உலக அழகி ‘நந்தினி’ - ஐஸ்வர்யா ராய்க்குப் பிறந்தநாள்!

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

கர்வம் கொடுக்கக் கூடிய விஷயங்களில் காசும் பணமும் கூட இரண்டாம் பட்சம்தான். இயற்கையாகத் திகழக்கூடிய, கிடைக்கக்கூடிய அழகுதான், ‘நான் எவ்ளோ அழகு தெரியுமா?’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம். தன் அழகை உள்ளூரில் கொண்டாடுவதையெல்லாம் கடந்து, உலகமே அழகி என்று போற்றிக் கொண்டாடப்பட்டு பரிசு வென்ற பேரழகி ஐஸ்வர்யா ராய் என்கிற பெயரும் முகமும் நமக்குத் தெரியத் தொடங்கிய நாள் முதல் இன்றைக்கு வரை, அப்படியே இருக்கிறார்; அதே அழகுடன் இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

கர்நாடகம் பூர்விகம். மங்களூருக்கு அருகே சிறிய ஊர்தான் சொந்த ஊர். இன்றைக்கு மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவே நேசிக்கிற ஐஸ்வர்யா ராய், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே மும்பைக்கு வந்துவிட்டது குடும்பம். அங்குதான் படித்தார்; வளர்ந்தார்.

பின்னாளில், ‘உலக அழகி’ என்று கொண்டாடப்படுவோம் என்றெல்லாம் அறிந்திருக்கவில்லை ஐஸ்வர்யா ராய். அந்தக் கண்களும் சிரிப்பும் இன்னும் வசீகரித்தன.

கர்நாடகா, மும்பை என்று அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக வளர்ந்தவரை திரைக்குக் கொண்டுவந்த பெருமை நம்மூர் மணிரத்னத்துக்குச் சேரும். தமிழில்தான் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார். ‘இருவர்’ என்கிற படத்தில், அற்புதமான, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தைச் செய்திருந்தார்.

இன்றைக்கு ‘பயோபிக்’ என்றொரு வார்த்தை மிகப்பிரபலமாக இருக்கிறது. ஆனால் அன்றைக்கே எம்ஜிஆரையும் கலைஞரையும் ஜெயலலிதாவையும் வைத்துக்கொண்டு கதை பண்ணினார் மணிரத்னம். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். அவருக்குள்ளிருந்த நடிப்புத் திறமையும் பளிச்சிட்டது அங்கே!

1997-ம் ஆண்டு தொடங்கிய திரைப்பயணம், கடந்த 25 வருடங்களாகப் பட்டொளி வீசி இனிதே பறந்துகொண்டிருக்கிறது. அடுத்து இந்திப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ’அவுர் பியார் ஹோகயா’ என்ற அந்தப் படம் ஐஸ்வர்யா ராய்க்கு ரொம்பவே பேர் வாங்கிக் கொடுத்தது.

1998-ம் ஆண்டு, பிரபல டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜ் சகோதரர்கள் தயாரிக்க, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘ஜீன்ஸ்’ வெளியானது. இரண்டு பிரசாந்த், இரண்டு நாசர் என்று கதைப்படியும் இரண்டு ஐஸ்வர்யா ராய் என்று டிராமாப்படியும் நடித்து பிரமிக்கவைத்தார். அதே வருடத்தில், ’ஹம் தில் தே சுகே சனம்’ என்ற இந்திப் படத்தில் நடித்தார். ரசிகர்கள் பெருமளவில் ஐஸ்வர்யா ராயைக்கொண்டாடினார்கள். அவரின் நடிப்புத் திறமையைப் பத்திரிகைகள் பாராட்டின. ஃபிலிம்பேர் விருது கிடைத்தது அவருக்கு!

2000-வது ஆண்டில், இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித், மம்முட்டி, அப்பாஸ், தபு முதலானோருடன் நடித்தார். அவரின் கேரக்டர் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தன் சிறந்த நடிப்பை வழங்கினார் ஐஸ்வர்யா ராய்.

இதைத் தொடர்ந்து இந்திப் படங்களில் மிகப்பெரிய நாயகியாக வலம் வந்தார். சல்மான் கான் முதலான பெரிய ஹீரோக்களுடன் நடித்தார். அழகை வைத்துக்கொண்டு சும்மா வந்துபோகிற கதாபாத்திரங்களை மட்டும் ஏற்காமல், தன் நடிப்பை உணர்த்தும் படங்களாகவும் இருக்கிறதா என்பதைக் கவனித்துத் தேர்ந்தெடுத்ததுதான் ஐஸ்வர்யா ராயின் வெற்றி ரகசியம்!

இந்திப் படங்களில் எல்லா நடிகர்களுடனும் வலம் வந்தார். வங்கப் படத்திலும் நடித்தார். எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியை உள்வாங்கிக்கொண்டு, அவற்றைத் தன் முகத்திலும் கண்களிலும் பிரதிபலிக்கிற தன்மையைக் கண்டு வியக்காத இயக்குநர்களே இல்லை.

’ஜோதா அக்பர்’ படத்தில் அவரின் நடிப்புக்கு எல்லா மொழிகளிலும் பாராட்டுகள் குவிந்தன. ‘தி லாஸ்ட் லிஜின்’ எனும் ஆங்கிலப் படத்திலும் நடித்து அசத்தினார். நடுவே இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மகன் அபிஷேக்குடன் நடித்தபோது காதல் மலர, இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

‘தேவ்தாஸ்’ படத்தில் அவரின் நடிப்பும் அழகும் ரொம்பவே பேசப்பட்டன. விருதுகளும் குவிந்தன. ’’தமிழ்ப் படத்தில் நடிக்க மணிரத்னம் சார் எப்போது அழைத்தாலும் நான் நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன்’’ என்று குருவின் மீது மாறா அன்பு கொண்டிருக்கிற ஐஸ்வர்யா ராயை மீண்டும் ‘ராவணன்’ படத்தில் பயன்படுத்திக்கொண்டார் மணிரத்னம்.

அதேபோல், ‘ஜீன்ஸ்’ படத்துக்குப் பிறகு, ‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயைப் பயன்படுத்தினார் ஷங்கர். ’’ரஜினியுடன் நடித்தது பெருமையாக இருக்கிறது’’ என்று ஐஸ்வர்யா ராய் சொன்னார். ‘’ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது எனக்கும் பெருமையாக இருக்கிறது. என் இனிய நண்பர் அமிதாப்ஜியின் மருமகளுடன் நடித்தேன் என்பதில் கூடுதல் பெருமை எனக்கு’’ என்று ரஜினி நெகிழ்ந்தார்.

தமிழ் சினிமாவின் மாபெரும் கனவாக இருந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எம்ஜிஆர் எடுக்க முடியாமல் கைவிட்டார். கமலும் எடுக்க முடியாமல் தவித்தார். மணிரத்னம், மாபெரும் கனவை சாத்தியமாக்கினார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான நந்தினி எனும் கேரக்டரை ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கினார். சோழ தேசத்து நந்தினியின் அழகையும் திறனையும் தன் நடிப்பால் கொண்டு வந்து அசத்தியெடுத்தார். பார்த்தவர்கள் அனைவருமே நந்தினியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், வங்காளம் என்று எல்லா மொழிகளிலும் தனித்துவத்துடனும் மிகப்பெரிய மார்க்கெட் வேல்யூவுடனும் திகழும் ஐஸ்வர்யா ராய், அதே பண்புடனும் அடக்கமான குணத்துடனும் இனிமையாகப் பழகிக்கொண்டிருக்கிறார் என மணிரத்னம் முதலான பெரிய பெரிய இயக்குநர்கள் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

1973 நவம்பர் 1-ம் தேதி பிறந்த ‘நந்தினி’க்கு... ஐஸ்வர்யா ராய்க்கு இன்று பிறந்தநாள். பிரபஞ்ச அழகியை வாழ்த்துவோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in