`மனிதநேயம் தான் மானுடத்தின் வெற்றி என்கிற புரிதலை உருவாக்கியிருக்கிறது `மாமனிதன்'

இயக்குநர் சீனு ராமசாமியை பாராட்டும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
`மனிதநேயம் தான் மானுடத்தின் வெற்றி என்கிற புரிதலை உருவாக்கியிருக்கிறது `மாமனிதன்'

மாமனிதன் திரைப்படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தை சிறப்பாக அமைத்ததற்காக இயக்குநர் சீனு ராமசாமியை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. எழுதியுள்ள கடிததத்தில், "தமிழ் திரைப்பட உலகம் சமூக பண்பாட்டு விழுமியங்களில் ஏற்படுத்தும் தாக்கம் அபரிமிதமானது. கிறிஸ்தவர், இந்து, முஸ்லிம் எனப் பல மதக் கலைஞர்களும், சினிமாவின் இயல்பை உணர்ந்து உருவாக்கும் சில படங்கள் சமூக நல்லிணக்கத்தைச் சார்ந்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக தாங்கள் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட ‘மாமனிதன்’ படத்தையும் குறிப்பிடலாம்.

வலதுசாரி சிந்தனை, திரைப்பட உலகில் மிகைத்து வரும் இந்த சூழ்நிலையில் சமூக நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் மாமனிதன் திரைப்படத்தில் ஒரு இஸ்லாமிய கதாபாத்திரத்தை மிக இயல்பாக வலிந்து திணிக்காமல் எதார்த்தமாக உலவ விட்டிருப்பது பாராட்டுக்குரியது. படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதியின் குடும்ப நண்பராக அறிமுகப்படுத்தப்படும் அந்த முஸ்லிம் கதாபாத்திரம் திரைப்படம் முழுக்க இஸ்லாமிய விழுமியங்களை வெளிப்படுத்துவதோடு மனிதநேயத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் காட்சிப்படுத்துகிறது.

"பாய் உன்னை நம்பித்தான் போறேன்.. என் குடும்பத்தை பாத்துக்க பாய்" என்று விஜய் சேதுபதி சொல்லும் அந்த தருணம் நட்பியலின் இலக்கணத்தைப் பறைசாற்றுகிறது. கொடுத்த வாக்கை இறுதிவரை உடனிருந்து நிறைவேற்றும் அந்த முஸ்லிம் கதாபாத்திரம் மிகக் கனமாக பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து விடுகிறது. முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துக்களை, சிந்தனைகளை சமகால திரைப்படங்கள் கணிசமாகப் பரப்பி வரும் இந்த சூழ்நிலையில் ஒரு முஸ்லிம் சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தனது இந்து நண்பனின் குடும்பத்தை சிரத்தையுடனும் நேர்மையுடனும் பாதுகாக்கிறார் என்கிற காட்சிப்படுத்துதல் தமிழகத்தில் நிலவி வரும் உண்மைச் சூழலை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இதுபோன்று நல்ல கதை அம்சத்துடன் மிகை இல்லாத வாழ்வியலைப் பதிவு செய்யும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. பிரம்மாண்ட காட்சிகளைப் பயன்படுத்தாமல் எளிய மக்களின் வாழ்வியலை பிரம்மாண்டமாக காட்டியிருக்கும் உங்களின் படைப்புத்திறன் சிறப்புக்குரியது.

தங்களின் முந்தைய படைப்பான நீர்ப்பறவையிலும் முஸ்லிம்கள் குறித்தான அவதூறுகளுக்கு சிறப்பான முறையில் பதில் அளிக்கும் வகையில் சமுத்திரக்கனி அவர்களை வைத்து ஒரு காட்சியை வலுவாக அமைத்து இருந்தீர்கள். தொடர்ச்சியாக மாமனிதன் படத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை முஸ்லிம்கள் குறித்தான சிறப்பான சித்தரிப்புகளைப் தந்துள்ளீர்கள்.

உங்களைப் போன்று நல்ல படைப்பாளிகள் தமிழ் திரைப்பட உலகிற்கு அதிகம் தேவை. இதன் வாயிலாக சமூக நல்லிணக்கமும் அமைதியும் மதங்கள் குறித்த புரிதல்களும் தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும். மனிதநேயம் தான் மானுடத்தின் வெற்றி என்கிற புரிதலை மாமனிதன் திரைப்படம் உருவாக்கி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. ஒரு சிறந்த படைப்பை வழங்கி இருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி ஆகிய தங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in