’சித்திரச் செவ்வானத்தை சிரிக்கவைத்த’ பாடகர் ஜெயச்சந்திரன்!

பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
ஜெயச்சந்திரன்
ஜெயச்சந்திரன்

சில குரல்கள், எல்லோருக்கும் பிடித்தமான குரலாக அமைந்திருக்கும். முக்கியமாக, எல்லா இசையமைப்பாளர்களுக்கும் விருப்பமான குரலாக அமைந்திருக்கும். அப்படி, இசையமைப்பாளர்களின் உணர்வுக்குத் தக்க குரல் கிடைத்துவிட்டால், நம் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடல்களை அந்தக் குரல் நமக்குக் கடத்திவந்து கொடுத்துவிடும். பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் அப்படித்தான்!

ஜேசுதாஸ் உள்ளிட்டவர்களுடன் ஜெயச்சந்திரன்
ஜேசுதாஸ் உள்ளிட்டவர்களுடன் ஜெயச்சந்திரன்

கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளம்தான் தாய்மண். எர்ணாகுளம் அருகேயுள்ள ரவிபுரம் எனும் கிராமத்தில், 1944-ம் ஆண்டு, ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் - சுபத்ரா குஞ்சம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஜெயச்சந்திரன். அப்பா மிகப்பெரிய இசைக்கலைஞர். கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவர். ஆனாலும் எளிமையாகத்தான் வாழ்ந்தார்கள். மகனையும் மிக மிக எளிமையாகவே வளர்த்தார்கள்.

அம்மாவின் ஆசைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார் ஜெயச்சந்திரன். பள்ளியில் நடந்த போட்டியில் மிருதங்கம் வாசித்து பரிசுகள் பெற்றார். அதேகட்டத்தில் பாட்டுப் போட்டியிலும் பங்கெடுத்துக் கொண்டார். அதிலும் பரிசுகள் கிடைத்தன. விளையும் பயிர் என்பது முளையிலேயே தெரிந்தது, அந்தக் குடும்பத்துக்கு! மாநில அளவிலான மாணவர்களுக்கான போட்டியில் மிருதங்கத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. தேவாலயங்களில் ஜெயச்சந்திரனின் குரலுக்கு பலரும் மெய்ம்மறந்து போனார்கள்.

பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு, சென்னைக்கு வந்தார் ஜெயச்சந்திரன். டிகிரி கையில் இருந்தது. மிருதங்கம் பக்கத்திலேயே இருந்தது. ஆனாலும் தனக்குள் இரண்டறக் கலந்திருந்த குரலின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது அவருக்கு!

1965-ம் ஆண்டு, போருக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மெய்யுருகப் பாடினார். இந்தப் பாடலை இந்தியாவின் ஒளிப்பதிவு மேதை என்று போற்றப்பட்டவரும் இயக்குநர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருமான ஏ.வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர்.எஸ்.பிரபு இருவரும் கேட்டார்கள். உடனே ஜெயச்சந்திரனை அழைத்து கைகுலுக்கினார்கள். தோள் தட்டிப் பாராட்டினார்கள். ’குஞ்சாலி மரக்கார்’ எனும் படத்துக்கு பாடவைத்தார்கள். இதுவே அவருக்கு முதல் படம்; முதல் பாட்டு! ஆனால், இதையடுத்துக் கிடைத்த வாய்ப்பு, முதல் படமாக, முதல் பாடலாக அமைந்தது. ’களித்தோழன்’ படத்தில் ஜெயச்சந்திரனின் பாடல் ஒலித்தது. குரலில் கட்டுண்டுபோனார்கள் கேரள ரசிகர்கள்.

1972-ம் ஆண்டு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ’பணி தீராத வீடு’ என்ற மலையாளப்படத்தில் இவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. மீண்டும் மெல்லிசை மன்னர் ’மூன்று முடிச்சு’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இரண்டு பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் கமலுக்குப் பாடினார். இன்றைக்கும் ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற பாடலையும் ‘ஆடிவெள்ளி தேடி உன்னை’ என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள். அப்படியே கமலின் குரலுக்கு இணையானதொரு குரலாகவும் ஸ்டைலாகவும் பாடியிருப்பார்.

கொஞ்சம்கொஞ்சமாக ஜெயச்சந்திரன் குரலுக்கென தனிக்கூட்டம் உருவானது. ‘’ஜெயச்சந்திரனோட குரல்ல பாதி ஜேசுதாஸ் இருக்கார்; பாதி எஸ்பி.பி. இருக்கார். புதுமாதிரியா இருக்குப்பா அவரோட வாய்ஸ்’’ என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இளையராஜா வந்தார். எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜா, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற படத்துக்கு இசையமைத்தார். ‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடலை வழங்கினார். தொடர்ந்து, இளையராஜா தன் இசையில் எஸ்பி.பி-க்கு இந்தப் பாடல்தான், ஜேசுதாஸ் அண்ணாவுக்கு இந்தப் பாடல்தான், மலேசியா வாசுதேவனுக்கு இந்தப் பாடல்தான், எஸ்.என்.சுரேந்தருக்கு, தீபன் சக்கரவர்த்திக்கு, கிருஷ்ணசந்தருக்கு என்றெல்லாம் பாடல்களை வகைவகையாகக் கொடுத்தார். அந்தப் பட்டியலில் ஜெயச்சந்திரன், தனியிடம் பிடித்தார்.

கே.ஜே.ஜேசுதாஸுடன் ஜெயச்சந்திரன்
கே.ஜே.ஜேசுதாஸுடன் ஜெயச்சந்திரன்

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், ‘மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ’ என்ற பாடலில் ஸ்வர சஞ்சாரமெல்லாம் செய்து ஆலாபனைகளில் அசத்தி, ‘நீரோடை போலவே’ என்கிற வரிகளில், நம் கண்முன்னே நீரோடையைக் கொண்டு வந்து நிறுத்தினார் ஜெயச்சந்திரன்.

டி.ராஜேந்தருக்கு எஸ்பி.பி-யின் குரல் மீது அதீத காதலே உண்டு. ஆனாலும் மற்ற குரல்களையும் அவர் ரசிக்காமல் இருந்ததில்லை. முதன்முதலாக இசையமைத்த ‘ஒருதலை ராகம்’ படத்திலேயே, ‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ என்ற பாடலைக் கொடுத்தார். அவரின் குரலாலும் அந்தக் குரல் மூலம் நம்மைத் தொட்ட டி.ஆரின் வரிகளாலும் நாமே அழுது கரைந்தோம். ‘இரயில் பயணங்களில்’ படத்தில், ’வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம், அந்த ‘பெல்பாட்ட’ காலத்துக்குள் சென்று பயணிக்கத் தொடங்கிவிடுவோம். அப்படியொரு மாயாஜாலக் குரல் ஜெயச்சந்திரனுடையது!

கமலும் சுஜாதாவும் நடித்த ‘கடல்மீன்கள்’ படத்தில், இளையராஜா ஜெயச்சந்திரனுக்காக ஒருபாடலைக் கொடுத்தார். கிட்டத்தட்ட, ஜெயச்சந்திரனுக்காகவே ஸ்பெஷலாக டியூன் போட்டிருப்பாரோ என்றே தோன்றும். ‘தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்’ என்ற பாடல், நம்மையே தாலாட்டிவிடும். அதில் ‘சொர்க்கத்திலே இது முடிவானது சொர்க்கம் என்றே இது முடிவானது’ என்ற வரிகளை ஜெயச்சந்திரனின் குரலில் கேட்கும்போதே, சொர்க்கம் வந்து நம் வீட்டுவாசலின் கதவு தட்டும். அப்படியொரு ஏகாந்த சுகமான குரல் அது!

பாக்யராஜ் பாலக்காட்டு மாதவனாக நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற பாடலைக் கேட்டால், நமக்கே காதல் பூ குலுங்கிக் குலுங்கிப் பூக்கும். ‘’எங்கிட்ட அஞ்சு டியூன் இருக்கு. அதை தனித்தனியா தரமாட்டேன். மொத்தமா ஒரே படத்துக்குத்தான் தருவேன்’’ என்று இளையராஜா, நீண்டநாட்களாக அந்த ஐந்து டியூன்களை அடைகாத்து வைத்திருக்க, ஆர்.சுந்தர்ராஜன், அந்த டியூன்களைத் தட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று ‘வைதேகி காத்திருந்தாள்’ உருவாக்கினார். ‘’இந்தா அஞ்சு டியூன், வைச்சிக்கோ’’ என்று இளையராஜா கொடுத்தார்.

‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்கிற பாடல், காதலர்களின் ஏக்கப் பாடல். ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா’ என்பது காதலின் துக்கப்பாடல். ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே’ என்கிற பாடல், காதலின் குதூகலம் உணர்த்திய பாடல். இந்த மூன்று பாடல்களும் முக்கனிச்சுவை. இந்த முக்கனிகளையும் ஜெயச்சந்திரனுக்கு... அவரின் பலாச்சுளைக் குரலுக்குமாக வழங்கினார். ’ஆலிலையோ தொட ஆளில்லையோ’ எனும் வரிகளில் ஜீவனைக் குழைத்து தன் குரலில் தோய்த்துக் கொடுத்தார் ஜெயச்சந்திரன்.

’மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்’ என்றால் நாமே மயங்கித்தான் போனோம். இயக்குநர் விக்ரமனின் இயக்கத்தில், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில், ‘சொல்லாமலே யார் பார்த்தது’ என்ற பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

மலையாளம், தமிழ், கன்னடம் என ஜெயச்சந்திரன் பாடாத மொழிகளில்லை. பாடிய எல்லா மொழிகளிலும் அந்த மாநிலங்களின் விருதுகளைக் குவித்த பெருமையும் உண்டு. ‘ஸ்வரலயா கைரளி ஜேசுதாஸ் விருது’ என்பது கேரளத்தில் மிக உயர்ந்த, கெளரவமான விருது. ’’இதற்கு முன்பு மாநில அரசின் விருதுகள் பலவற்றை பலமுறை வாங்கியிருக்கிறேன். நான் பாடிய மாநிலங்களிலும் என் குரலை அங்கீகரித்து விருது வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் தாஸ் அண்ணாவின் பெயரால் உள்ள இந்த விருது, என் வாழ்நாளுக்கான விருது. மிகப்பெருமையாக நினைக்கிறேன்’’ என்று நெகிழ்ந்து சொன்ன ஜெயச்சந்திரன், இந்த விருதை, ஜேசுதாஸின் கரங்களால்தான் பெற்றுக் கொண்டார்.

குரலில் இன்னமும் அதே குழைவு. ஜெயச்சந்திரன் இப்போது, 79-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். உடலையும் கட்டுமஸ்தாக, ஆரோக்கியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

மாயக்குரலால் வசீகரித்த ஜெயச்சந்திரனின் பாடல்களை ஒரு இரவு வேளையில், கேட்டுப்பாருங்கள். மறுநாள்... ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ என்று யாராவது நம்மிடம் கேட்டால்... அதற்கு, ‘ஜெயச்சந்திரன் பாட்டுகள்தான்’ என்று பதில் சொல்லுவோம். அப்படியொரு ஆனந்தமான குரல் அவருக்கு. நம்மையெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்த்திவிடுகிற குரல் ஜெயச்சந்திரனுடையது!

79-வது பிறந்தநாளுக்கும் அடுத்த பிப்ரவரி 3-ம் தேதி வரும் எண்பதாவது பிறந்தநாளுக்கும் சேர்த்து, மனமார்ந்த வாழ்த்துகள் ஜெயச்சந்திரன் சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in