‘இது என் வாழ்நாளின் பொக்கிஷம்' - பிரபுதேவாவை ஆட்டுவித்த ஆனந்தத்தில் சாண்டி!

‘இது என் வாழ்நாளின் பொக்கிஷம்' - பிரபுதேவாவை ஆட்டுவித்த ஆனந்தத்தில் சாண்டி!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவை ஒரு நடன இயக்குநராக இயக்கிய சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார் சாண்டி மாஸ்டர்.

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபுதேவா, பின்னாட்களில் இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். பாலிவுட்டிலும் கொடி நாட்டியவர். அவரது நடனம் இப்போது வரை பலருக்கும் ஊக்க சக்தியாகத் திகழ்கிறது. அத்தனைப் பெருமைக்குரிய பிரபுதேவாவுக்கு நடனம் அமைத்தது தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என நடன இயக்குநர் சாண்டி எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கலா மாஸ்டரின் சிஷ்யரான சாண்டி 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவில் ஜோடிகளுக்கு நடனம் அமைத்தார். பின்பு 'காலா', 'பாரிஸ் ஜெயராஜ்' உள்ளிட்ட பல படங்களில் அவரது நடனம் பேசப்பட்டது. இது தவிர தனி ஆல்பங்களுக்கும் நடனம் அமைத்திருக்கிறார் சாண்டி.

இந்நிலையில். இயக்குநர் அன்பு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் 'ரேக்ளா' படத்திற்கு சாண்டி நடனம் அமைத்திருக்கிறார். இதுகுறித்த தனது இன்ஸ்டா பதிவில், 'என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எந்த அளவுக்கு நான் பிரபுதேவாவை நேசிக்கிறேன்; அவரது திறமையைக் கண்டு வியக்கிறேன் என்பது பற்றி தெரியும். சிறு வயதில் அவரது நடனம் பார்த்து வளர்ந்துதான் இப்போது சினிமாவில் எனக்கென்று ஒரு இடத்தில் இருக்கிறேன். இந்திய சினிமாவின் லெஜெண்ட் எனக் கருதப்படும் அவரை நடனத்தில் இயக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய கனவு நனவாகும் என்று நினைக்கவில்லை. இந்த வாய்ப்புக்காக நான் ஏங்கி இருக்கிறேன். பிரார்த்தனை செய்திருக்கிறேன். இந்த இடத்தை அடைவதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக பிரபுதேவா மாஸ்டருக்கு நன்றி. இது என் வாழ்நாளின் பொக்கிஷம். நீங்கள் எனக்கு கொடுத்த ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு எப்போதும் நான் கடமைப்பட்டவன். அதன்படி நிச்சயம் நடக்க நான் முயல்வேன்’ என சாண்டி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ரசிகர்களாகிய உங்களுக்கு நாங்கள் இந்த நடனத்தை ட்ரீட்டாகக் கொடுத்துள்ளோம். சீக்கிரம் 'ரேக்ளா' படத்தில் இதைப் பார்க்க உள்ளீர்கள்' எனத் தெரிவித்திருக்கும் சாண்டி, பிரபுதேவாவை இயக்கும் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.

Related Stories

No stories found.