‘ரஜினிக்கு நான் ஜோடியா?’ ஜெயலலிதா சம்மதித்து, மறுத்ததில் நீடிக்கும் மர்மம்!

‘ரஜினிக்கு நான் ஜோடியா?’ ஜெயலலிதா சம்மதித்து, மறுத்ததில் நீடிக்கும் மர்மம்!

ரஜினி காந்த் ஜோடியாக ஜெயலலிதா!

இப்படியொரு ஏற்பாடு ரஜினியின் ’பில்லா’ திரைப்படத்துக்காக கூடிவந்ததும், கடைசி நேரத்தில் அதற்கு ஜெயலலிதா மறுத்ததும், சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றைக்கும் பேசுபொருளாய் நீடிக்கும் சுவாரசியங்களில் ஒன்று! ஜெயலலிதா - ரஜினி காந்த் என்று தமிழ் சினிமாவின் மிகப்பெரும் இரு ஆளுமைகள் அறிமுகமானதும், வளர்ந்ததும், திரைப்படம் ஒன்றில் ஜோடியாக பேச்சுவார்த்தை நடந்ததும், அதன் பிறகு அரங்கேறிய சம்பவங்களும்... ஒரு திரைப்படத்துக்கு இணையானவை.

இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமாகி பெரியளவில் ரவுண்டு வந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் என அன்றைக்கு இருந்த ஹீரோக்களுடன் நடித்து அசத்தினார். இயக்குநர் கே.பாலசந்தரின் ‘அபூர்வராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராக அசத்திக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

இயக்குநர் கே.பாலசந்தரால் அறிமுகமான ரஜினிகாந்த், இயக்குநர் ஸ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் நடித்தார். பிறகு ‘துடிக்கும் கரங்கள்’ படத்திலும் நடித்தார். அதேபோல், இயக்குநர் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதா, கே.பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் நடித்தார்.

1965ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, தமிழ்ப்புத்தாண்டு அன்று ஜெயலலிதா நடித்த ‘வெண்ணிற ஆடை’ வெளியானது. 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திரதினத் திருநாளில் ரஜினி அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியானது. ஜெயலலிதா ஆரம்பத்தில் ‘கலைச்செல்வி’ எனும் பட்டத்தைப் பெற்றார். ரஜினிக்கு ‘ஸ்டைல் மன்னன்’ எனும் பட்டம் கிடைத்தது. ஜெயலலிதா பின்னாளில் அரசியலுக்கு வந்து, ‘புரட்சித்தலைவி’யானார். ரஜினிகாந்த்’ சூப்பர் ஸ்டார்’ என இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

ஜெயலலிதாவின் வீடு சென்னையில் போயஸ் கார்டனில் என்பது நமக்குத் தெரியும். அதேபோல், ரஜினியின் வீடும் போயஸ் கார்டன்தான். 65ம் ஆண்டு திரைத்துறைக்குள் நுழைந்த ஜெயலலிதா, ‘ஆயிரத்தில் ஒருவன்’ முதலான படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதேபோல், எம்ஜிஆருடன் அதிகம் நடித்த நடிகை என்கிற பெருமையும் இவருக்குக் கிடைத்தது. அதேபோல், ஆரம்பகட்டத்தில், ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி என பலருடனும், பிறகு ராதிகா, மீனா, நக்மா, ஐஸ்வர்யா ராய் என்றும் ரஜினி நடித்து வருகிறார்.

ஜெயலலிதா, நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜியின் தயாரிப்பில், ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல், நடிகர் திலகம் சிவாஜியுடன், ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் நடித்தவர், தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜியை வைத்து நிறைய படங்களைத் தயாரித்த கே.பாலாஜி, சிவாஜியையும் ஜெயலலிதாவையும் ஜோடியாக்கி பல படங்களைத் தயாரித்தார்.

இந்த நிலையில்தான் கே.பாலாஜியின் தயாரிப்பில், ரஜினி ‘பில்லா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படம் இந்தியில் ‘டான்’ என்று அமிதாப் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதேபோல், ரஜினியை வைத்து ‘பில்லா’ படத்தையும் ஹிட்டாக்கினார். ஸ்ரீப்ரியா, பிரவீணா, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர், மனோரமா, கே.பாலாஜி, ஏவி.எம்.ராஜன் முதலானோர் நடித்தார்கள். இயக்குநர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இந்தப் படத்துக்குப் பிறகு ‘பில்லா’ கிருஷ்ணமூர்த்தி என்றே அழைக்கப்பட்டார். கண்ணதாசனின் பாடல்களும் மெல்லிசை மன்னரின் இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்தன. ஸ்ரீப்ரியா, தன் அருமையான நடிப்பால் கலக்கியிருந்தார்.

இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க அழைத்தார் கே.பாலாஜி. கதையைக் கேட்டு முதலில் சம்மதித்தவர், சில நாட்கள் கழித்து, ‘’வேண்டாம் சார். நான் இதுல நடிக்கிறதா இல்ல சார். வேணும்ணா ஸ்ரீப்ரியாவை இந்தக் கேரக்டருக்குப் போடுங்க சார்’’ என்று மறுத்துவிட்டார்.

1980ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று ‘பில்லா’ படம் வெளியானது. அப்படியெனில், 1979ம் ஆண்டின் மத்தியில் இதன் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டிருக்கும். அப்போது, ஜெயலலிதாவிடம் பாலாஜி படத்தில் நடிப்பது குறித்து கேட்டிருப்பார். முதலில் சம்மதித்தவர், பிறகு ஏனோ நடிக்க மறுத்துவிட்டார். பிறகு, ஸ்ரீப்ரியாவை ஹீரோயினாக்கி அவரும் அசத்தியெடுத்தார்.

’’எனக்கு பணம் முக்கியம் என்று நினைத்திருந்தாலோ, அப்போது பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட ரஜினியுடன் நடிக்கலாமே என்று நான் ஆசைப்பட்டிருந்தாலோ நடித்திருப்பேனே..! ஆனால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. மறுத்துவிட்டேன்’’ என்று ஜெயலலிதா பல வருடங்கள் கழித்து, மனம் திறந்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இங்கே... இன்னொரு சுவாரஸ்யம்... ரஜினியுடன் ஜெயலலிதா ஜோடியாக ‘பில்லா’ படத்தில் நடித்திருந்தால், அந்தப் படம் இன்னொரு வரலாற்றுப் பதிவாகவும் ஆகியிருக்கும். பி.லெனின் இயக்கத்தில், இளையராஜா இசையில், சரத்பாபுவுடன் ஜெயலலிதா நடித்த ‘நதியைத் தேடி வந்த கடல்’ திரைப்படம் நினைவிருக்கிறதா? இந்தப் படம், 1980ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு வெளியானது. இதுதான் ஜெயலலிதா நடித்த கடைசிப்படம்.

ஒருவேளை, ஜெயலலிதா ரஜினியுடன் நடிக்கச் சம்மதித்து, நடிக்கவும் செய்திருந்தால், 1980ம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு, அதே வருடத்தில், அதே மாதத்தில், ஜனவரி 26ம் தேதி வெளியான ‘பில்லா’ படம், ஜெயலலிதாவின் கடைசிப்படமாக இருந்திருக்கும்!

ஏனோ தெரியவில்லை... ரஜினியும் ஜெயலலிதாவும் இணைந்து நடிப்பது நடக்காமலே போய்விட்டது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in