அசாத்தியத் திறமையால் அசத்தும் ஐஸ்வர்யா!

ஜனவரி 10: ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தநாள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில், மிகக் குறுகிய காலத்தில் நடிப்புத் திறமை வாய்ந்த நடிகை என்னும் நற்பெயரைப் பெற்றிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கிராமத்தைச் சேர்ந்த எளிய பெண், சிறுநகரங்களிலும் நகரங்களிலும் வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கப் பெண், பெருநகரங்களில் வாழும் உயர்தட்டுப் பெண், குடிசையில் வசிக்கும் இளம் தாய் என எந்த வகையான கதைச் சூழலுக்கும் கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு, கதாபாத்திரமாக உருமாறும் அசாத்திய திறமையின் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான நாயகி நடிகையரில், தனக்கென்று ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டார்.

ஆந்திரத்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்து, ‘ராம்பந்து’ எனும் தெலுங்குப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்ச் சூழலிலேயே வளர்ந்தவர். சென்னையில் கல்விகற்றவர், கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் கலைத் திறமைகளை வெளிப்படுத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் தொகுப்பாளராகவும் பங்கேற்று, அதன் பிறகே தமிழ் சினிமாவில் அடியெடுத்துவைத்தார். முதல்முறையாக அவர் கதாநாயகியாக நடித்த ‘நீதானே அவன்’ அவருக்கு எந்த கவனத்தையும் பெற்றுத் தரவில்லை.

2012-ல் வெளியான ‘அட்டக்கத்தி’ பா.இரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரின் அறிமுகப்படம் என்பதோடு, ஐஸ்வர்யா ராஜேஷ் என்னும் திறமைவாய்ந்த நடிகைக்கு முதல் கவனம் பெற்றுத்தந்த படமாகவும் அமைந்தது. அந்தப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தாலும், ஐஸ்வர்யாவின் கதாபாத்திர வடிவமைப்பும் அதில் அவர் தன்னை அழகாக வெளிப்படுத்திய விதமும், வளர்ந்துவரும் நடிகைக்குத் தேவையான கவனத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது.

'பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் விஜய் சேதுபதியுடன்...
'பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் விஜய் சேதுபதியுடன்...

‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களும் வணிக வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவற்றில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக ‘ரம்மி’ படத்தில், பாவாடை தாவணி அணிந்த கிராமத்துப் பெண்ணின் அச்சு அசலான திரைப் பிரதிபலிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழர்களின் மனங்களில் ஆழமான தடம் பதித்தார்.

’காக்கா முட்டை’ படக் காட்சி...
’காக்கா முட்டை’ படக் காட்சி...

இருந்தாலும் மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படமே, ஐஸ்வர்யா ராஜேஷ் யார் என்னும் வீச்சை உலகுக்கு உணர்த்தியது. பல சர்வதேச அங்கீகாரங்களையும் தேசிய விருதையும் வென்ற இந்தப் படத்தில், கணவன் சிறையில் இருக்க இரண்டு பிள்ளைகளின் தாயாகக் குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் குடிசைப்பகுதி வாழ் பெண்ணாக ஐஸ்வர்யாவின் நடிப்பு, நடிகையாக அவருடைய வியத்தகு வீச்சைத் துலக்கமாக உணர்த்தியது. கமர்ஷியல் படங்களில் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய கட்டத்தில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்தது கவனிக்கத்தக்க விஷயம். நாயகி எனும் அந்தஸ்தைவிடவும் கதாபாத்திரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அந்த அணுகுமுறை, வலுவான கதாபாத்திரங்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் கலைஞர் எனும் மரியாதையையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘தர்மதுரை’ படத்தில் நடித்தார், இந்தப் படத்தின் 3 கதாநாயகிகளில் ஒருவராக அரை மணி நேரமே திரையில் தோன்றினாலும், ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரமே பார்வையாளர்களிடம் பெரும் தாக்கம் செலுத்தியது. தன்னம்பிக்கை பொதுநலநோக்கமும் மிக்க கிராமத்து இளம் பெண்ணாக அவருடைய தோற்றப்பொருத்தமும் நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது.

2018-ல் மணி ரத்னம் இயக்கிய ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருடைய திறமைக்குத் தீனி கிடைக்கவில்லை என்றாலும், மணி ரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பது இந்திய அளவில் பல நடிகர்களின் கனவாக இருக்கிறது என்கிற வகையில், ஐஸ்வர்யா ராஜேஷின் திரைவாழ்வில் இந்தப் படத்துக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. தான் இயக்கிய படத்தில் ஐஸ்வர்யாவுக்கு முக்கியமான கதாபாத்திரத்தைக் கொடுக்கத் தவறிய மணி ரத்னம், தான் கதை எழுதி தயாரித்த திரைப்படத்தில் அந்தத் தவறைச் சரிசெய்தார். தனா இயக்கிய ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில், சுதந்திரச் சிந்தனை கொண்ட இளம் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சற்று வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்திருந்தது. அதை மிகவும் ரசிக்கத் தக்கவகையில் திரையில் வெளிப்படுத்தியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தத் திரைப்படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் கிடைக்கும் அந்தப் படத்தை ஐஸ்வர்யாவுக்காகவே பார்க்கலாம்.

’கனா’ திரைப்பட போஸ்டர்
’கனா’ திரைப்பட போஸ்டர்

‘காக்கா முட்டை’க்குப் பிறகு, ஐஸ்வர்யா ராஜேஷின் அசாத்தியத் திறமையை முழுவீச்சுடன் வெளிக்கொணர்ந்த மற்றொரு படம் ‘கனா’. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் எளிய விவசாயிக்குப் பிறந்து சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி வீராங்கனையாக சாதிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கிரிக்கெட் விளையாட்டில், குறிப்பாக சுழற்பந்து வீச்சில் தீவிரமாகப் பயிற்சி எடுத்திருந்தார் ஐஸ்வர்யா. காட்சிகளின் கச்சிதத்தில் ஐஸ்வர்யாவின் உழைப்பும் பயிற்சியும் பளிச்சிட்டன. நாயகியை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டிருந்த இந்தப் படத்தின் வெற்றி, ஐஸ்வர்யாவின் நட்சத்திர மதிப்பை அதிகரித்ததோடு பெண்மையக் கதைகளின் வெற்றிச் சாத்தியங்களையும் விஸ்தரித்தது.

இதே காலகட்டத்தில், கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரமின் ஜோடியாக ‘துருவநட்சத்திரம்’ படத்தில் ஒப்பந்தமானார். அந்தப் படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ஒரு டூயட் பாடலில், விக்ரமுடன் சற்று முதிர்ச்சியான பெண்ணாகப் பரிணமித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை ரசிக்க முடிந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்படம்: ஹேமா கார்த்திக் dreeamcast.com

கதாநாயகியாகவும் கதையின் நாயகியாகவும் பலவகையான கதாபாத்திரங்களில் மாறுபட்ட சூழலில் நடித்து நற்பெயரைப் பெற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பவர் அல்ல. பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்தார். இதில் கிட்டத்தட்ட நாயகனுக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த வேடம் தங்கை கதாபாத்திரத்துக்குத்தான் அமைந்திருந்தது. பாசத்தையும் பகையையும் பரிமாறிய இந்தப் படத்தின் வெற்றிக்கும் ஐஸ்வர்யாவின் நடிப்பு முக்கியப் பங்காற்றியது. தான் நடிக்கும் கதாபாத்திரத்தால், தனக்குக் கிடைக்கக்கூடிய வணிக மதிப்பைக் காட்டிலும் திறமையை வெளிப்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கும் நடிகை அவர் என்பது மீண்டும் நிரூபணமானது.

பிறமொழித் திரையுலகங்களும் ஐஸ்வர்யாவுக்கு சிவப்புக் கம்பளத்தை விரிக்கின்றன. துல்கர் சல்மானுடன் ’ஜோமோண்ட்டே சுவிசேஷங்கள்’, நிவின் பாலியுடன் ‘சகாவு’ என மலையாளத்தில் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார். ‘டாடி’என்னும் இந்தித் திரைப்படத்தில் அர்ஜுன் ராம்பாலுடன் இணைந்து நடித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது மலையாளத்தில் புகழ்பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான ‘பீம்லா நாயக்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இந்திய குடும்ப அமைப்புக்குள் நிலவும் ஆணாதிக்கத்தை தோலுரித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மலையாளப் படத்தின் தமிழ் மறு ஆக்கத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிதுவருகிறார். இது அவருடைய திரைப் பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று உறுதியாக நம்பலாம்.

திரையரங்கில் வெளியாகும் படங்களைத் தாண்டி ஓடிடி தளங்களிலும ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அழுத்தமான தடம் பதித்துவருகிறார். கடந்த ஆண்டு ஓடிடியில் நேரடியாக வெளியான ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தில் அந்நிய தேசத்தில் உயிர்நீத்த தன்னுடைய கணவனின் சடலத்தை மீட்பதற்காகப் போராடும் ஏழைப் பெண் ஆரியநாச்சியாக ஐஸ்வர்யா நடித்திருந்த நடிப்பு அனைவரையும் உலுக்கியது. இதைத் தொடர்ந்து ‘திட்டம் இரண்டு’, சூழலியல் பிரச்சினைகளை கவனப்படுத்திய ‘பூமிகா’ என ஐஸ்வர்யாவின் ஓடிடி பயணம் ஆக்கபூர்வமானதாகவும் வெற்றிகரமாகவும் தொடர்கிறது.

பத்தாண்டுகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகையாக அடைந்திருக்கும் உயரம் அனைவருக்கும் அமையாது. அசாத்திய திறமை, கடுமையான உழைப்பு, நல்ல கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பாங்கு, தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் உயர்வு தாழ்வு பார்க்காத மனநிலை ஆகியவற்றால் அவருக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது.

தமிழகத்திலும் தென்னிந்திய அளவிலும் பல விருதுகளை வென்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தேசிய விருதுகளும் அதைத் தாண்டிய சர்வதேச அங்கீகாரங்களும் காத்திருக்கின்றன. வரும் ஆண்டுகளில் அவர் அவற்றை வென்று தமிழ் சினிமாவுக்கு ரசிகர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in