இன்று நான் இப்படியொரு மனிதனாக இருப்பதே என் மனைவியால் தான் - ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்!

இன்று நான் இப்படியொரு மனிதனாக இருப்பதே என் மனைவியால் தான் - ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்!

இன்று நான் இப்படியொரு மனிதனாக இருக்கக் காரணமே என் மனைவிதான் என ‘வீட்ல விசேஷம்’ பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி உருக்கமாகப் பேசினார்.

ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'வீட்ல விசேஷம்'. இந்தப் படத்தின் விழா மேடையில் ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய மனைவி, குழந்தைகள் பற்றி மனம் திறந்து பேசினார்.

அந்த விழாவில் பாலாஜி பேசியது இதுதான்: "எனக்கு திருமணம் நடக்கும் போது என்னுடைய வயது 21. என்னை விட என் மனைவி இரண்டு வயது சிறியவர். எங்கள் இருவருக்கும் கணவன், மனைவியாக எப்படிக் குடும்ப வாழ்க்கையை நடத்துவது என்று அந்த வயதில் ஒன்றுமே தெரியவில்லை. இதனால், நிறைய பிரச்சினைகளை இருவரும் சேர்ந்தே சந்தித்திருக்கிறோம். பல சமயங்களில் நான் நல்ல கணவனாக நடந்து கொண்டது கிடையாது. எப்படி நடந்து கொள்வது என்பதும் தெரியாது. நிறையத் தவறுகள் செய்திருக்கிறேன்.

அந்தத் தவறுகளில் இருந்து நிறையக் கற்றுக்கொண்டு முன்பை விட சிறந்த மனிதனாக இருக்கிறேன். அதற்கு முழுக் காரணம், என் மனைவி தான். என் வெற்றிகள் எல்லாவற்றையும் என் மனைவிக்கே சமர்ப்பிக்கிறேன். போகும் இடங்களில் எல்லாம் என் அம்மாவைப் பற்றியே பேசுகிறேன். தன்னைப் பற்றி பேசுவதே இல்லையே என்றுகூட அவருக்கு தோன்றி இருக்கலாம்.

இந்த மேடை தான் அவரைப் பற்றி பேசுவதற்கு சரியான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் இன்று நான் இப்படி ஒரு மனிதனாக இருப்பதே அவரால் தான். என்னுடைய திறமைகள் எல்லாம் நிச்சயம் என் அம்மாவிடம் இருந்து வந்தவை தான். ஆனால், முன்பிருந்ததை போல இல்லாமல் தெளிவாக நிதானமாக இருக்கக் காரணம் என் மனைவி.

எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் தெரியாது. அது எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம். 'ஹோட்டலுக்கு வந்தால் தைரியமா ஃபேன் ஆஃப் பண்ணச் சொல்கிறாய்! ஆர்.ஜே. பாலாஜி என்ற திமிரா?' என்று கேட்பார்கள். அவர்கள் இது ஆக வேண்டும், அது ஆக வேண்டும் என்றெல்லாம் எண்ணம் இல்லை. ஆனால், அவர்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.

இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்து, அவர்களுக்கு விவரம் தெரியும்போது இரண்டு நல்ல பிள்ளைகளை கொடுத்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு வேண்டும். அவர்களும் அப்படி தான் வளர்ந்து வருகிறார்கள். இதுவரை என் குடும்பத்திற்கு நன்றி சொன்னதே கிடையாது. இந்த தருணத்தை அதற்கு பயன்படுத்தி கொள்கிறேன்."

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in