‘வலிமை’ திரைப்படத்தை பிரான்சில் பார்க்கும் ஜான்வி கபூர்!

‘வலிமை’ திரைப்படத்தை பிரான்சில் பார்க்கும் ஜான்வி கபூர்!
ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர் ‘வலிமை’ திரைப்படத்தை பிரான்சில் உள்ள மிக பெரிய திரையரங்கில் பார்க்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், கார்த்திகேயா, ஹீமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘வலிமை’. கடந்த 2019ம் ஆண்டு இந்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி பின்பு கரோனா சூழல் காரணமாக படப்பிடிப்பு தள்ளி போனது. இந்த சமயத்தில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் வேண்டும் என உலக அளவில் விளையாட்டு வீரர்களிடமும், அரசியல் தலைவர்களிடமும் பொது வெளியில் ரசிகர்கள் கேட்டது இணையத்தில் ட்ரெண்டானது. பின்பு கரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு முடிந்து இந்த வருடம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 13ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அப்போது மீண்டும் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்க மீண்டும் வெளியீடு தள்ளிபோனது. இந்நிலையில் படம் உலகம் முழுவதும் இந்த மாதம் இறுதியில் அதாவது பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான புரோமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்க, இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் இந்த படம் குறித்து தனது மகிழ்ச்சியை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித்
நடிகர் அஜித்

’வலிமை’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், இந்த திரைப்படத்தை பிரான்சில் உள்ள உலகின் மிகப்பெரிய திரையான லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் பார்க்க இருப்பதாக ஜான்வி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ திரைப்படங்களுக்கு பிறகு தனது 61வது படத்தையும் ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி என மூன்றாவது முறையாக இணைகிறார் நடிகர் அஜித். சமீபத்தில் இந்த படத்தில் அஜித்தின் லுக்கை பட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். ஏற்கெனவே தனது முந்தைய பேட்டிகளில் இயக்குநர் ஹெச்.வினோத் எதிர்மறையான கதையாக இருக்கும் எனவும் ‘பில்லா’, ‘மங்காத்தா’ படங்களில் அஜித்தை பார்ப்பது போல எதிர்மறையான ஹீரோயிச கதாபாத்திரத்தில் அவரை பார்க்கலாம் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.