பிரபல ஹீரோவை தனியாக சந்திக்கச் சொன்ன தயாரிப்பாளர்: நடிகை பகீர்
தயாரிப்பாளர் சொன்ன ஹீரோவை சந்திக்க மறுத்ததால், பட வாய்ப்பை இழந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில், காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, ஜோடி உட்பட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகை இஷா கோபிகர். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சிவகார்த்திகேயனின் ’அயலான்’ படத்தில் நடித்துள்ளார். அவர், ஹீரோ ஒருவரை அனுசரித்து செல்லாததால், ஒரு படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், `கடந்த இரண்டாயிரமாவது ஆண்டின் நடுவில் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னை அழைத்தார். புதிய படத்துக்காகப் பேசினார். அப்போது ஒரு ஹீரோவின் பெயரைக் குறிப்பிட்டு, அவரிடம் நீங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றார். அவர் சொன்னது எனக்குப் புரியாமல் அந்த ஹீரோவுக்கு ஃபோன் செய்தேன். அவர், என்னைத் தனியாக வந்து சந்திக்குமாறு சொன்னார். எனக்குப் புரிந்துவிட்டது. நான் அந்த தயாரிப்பாளரை அழைத்து, என் திறமையை மட்டும் நம்பி இங்கு வந்துள்ளேன். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றேன். உடனே அந்தப் படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள்' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இஷா கோபிகர் வெளியிட்டுள்ள இந்த தகவல் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.