'ஜெய்பீம்’ பட கதைக்காக ஒரு கோடி ரூபாய் தருவாக ஏமாற்றி விட்டார்: இயக்குநர் மீது பரபரப்பு புகார்

'ஜெய்பீம்’ பட கதைக்காக ஒரு கோடி ரூபாய் தருவாக ஏமாற்றி விட்டார்: இயக்குநர் மீது பரபரப்பு புகார்

‘ஜெய்பீம்’ பட கதைக்காக இயக்குநர் ஞானவேல் ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக படத்தின் உண்மை கதாபாத்திரமான கொளஞ்சியப்பன் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகர் சூர்யா தயாரித்து நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ;ஜெய்பீம்’. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விருதுகளைக் குவித்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் உண்மை கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு 2-டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்த படத்தின் மற்றொரு உண்மை கதாபாத்திரமும், ராஜாகண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவங்களை ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் காட்சிபடுத்தியதால் தங்களுக்கு உரிமைத் தொகை வழங்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் வரும் 26-ம் தேதிக்குள் சாஸ்திரி நகர் போலீஸார், மனுதாரர் சுட்டிக்காட்டிய சூர்யாவின் 2-டி நிறுவனம் உட்பட சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், சாஸ்திரி நகர் போலீஸார், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அம்பேத்கர் மணிமண்டபம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் வரை இப் போராட்டம் தொடரும் என கொளஞ்சியப்பன் தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதிகோரி கொளஞ்சியப்பன் தனது வழக்கறிஞருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். அப்போது, கொளஞ்சியப்பன் கைலி அணிந்து வந்ததால் அவரை போலீஸார் உள்ளே அனுமதிக்காதது சர்ச்சையானது. இதன் பின் வேஷ்டி அணிந்து வந்து கொளஞ்சியப்பன் மனு அளித்தார்.
இதன் பின் கொளஞ்சியப்பனின் வழக்கறிஞர் பாரி கூறுகையில், “ ‘ஜெய்பீம்’ படம் எடுப்பதற்கு முன்பு இயக்குநர் ஞானவேல் கொளஞ்சியப்பனை நேரில் சந்தித்து நடந்த உண்மை சம்பவத்தை கேட்டறிந்தனர். அத்துடன் இச்சம்பவத்தை வைத்து படம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் எழுதி வைத்திருந்த உண்மைக் கதையை வாங்கி கொண்டு ஒரு கோடி ரூபாய் பணமும் ,பட லாபத்தில் 20 சதவீதம் தருவதாகவும் கூறிவிட்டு சென்றார்.

ஆனால், படம் வெளியாகி பல மாதங்களாகியும் ஞானவேல் பணம் கொடுக்கவில்லை. எனவே, கொளஞ்சியப்பன் மற்றும் அவரது குடும்பத்தாரின் சொந்த கதையை படமாக எடுத்துவிட்டு உரிமைக்கான பணத்தை கொடுக்காமல் இருக்கும் 2- டி நிறுவனத்தி்ன் நிர்வாகிகள், பட இயக்குநர் ஞானவேல், மற்றும் படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in