் பெயர் ‘வரதுக்குட்டி’. அதை சிவாஜி ஒவ்வொரு முறை கூப்பிடுவது அத்தனை ஸ்டைலாக இருக்கும்.

எல்லாப் பாடல்களையும் வாலி எழுதினார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். டி.எம்.செளந்தர்ராஜன், பி.சுசீலா, வாணிஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி முதலானோர் பாடினார்கள்.

இந்தப் படம் குறித்து, முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவியிடம் பேசினேன். சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நரசிம்மாச்சாரி எனும் ஐயங்கார் கதாபாத்திரத்தில் பூணூல் அணிந்தபடி நடித்தார் சிவாஜி கணேசன். படம் முடியும் வரை ஒருவிஷயத்தைச்செய்தார். அது... படம் முடியும்வரை பூணூலை சிவாஜி அவிழ்க்கவே இல்லை. இன்னொரு விஷயத்தை சிவாஜி செய்யவே இல்லை. அது... அசைவத்தை நிறுத்தியது. ஆம்! படம் முடியும் வரை அசைவம் சாப்பிடாமலேயே இருந்தார்.

படத்தை எடுத்து முடித்ததும் பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டார்கள். அப்போது படத்தைப் பார்த்த பத்திரிகையாளர் மதிஒளி சண்முகம், ‘’ஏங்க, நிஜ மகனை சாகடிச்சீங்க. அப்புறம் வேற ஒரு மதத்துப் பையனை, தன் பையனாவே வளர்க்கிறாங்களே. அவனையும் ஏன் சாகடிச்சீங்க. அவன் அங்கேயே, அவங்க வீட்லயே வளர்றவனாக் காட்டிருக்கலாமே...’ என்று சொல்ல, ‘இதுவும் நல்ல யோசனையா இருக்கே...’ என்று முக்தா சீனிவாசன், அவசரம் அவசரமாக, கடைசியில் பரிட்சை எழுதிவிட்டு வருவது போலவும், சிவாஜி - சுஜாதா தம்பதியுடன் அவன் சேர்ந்துவாழ்கிறான் என்பது போலவும் இரண்டு காட்சிகள் எடுத்து தியேட்டர்களுக்கு அனுப்பிவைத்தார்களாம்.

அதன்படி, சில தியேட்டர்களில், இரண்டாவது ஒய்.ஜி.மகேந்திரன் பிழைப்பது போலவும் சில தியேட்டர்களில் இரண்டாவது ஒய்.ஜி.மகேந்திரனும் இறப்பது போலவும் ஆபரேட்டர்கள் க்ளைமாக்ஸ் காட்சியை வைத்துக்கொண்டார்களாம்.

’’படத்தில் சுஜாதாவுக்கு மடிசார் புடவையைக் கட்டிவிட்டது என் அம்மா பிரேமாதான் (முக்தா சீனிவாசனின் மனைவி). ஆரம்பத்தில் அவருக்கு மடிசார் கட்டிக்கொள்ளத் தெரியவில்லை. பிறகு என் அம்மாதான் பல காட்சிகளுக்கு மடிசார் புடவையைக் கட்டிவிட்டார். அதன் பின்னர், சுஜாதா மடிசார் புடவைக் கட்டிக்கொள்ள கற்றுக்கொண்டார்’’ என்று தெரிவித்தார் முக்தா ரவி.

‘’இந்தப் படத்தில் ஜெயலலிதா நடித்தால் சரியாக இருக்கும் என்று அப்பா (முக்தா சீனிவாசன்) நினைத்தார். அதை ஒய்.ஜி.பார்த்தசாரதியிடமும் சொன்னார். ஒய்.ஜி.பி குடும்பத்துக்கு ரொம்பவே நெருக்கமானவர் ஜெயலலிதா. ஆரம்பகாலத்தில் அவருடைய நாடகங்களில் கூட ஜெயலலிதா நடித்திருக்கிறார். ஆகவே நல்ல பழக்கமுண்டு. சிவாஜி சாரிடம் அப்பா சொன்னதற்கு ‘யார் நடிச்சாலும் ஓகேதான். ஜெயலலிதா நடிச்சா, இந்தக் கேரக்டருக்கு நல்லாத்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டார்.

அப்போது ஜெயலலிதா, அரசியலில் இறங்கத் தொடங்கிய தருணம். கட்சியில், கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். அவரிடம் கதையைச் சொன்னதும் மகிழ்ச்சியோடு சம்மதம் சொன்னார். “இதுவரை பிராமின் கேரக்டர்ல நான் நடிச்சதே இல்லை. முக்கியமா, மடிசார் புடவைக் கட்டிக்கொண்டு நடிச்சதே இல்லை. அதனால நிச்சயமா நடிக்கிறேன்” என்று சொன்ன ஜெயலலிதா, படப்பிடிப்பு தொடங்குவதற்கு சிலநாட்களுக்கு முன் அப்பாவை அழைத்து, “இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாது, மன்னித்துவிடுங்கள். சுஜாதா நடித்தால் சிறப்பாக இருக்கும். அவரை வேண்டுமானால் அந்தக் கேரக்டருக்கு நடிக்க வையுங்களேன்” என்று சொல்லிவிட்டார். ஆனாலும் ஜெயலலிதாவுக்கு இந்தக் கேரக்டரைச் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அரசியல் பணிகள் அதற்கு இடம் கொடுக்கவில்லை போல..!’’ என்று தெரிவித்தார் முக்தா ரவி.

1982 நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியானது ‘பரிட்சைக்கு நேரமாச்சு’. படம் வெளியாகி, 40 வருடங்களாகின்றன. ஒருவேளை முக்தா சீனிவாசன் இயக்கத்தில், சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக ஜெயலலிதா, இதுவரை நடித்திடாத மடிசார் புடவையுடன் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால், அவர் வாழ்விலும் அவரின் ரசிகர்கள் மத்தியிலும் மறக்கமுடியாத படமாக ‘பரிட்சைக்கு நேரமாச்சு’ அமைந்திருக்கும்.

1980-ல் ஜெயலலிதாவின் கடைசிப் படமாக ‘நதியைத் தேடி வந்த கடல்’ வெளியானது. ஒருவேளை ‘பரிட்சைக்கு நேரமாச்சு’ படத்தில் நடித்திருந்தால் திரையுலகப் பயணத்தை அவர் தொடர்ந்திருக்கக்கூடும். தமிழகத்தின் அரசியல் சூழலும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in