
இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஸ்கூட்டர் பரிசளித்துள்ளார்.
’பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர் ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக பெங்களூருவில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜாக்கி ஷெராஃப்புக்கான அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
இப்போது ஜாக்கி ஷெராஃப் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு ஸ்கூட்டர் பரிசளித்து இருக்கிறார். இதனை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நெல்சன். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இந்த க்யூட்டான சர்ப்ரைஸூக்கும் உங்களது அன்புக்கும் நன்றி சார்’ என்று ஜாக்கி ஷெராஃபை டேக் செய்துள்ளார்.
’ஜெயிலர்’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் தனது போர்ஷனை முடித்து கொடுத்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.