மறைந்தார் மான்டி நார்மன்: இந்திய பாணி இசையை ஜேம்ஸ் பாண்ட் தீம் இசையாக்கியவர்!

மான்டி நார்மன்
மான்டி நார்மன்

புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் தீம் இசையை உருவாக்கிய இசைமேதை மான்டி நார்மன் (94), நேற்று (ஜூலை 11) மறைந்தார். அவரது மறைவு குறித்த தகவலை அவர் குறித்த இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அவரது மறைவுக்குத் திரை ரசிகர்களும் இசையுலகினரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

யூதக் குடும்பம்

லண்டனில் உள்ள ஈஸ்ட் எண்ட் பகுதியில் உள்ள ஸ்டெப்னி எனும் இடத்தில் 1928 ஏப்ரல் 4-ல் பிறந்தவர் மான்டி நார்மன், அவரது பெற்றோர் யூதர்கள். தந்தை ஆபிரகாம் நோசெரோவிட்ச், லாட்வியாவிலிருந்து பிரிட்டன் சென்றவர். அவர்கள் வசித்ததும் யூதக் குடியிருப்பில்தான்.

இரண்டாம் உலகப் போரின்போது நார்மனின் குடும்பம் லண்டனிலிருந்து வெளியேறிய நார்மன், சில ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனுக்குத் திரும்பினார். பின்னர் பிரிட்டன் விமானப் படையில் (ராயல் ஏர் ஃபோர்ஸ்) பணியாற்றியவருக்கு இசையில் ஆர்வம் ஏற்பட்டது. பாடகரானார். புகழ்பெற்ற இசைக் குழுக்களில் பாடிவந்தார். பின்னர் இசையமைப்பிலும் ஈடுபட்டார். 1950-களில் லண்டனின் நாடக மேடைகள், இசைக் கச்சேரிகளில் பிரபலமாக இருந்தவர் நார்மன். ‘பல்லாட் ஆஃப் டாக்டர் கிரிப்பென்’ போன்ற மேடை நாடகங்களுக்கு நார்மன் உருவாக்கிய இசை பலரையும் ஈர்த்தது. அப்போது கப்பி புரோக்கோலி எனும் தயாரிப்பாளர் அவரைத் தன் அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார். இயான் ஃப்ளெமிங் எழுதிய ஜேம்ஸ் பாண்ட் நாவல்களின் உரிமத்தை வாங்கியிருப்பதாகவும், அவற்றைத் திரைப்படங்களாக உருவாக்கவிருப்பதாகவும் நார்மனிடம் கூறினார். முதல் படம் ‘டாக்டர் நோ’.

இந்திய இசை

அந்தப் படத்துக்கான தீம் இசையை, தான் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த இந்திய பாணி இசையிலிருந்து உருவாக்கியதாக நார்மன் பின்னாட்களில் தெரிவித்தார். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ஆங்கில எழுத்தாளர் வி.எஸ்.நைப்பால் எழுதிய ‘எ ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ்’ எனும் நாவல் மேடை நாடகமாக உருவாக்கப்பட்டபோது அதற்கு நார்மன் தான் இசையமைத்தார். அதற்காக அவர் உருவாக்கிய ‘குட் சைன், பேட் சைன்’ எனும் பாடலிலிருந்து சில நோட்களை மாற்றி ஜேம்ஸ் பாண்ட் தீம் இசையை அவர் உருவாக்கினார்.

இசை சர்ச்சை

அதேசமயம், ‘டாக்டர் நோ’ திரைப்படத்தில் வந்த இசை, அவர் உருவாக்கித் தந்த அதே இசை அல்ல. தயாரிப்பாளர்களுக்கு நார்மனின் மெட்டு பிடித்திருந்தாலும் அதில் ஏதோ குறைவதாக ஓர் எண்ணம் இருந்தது. இதையடுத்து அந்த இசைக்கு ஜாஸ் வடிவம் தருமாறு ஜான் பேர்ரி எனும் இளம் இசைக் கலைஞரிடம் கேட்டுக்கொண்டனர். அவர் மேம்படுத்தித் தந்த வடிவம்தான் அந்தத் திரைப்படத்தில் தொடங்கி, எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் இடம்பெற்றது. (இன்றுவரை பல இசையமைப்பாளர்களால் நகலெடுக்கப்படும் இசைக்கோவை அது. ரஜினிக்கு தேவா உருவாக்கித் தந்த தீம் இசை ஜேம்ஸ் பாண்ட் தீம் இசைதான்!) அதன் பின்னர் 11 ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு ஜான் பேர்ரிதான் இசையமைத்தார்.

ஜான் பேர்ரி
ஜான் பேர்ரி

மான்டி நார்மன் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. மேடை நாடகங்களில்தான் அதிகம் ஈடுபாடு காட்டினார். ஓரிரண்டு தொலைக்காட்சித் தொடர்களுக்கும் இசையமைத்தார்.

அதேசமயம், “ஜேம்ஸ் பாண்ட் தீம் இசையை உருவாக்கியது நான் தான்” என்று பின்னாட்களில் ஜான் பேர்ரி கூறியது சர்ச்சையானது. இதையடுத்து நார்மன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சர்ச்சைகளுக்கு இடையிலும் அவருக்குப் பெரும் தொகை ராயல்டியாகச் சென்றது. 1976 முதல் 1999 வரை மட்டும் அவருக்கு 4,85,000 யூரோக்கள் ராயல்டியாகக் கிடைத்தது. இந்திய மதிப்பில் 3.8 கோடி ரூபாய்.

ஜேம்ஸ் பாண்டின் மர்மத் தன்மை, பாலியல் வேட்கை, இரக்கமற்ற குணம் என எல்லாவற்றையும் சில இசை நோட்களில் கொண்டுவந்ததில் தனக்குப் பெருமை என ஒரு பேட்டியில் நார்மன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in