
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் திடீரென சந்தித்து பேசியுள்ளனர்.
’அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 169-வது படமாக நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க - ஐஷ்வர்யா ராயிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. இது தவிர்த்து நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சதா, சுனைனா என மற்ற நடிகைகளும் நடிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நடக்கும் அதே செட்டில் நடிகர் ஷாருக்கானுடைய ‘ஜவான்’ படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இயக்குநர் அட்லி பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஜவான்’. ஷாருக்கான், நயன்தாரா, யோகிபாபு என பலரும் இதில் நடிக்கின்றனர். மும்பையில் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் நட்பிற்காக சம்பளம் எதுவும் வாங்காமல், ஒரு நாள் ஷாருக்கானுடன் நடித்து கொடுத்திருக்கிறார்.
‘ஜவான்’, ‘ஜெயிலர்’ என இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே செட்டில் நடந்து கொண்டிருப்பதால் ரஜினி மற்றும் ஷாருக்கான் இருவரும் சந்தித்து இருக்கிறார்கள். சில நிமிடங்கள் நீண்ட இந்த சந்திப்பில் பொதுவான நலம் விசாரிப்பு மற்றும் இருவரும் தங்களுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசி இருக்கிறார்கள். இருவரும் சந்தித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.