வீட்டில் யானை தந்தம் சிக்கிய விவகாரம்: மோகன்லாலுக்கு எதிரான வழக்கில் முக்கிய உத்தரவு

வீட்டில் யானை தந்தம் சிக்கிய விவகாரம்: மோகன்லாலுக்கு எதிரான வழக்கில் முக்கிய உத்தரவு

நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கில் பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை, கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் மோகன்லாலின் கொச்சி, சென்னை, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் கொச்சி வீட்டிலிருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. தந்தங்களை வீட்டில் வைத்திருப்பதற்கு வனத்துறையின் சிறப்பு அனுமதி தேவை. முறையான அனுமதி பெறாததால் இது தொடர்பாக மோகன்லால் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு பெரும்பாவூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் மோகன்லால் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கேரள அரசு தீர்மானித்ததை அடுத்து அரசு சார்பில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூ என்ற இருவர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த உயர் நீதிமன்றம், பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூவின் வாதங்களை கேட்ட பின்தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். 3 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in