ஒரே வருடத்தில் 15 படங்கள்: ஜெயித்துக்காட்டிய ஜெய்சங்கர்!

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான லாபம் தந்த படங்கள்
ஒரே வருடத்தில் 15 படங்கள்: ஜெயித்துக்காட்டிய ஜெய்சங்கர்!

வெள்ளிக்கிழமை அன்று படம் வெளியாகும் வழக்கம் எப்போதிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் படங்கள் ரிலீஸாகும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. ஓடிடி-யில் கூட சினிமாக்களோ, வெப் சீரிஸோ வெள்ளிக்கிழமைகளில்தான் வெளியிடப்படுகின்றன. தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரைக்கும் ‘வெள்ளிக்கிழமை நாயகன்’ என்று எல்லோரும் சொல்லும் விதமாக வலம் வந்த நடிகர் ஜெய்சங்கர்தான்.

இப்போதுதான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் படங்கள் வெளியிடப்படுகின்றன. அப்போதெல்லாம் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையோ இரண்டு வெள்ளிக்கிழமையோதான் படங்கள் வெளியிடப்படும். சில சமயங்களில், இரண்டு மாதங்களில் ஒரு வெள்ளிக்கிழமையில் கூட படம் வெளியாகும். அப்படி வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் படப்பட்டியலில், ஜெய்சங்கரின் படம் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும்.

‘இரவும் பகலும்’ படத்தில், இயக்குநர் ஜோஸப் தளியத் மூலம் அறிமுகமான ஜெய்சங்கர், தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ், ஏவி.எம் மாதிரியான மிகப்பெரிய நிறுவனங்களில் நடித்தாலும் புதிய தயாரிப்பாளர், புதிய இயக்குநர் என்று வருவோருக்கு உடனே கால்ஷீட் தருவதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார்.

ஜெய்சங்கரிடம் உள்ள பழக்கம், தயாரிப்பு நிறுவனம் கொடுத்த செக் ‘பவுன்ஸ்’ ஆகிவிட்டால், அந்த நிறுவனத்துக்கு போன் போட்டு, காச்மூச்சென்றெல்லாம் கத்தமாட்டார். ‘சரி, பணம் இல்லாம கஷ்டப்படுறாங்க போல இருக்கு’ என்று அவர்பாட்டுக்கு எதுவுமே நடக்காதது போல், மொத்தமாக நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்.

‘சம்பளமும் அதிகம் கேட்கமாட்டார்; சம்பள பாக்கி வைத்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்’ என்று ஜெய்சங்கரின் குணத்தை திரையுலகமே கொண்டாடியது.

1972-ம் ஆண்டில், ஜெய்சங்கர் நடித்து வெளியான படங்கள் மொத்தம் 15. இவற்றில், பல படங்களின் இயக்குநர்கள் புதிது. தயாரிப்பாளர்கள் புதிது. ‘மினிமம் கியாரன்டி’ படங்கள் என்று திரையுலகில் ஒரு வார்த்தை ரொம்பவே பிரபலம். அதாவது, எவ்வளவு மோசமான, சுமாரான படமாக இருந்தாலும் ஓரளவேனும் ஜெயித்துவிடும். போட்ட முதலையும் அதற்குத் தக்க லாபத்தையும் கொடுத்துவிடும். அப்படி ஜெய்சங்கரை வைத்து படங்களை எடுத்த எந்தத் தயாரிப்பாளரும் கையைச் சுட்டுக்கொண்டதில்லை என்பதுதான் திரை வரலாறு.

வி.டி.தியாகராஜன் இயக்கத்தில், ‘அவசர கல்யாணம்’ என்ற படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். வாணிஸ்ரீ நாயகியாக நடித்த இந்தப் படத்துக்கு டி.ஆர்.பாப்பா இசை. ஏகப்பட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வி.சி.குகநாதனின் வசனத்தில், ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி முதலானோர் நடித்த ‘கனிமுத்து பாப்பா’ இந்த வருடத்தில்தான் வந்தது.

இன்னொரு விஷயம்... எஸ்.பி.முத்துராமன் இயக்கிய முதல் படம் இதுதான்! ஆக எஸ்.பி.எம் திரையுலகில் இயக்குநராகி 2022-ம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் படத்தில்தான் ’ராதையின் நெஞ்சமே’ எனும் புகழ்பெற்ற பாடல் இடம்பெற்றது.

ஒளிப்பதிவு மேதை என்று போற்றப்படும் எம்.கர்ணன் இயக்கினார் என்றாலே அதில் ஜெய்சங்கர்தான் பெரும்பாலும் நாயகனாக நடிப்பார். 1972-ல் இவரின் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்து ‘கங்கா’, ‘ஜக்கம்மா’ என இரண்டு படங்கள் வெளிவந்தன. ‘கங்கா’வில் நடிகை மீனாவின் அம்மா ராஜ்கோகிலா நாயகியாக நடித்தார். ‘ஜக்கம்மா’வில் சாவித்திரி, உஷா நந்தினி நடித்தார்கள். இவரின் படங்கள் ‘கெளபாய்’ ரக படங்களாக அமைந்திருக்கும். ஆங்கிலப் பட பாணியில் கதையும் களமும் அமைக்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே ‘தென்னக ஜேம்ஸ்பாண்ட்’ என்ற பட்டத்துடன் ‘கெளபாய்’ பட்டமும் சேர்ந்துகொண்டது மக்கள் கலைஞருக்கு!

’கருந்தேள் கண்ணாயிரம்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெய்சங்கர், மனோகர், லட்சுமி, தேங்காய் சீனிவாசன் முதலானோர் நடிக்க, ஷ்யாம் பிலிப்ஸ் என்பவர் இசையமைக்க, ராமசுந்தரம் இயக்கினார். மே 17-ம் தேதி வெளியானது.

ஐ.என்.மூர்த்தி இயக்கத்தில், ‘காதலிக்க வாங்க’ என்ற படம், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், கவிதா முதலானோர் நடிப்பில், ஜே.வி.ராகவா நாயுடு இசையில் வெளியானது. இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியவர் ‘கல்கண்டு’ புகழ் எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான தமிழ்வாணன்.

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், லட்சுமி, நாகேஷ், வி.கே.ராமசாமி முதலானோர் ஜெய்சங்கருடன் நடிக்க, மெல்லிசை மன்னரின் இசையில், மார்ச் 3-ம் தேதி வெளியானது ‘நவாப் நாற்காலி’. காமெடிக்கும் த்ரில்லருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்தப் படம், பல முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருக்கிறது.

விஜய நாராயணன் என்பவரின் இயக்கத்தில், ஜெய்சங்கர் - லட்சுமி நடிப்பில் சங்கர் கணேஷ் இசையில் ஏப்ரல் 13-ம் தேதி வெளியானது ‘பொன்மகள் வந்தாள்’. டி.ஆர்.ரகுநாத் இயக்கத்தில், வி.குமாரின் இசையில், விஜயலலிதா உடன் நடிக்க, நவம்பர் 17-ம் தேதி ‘மாப்பிள்ளை அழைப்பு’ எனும் படம் வெளியானது. இவையெல்லாமே குறைந்த பட்ஜெட் படங்கள். அப்படி குறைவான பட்ஜெட்டில் வெளியாகி, நிறைவான வசூலைக் கொடுத்தன.

லட்சுமி நாயகியாக உடன் நடிக்க, ஜனவரி 14-ம் தேதி, டி.யோகானந்த் இயக்கத்தில், ‘ராணி யார் குழந்தை?’ என்ற படம் வெளியானது. டி.வி.ராஜூ இசையமைத்தார். மீண்டும் ஐ.என்.மூர்த்தி இயக்கத்தில், ஜெயா கெளசல்யா உடன் நடிக்க, ஜெய்சங்கரின் ‘வரவேற்பு’ வெளியானது. மற்ற படங்களைவிட இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

செப்டம்பர் 14-ம் தேதி ஒளிப்பதிவு மேதை கர்ணனின் ‘ஜக்கம்மா’ வெளியானது. எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார். அக்டோபர் 1-ம் தேதி என்.எஸ்.மணியம் இயக்கத்தில், நடிகை பாரதி ஜோடியாக நடிக்க, ‘உனக்கும் எனக்கும்’ என்ற படம் வெளியானது. வி.குமார் இசையமைத்தார்.

தேவன் என்பவரின் இயக்கத்தில், டிசம்பர் 22-ம் தேதி, லட்சுமியுடன் ஜோடி சேர்ந்த ‘ஆசீர்வாதம்’ படம் வெளியானது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசை. முன்னதாக பிப்ரவரி 18-ம் தேதி, எச்.எஸ்.வேணு இயக்கத்தில் சங்கர் - கணேஷ் இசையில், விஜயலலிதாவுடன் நடித்த ‘சவாலுக்கு சவால்’ படம் வெளியானது. மீண்டும் ஐ.என்.மூர்த்தி இயக்கத்தில் ஸ்ரீவித்யா உடன் நடிக்க, வி.குமாரின் இசையில் ’டில்லி டூ மெட்ராஸ்’ படத்திலும் நடித்தார் ஜெய்சங்கர்.

இப்படியாக 1972-ம் ஆண்டில், ஜெய்சங்கர் நடித்த 15 படங்கள் வெளியாகின. இதில் பல தயாரிப்பாளர்கள் புதியவர்கள். பல இயக்குநர்கள் புதியவர்கள். நாயகிகளும் அப்படியே. ஆனாலும் எந்த பந்தாவும் இல்லாமல், எல்லோரிடமும் ‘ஹாய்’ சொல்லி நட்புடன் பழகிய ஜெய்சங்கரைப் புதிய புதிய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தேடித்தேடி வந்தார்கள்.

பட்ஜெட் சிறிதோ பெரிதோ.. அவை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் ரசிகனுக்கில்லை. குறைந்த செலவில், நிறைவான, கலகலவென படங்களைப் பார்க்கவே ரசிகர்கள் விரும்பினார்கள்.

இதற்கெல்லாம் சாட்சியாகத்தான் ஒரே ஆண்டில் ஒரு நடிகர் இத்தனைப் படங்களில் நடிக்க முடிந்தது. ஜெய்சங்கருக்கென்று தனி ‘மார்க்கெட் வேல்யூ’ இருந்ததால்தான் இந்தப் படங்கள் நன்றாக ஓடின என்பதைத் தனியே சொல்ல வேண்டுமா என்ன?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in