’ஜனங்களின் கலைஞன்’... சாகாவரக் கலைஞன்!

- ‘சின்ன கலைவாணர்’ விவேக் பிறந்தநாள் பகிர்வு
விவேக்
விவேக்

நம் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை, நாம்தான் ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என்றெல்லாம் பிரித்து வைத்துக்கொண்டிருக்கிறோம். சினிமாவும், அதே ரூட்டைப் போட்டுக்கொண்டுதான், நடிகர் நடிகைகளைப் பயன்படுத்தியது. ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும், சினிமா வளர வளர, புதுப்புதுக் கலைஞர்கள் நமக்கு வந்துகொண்டே இருந்தார்கள்; இன்னமும் வந்துகொண்டே இருப்பார்கள்.

நீண்ட நெடும்பயணம் கொண்ட தமிழ் சினிமாவில் கலைவாணருக்கு இணையாகவும் நாகேஷுக்குப் பொருத்தமாகவும் இரண்டே இரண்டு கலைஞர்களைத்தான் சொன்னார்கள். நாகேஷுக்கு இணையான உடல்மொழிக் கலைஞர் என்று வடிவேலு கொண்டாடப்படுகிறார். அதேபோல், சமூக அவலங்களையும் மாற்றங்களையும் நவீன உலகில் புகுத்திய விவேக்கை, சின்னக் கலைவாணர் என்றே பெருமையுடன் அழைக்கிறோம்.

கடலைமிட்டாய்க்குப் புகழ் பெற்ற கோவில்பட்டிக்குப் பக்கத்தில் பிறந்தவர்தான் விவேகானந்தன். பின்னாளில், இனிப்பு தடவிய காமெடி மிட்டாய்களை மொத்த ரசிகர்களுக்கும் சப்ளை செய்யப்போகிறோம்; திகட்டத் திகட்டக் கொடுக்கப் போகிறோம் என்பதெல்லாம் தெரியாமல்தான், அவருக்கு மிட்டாய் சாப்பிடும் இளமைப்பருவம் இருந்தது. கறார் அப்பா. கனிவு அம்மா. படிப்புதான் முக்கியம் என்று ஊட்டி கான்வென்ட்டில் சேர்த்து படிக்கவைத்தார்கள். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் படிக்கவைத்தார்கள்.

தமிழ் சினிமா ஒவ்வொரு தருணத்திலும் மக்களை ரசித்துச் சிரிக்கவைக்க ஒவொரு கட்டத்திலும் வந்து நம்மை மகிழ்ச்சிப் படுத்திக்கொண்டே இருந்தார்கள். காளி என்.ரத்தினம், கலைவாணர் காலத்தை விடுத்து, ஐம்பதுகளில் இருந்து எடுத்துக் கொண்டால், தங்கவேலு வந்தார். அறுபதுகளில் நாகேஷ் வந்தார். எழுபதுகளில் தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும் வந்தார்கள். எண்பதுகளில் கவுண்டமணியும் செந்திலும் வந்தார்கள். எண்பதுகளின் இறுதிக்கட்டத்திலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலுமாக, காலம் அடுத்தக்கட்டமாக, விவேகானந்தன் என்கிற விவேக்கையும் வடிவேலுவையும் தேர்ந்தெடுத்துத் தயாராக வைத்திருந்தது போல!

கல்லூரிப் படிப்பை முடித்ததும் விவேகானந்தனுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. ‘காக்காசா இருந்தாலும் கவர்மென்ட் உத்தியோகம்’ என்பது பெருமைமிக்கதாகப் பார்க்கப்பட்ட காலம் அது. அப்படியான காலத்தில் அரசுப் பணியில் இருந்துகொண்டே, மெட்ராஸ் ஹியூமர் கிளப்பில் சேர்ந்து ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ செய்தார். இவரின் காமெடியும் மிமிக்ரியும் அனைவரையும் கவர்ந்தன.

கலாகேந்திரா கோவிந்தராஜன் கண்ணில் விவேக் பட்டார். தான் பார்த்து வியந்ததை இயக்குநர் சிகரம் பாலசந்தரின் காதில் போட்டார் கோவிந்தராஜன். பாலசந்தர், “பையனை வரச்சொல்” என்றார். விவேகானந்தன் விவேக் ஆனார். ‘அவள் ஒரு தொடர்கதை’யின் இன்னொரு வெர்ஷனாக சுஹாசினியை வைத்து எடுத்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் விவேக்கையும் ரமேஷ் அரவிந்தையும் அறிமுகப்படுத்தினார். அடுத்து ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திலும் பயன்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் பாலசந்தர் அறிமுகப்படுத்தியவர்களே அதிகம். அதேபோல் அவரின் அறிமுகக்காரர்கள் பலரும் சோடை போனதுமில்லை. விவேக்கும் அப்படித்தான்! 1987-ம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தார். 89-ம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தார். 90-ம் ஆண்டு மூன்று படங்களில் நடித்தார். 91-ம் ஆண்டு ஐந்து படங்களில் நடித்தார். 92 மற்றும் 93-ம் ஆண்டுகளில் பத்துப் பதினைந்து படங்களில் நடித்தார் விவேக்.

அந்தக் காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் தங்கவேலுவோ, நாகேஷோ படம் முழுக்க வருவார்கள். ஜெய்சங்கர் காலத்தில் தேங்காய் சீனிவாசன், சோ என்று கூடவே இருப்பார்கள். கமல், ரஜினி காலத்திலும் அப்படி ஒய்.ஜி.மகேந்திராவோ, ஜனகராஜோ வருவார்கள். விவேக், அந்தக் காலகட்டத்தில் நடித்த ஹீரோக்களுக்கெல்லாம் ஜோடி நாயகனாகவே வலம் வந்தார். அஜித்துடன் நடித்தார். விஜய்யுடன் நடித்தார். விக்ரமுடன், சூர்யாவுடன், பிரசாந்துடன், மாதவனுடன் என அவர் நடிக்காத நடிகர்களே இல்லை. தொண்ணூறுகளில் புதிது புதிதாக வந்த பல இயக்குநர்கள், விவேக்கை தங்கள் படத்தில் பொருத்திக் கொண்டார்கள்.

இன்னும் சில படங்களில், படமெல்லாம் எடுத்துமுடித்துவிட்டு, “படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. என்ன... காமெடிதான் மருந்துக்குக்கூட இல்ல. கொஞ்சம் சேர்க்கமுடியுமா?” என்று தயாரிப்பாளர்கள் சொல்ல... இயக்குநர்கள், விவேக்கை வைத்து ‘காமெடி டிராக்’ செய்து நடுநடுவே சேர்த்ததெல்லாம் நடந்திருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா முதன்முதலாக இயக்கிய ‘வாலி’ படத்தில், அப்படி தனி காமெடி டிராக்கில் புகுந்து விளையாடியிருப்பார். பாலசந்தரின் சிஷ்யர்களான விவேக்கும் இயக்குநர் சரணும் சேர்ந்து செய்த ‘காதல் மன்னன்’ பட காமெடிகளெல்லாம் இன்றைக்கும் ரசிக்கப்படுகின்றன. லிங்குசாமியின் ‘ரன்’ படத்தின் காமெடிகள் குதூகலத்தில் நம்மை ஆழ்த்திவிடும்.

கல்லூரிப் படம் என்றால் முரளி நாயகனாக நடிப்பார். அல்லது வேறு யாரோ ஒரு நடிகர் நடித்தாலும் உடன் சின்னி ஜெயந்த் நடித்திருப்பார். விவேக்கும் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தை நிறையவே செய்திருக்கிறார். தங்கர்பச்சான் தனது முதல் படமான ‘அழகி’ படத்தில், விவேக் செய்து கொடுத்த ‘காமெடி டிராக்’கையும் விவேக் எனும் அன்பாளனையும் என்னிடம் பேசும்போதெல்லாம் புகழ்ந்தும் வியந்துமாகச் சொல்லிக்கொண்டே இருப்பார்.

விவேக்கின் திரைவாழ்வில் திருவள்ளுவரை லோகோவாகக் கொண்டிருக்கும் கவிதாலயாவுக்கு எப்படியொரு பங்கு இருக்கிறதோ அதேபோல் திருவள்ளுவர் கலைக்கூடம் எனும் பெயரில் படங்களைத் தயாரித்து இயக்கிய வி.சேகருக்கும் பங்கு உண்டு. விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து காமெடியில் அதகளம் பண்ணவைத்தார் விவேக்கை! அதுமட்டுமா? விவேக் எனும் ஜாம்பவானையும் வடிவேலு எனும் காமெடி அசுரனையும் இணைத்துச் சேர்த்து அவர் போட்டதெல்லாம் அணுகுண்டு காமெடிகள்!

இப்படி காமெடியில் கலக்கிக்கொண்டே இருந்த விவேக், சமூக அவலங்களையும், தேசத்தின் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளின் உச்சங்களையும் கேலியாகவும் ஜாலியாகவும், ரசனையாகவும் ரகளையாகவும் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வசனங்களும் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின. ‘டேக் டைவர்ஷன்’ எனும் போர்டு நமக்கு சாதாரணமாகத் தெரியும். ஆனால், அதை வைத்துக்கொண்டு திருப்பதிக்கே சென்று கிச்சுகிச்சு லட்டு தந்தவர் விவேக்.

அதனால்தான் ‘ஜனங்களின் கலைஞன்’ என்றும் ‘சின்ன கலைவாணர்’ என்றும் கொண்டாடினார்கள் ரசிகர்கள். ரஜினியுடன் சேர்ந்து ‘சிவாஜி’ படத்திலும் விக்ரமுடனும் பிரகாஷ்ராஜுடனும் சேர்ந்து ‘அந்நியன்’ படத்திலும் விவேக் செய்த காமெடிகள் புது தினுசு!

’சிங்கம்’ படத்தில் விவேக்கின் காமெடி, ‘பேரழகன்’ படத்தில் அவர் செய்த லொள்ளு, “மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு வெளியே பேச்சிட்டீங்க” என அலப்பறையைக் கொடுத்த காமெடி என்று விவேக்கைச் சொல்வதற்கு... அவர் காமெடியை விவரிப்பதற்கு பல கட்டுரைகள் எழுதவேண்டியிருக்கும். அப்துல்கலாம் மீது கொண்ட அன்பையும் மரங்களை நடுவதை வேள்வியாகக் கொண்டு அவர் பங்காற்றியதையும் புத்தகமாகவே எழுதலாம்.

நடிப்புக்காகவும், காமெடிக்காகவும் தமிழக அரசு விருது, ஃபிலிம்ஃபேர் விருது என ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கிறார். விவேக் வாழ்ந்த தெருவுக்கு அவரின் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.

1961-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்த விவேக்கிற்கு இது, 61-வது ஆண்டு. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி மறைந்தார் விவேக். அவர் மறைந்து 17 மாதங்கள் ஆகின்றன.

கமலுடன் விவேக்
கமலுடன் விவேக்

கமல் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட விவேக், அவருடன் நடிக்கவில்லையே என வருந்திக் கொண்டிருந்தார். அதுவும் ‘இந்தியன் 2’வின் மூலம் சாத்தியமாக இருந்தது. ஆனால், அது நிறைவேறாமலே போய்விட்டது. ‘இந்தியன் 2’ படத்தை இயக்குகிற ஷங்கரும் கமல்ஹாசனும் மனது வைத்தால், அந்தப் படம் வெளியாகும் போது, படத்தின் கடைசியிலோ தொடக்கத்திலோ கமலுடன் விவேக் நடித்த காட்சிகளை திரையில் ஒளிபரப்பினால், விவேக் எனும் கலைஞனின் அந்த ஆசையும் பூர்த்தியாகிவிடும்!

மனிதருக்கு பிறப்பும் மரணமும் சகஜம்தான். இயல்புதான். ஆனால் கலைஞர்களுக்கு பிறப்பு மட்டுமே உண்டு. இறப்பென்பதே இல்லை. ‘ஜனங்களின் கலைஞன்’ விவேக்கிற்கும் அப்படித்தான்!

விவேக் பிறந்தநாளில்... நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒரேயொரு மரக்கன்று நட்டு, மரமாக்குவது என முடிவு செய்து செயலாற்றுவோம். அந்த மரங்கள் தரும் நிழல், விவேக்கைப் போலவே லட்சக்கணக்கானோருக்கு இளைப்பாறலைத் தரும். அதுதான் ‘சின்ன கலைவாணருக்கு’ நாம் அடிக்கிற சல்யூட்!

நவம்பர் 19 விவேக் பிறந்த நாள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in