‘இனி அவதார் மட்டுமே’: அடுத்தடுத்த பாகங்களில் தீவிரம் காட்டும் ஜேம்ஸ் கேமரூன்

‘இனி அவதார் மட்டுமே’: அடுத்தடுத்த பாகங்களில் தீவிரம் காட்டும் ஜேம்ஸ் கேமரூன்

அண்மையில் வெளியான அவதார் வரிசையின் இரண்டாவது பாகம், வசூலில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. இந்த வெற்றி கொடுத்த உத்வேகத்தில் அடுத்த பாகத்துக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் அவதார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

அவதார் திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து அதன் அடுத்த பாகமான ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ டிச.16 அன்று வெளியானது. 2009-ல் வெளியான அவதார் திரைப்படம் மகத்தான வெற்றியடைந்ததும், அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அடுத்த வருடமே அவதார் வரிசையின் அடுத்த பாகத்தை அறிவித்தார். 2014-ல் வெளியிட திட்டமிட்டிருந்த அவதார் -2, அதற்கடுத்த பாகத்துக்கான படப்பிடிப்பையும் கோரியதில் ரிலீஸ் ஏற்பாடுகள் 2019-க்கு தள்ளிப்போனது. பின்னர் கரோனா முடக்கத்திலிருந்து ஒரு வழியாக மீண்டு, கடந்தாண்டு இறுதியில் ’அவதார்: தி வே ஆர்ப் வாட்டர்’ வெளியானது.

இந்த அவதார் 2 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த வருடம், உரிய தலைப்போடு அவதார் 3 வெளியாக உள்ளது. அவதார் 3 வரையிலான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த அவதார் 2 மற்றும் அவதார் 3 திரைப்படங்களின் வெற்றியை பொறுத்தே அதற்கடுத்த 4 மற்றும் 5-வது அவதார்களை வெளியிட கேமரூன் முடிவு செய்திருந்தார். இவ்வாறாக அவதார் வரிசையில் ஒட்டுமொத்தமாக 5 பாகங்கள் வெளியாகின்றன.

அண்மையில் வெளியான அவதார் 2 முந்தைய ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் புதிய சாதனைகளை படைத்து வருவதால், 4 மற்றும் 5 பாகங்களுக்கான முடிவை கேமரூன் அறிவித்துள்ளார். அதன்படி கையிலிருக்கும் அவதார் 3 பாகத்தை வெளியிட்டதும் அடுத்த 2 பாகங்களுக்கான பணிகள் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார். இந்த வகையில் 2030 வரை ஜேம்ஸ் கேமரூன், அவதாரின் அடுத்தடுத்த பாகங்களுக்கான பணிகளே மூழ்கடிக்கும். அவதார் 5 பாகங்களையும் முடிக்கும்போது அவருக்கு வயது அநேகமாக 75-ஐ கடந்திருக்கும்.

அவதார்-2 வெளியீட்டை முன்னிட்டு, 2009-ல் வெளியான அவதார் திரைப்படத்தின் மெருகூட்டப்பட்ட டிஜிட்டல் பதிப்பும் முன்னதாக வெளியானது. தொடர்ந்து அவதார் கதையை மையமாக்கொண்டு வீடியோ கேம்ஸ், மெட்டாவெர்ஸ், தீம் பார்க் என பல்வேறு உபாயங்களிலும் அவதார் வரிசை வருமானம் ஈட்டத் தொடங்கியுள்ளது. இந்த ஏற்பாடுகளோடு, மேலும் சில திரைப்படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தை பொறுத்தளவில் இப்போதைக்கு அவதார் வரிசையில் மட்டுமே முழுமூச்சாக இறங்கியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in