
தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளதற்கு தமிழ் நடிகர்களின் சம்பளம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவின் ஆதிக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெலுங்கு சினிமாவுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகின்றன. பாகுபலி படங்களுக்குப் பிறகு புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களின் மெகா வெற்றி இதற்கு காரணம். இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள், மற்ற மொழி படங்களையும் தயாரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழ் ஹீரோக்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிக்கிறார். விஜய் நடிக்கும் ’வாரிசு’ படத்தையும் இவர்தான் தயாரிக்கிறார். தனுஷ் நடிக்கும் ’வாத்தி’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ’பிரின்ஸ்’ படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிறுவனங்கள் தமிழ் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது வாரிசு படத்துக்கு விஜய் சம்பளம் 100 கோடி என்கிறார்கள். ஷங்கர் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு 8 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். குணசித்திர வேடங்களில் நடிக்கும் சமுத்திரக்கனி ஒரு நாளுக்கு 4 லட்சம் கேட்கிறாராம். இதனால் தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களும் குணசித்திர நடிகர்களும் தங்கள் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளனர். இதற்கு பல தயாரிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். பிரச்சினை இங்கிருந்துதான் முதலில் தொடங்கியது என்கிறார்கள்.
பிரபல ஹீரோ மகேஷ்பாபு, 65 கோடி சம்பளம் வேண்டும் என்கிறாராம். பிரபாஸ் ’பான் இந்தியா’ ஸ்டார் படத்தோடு 150 கோடி வாங்குகிறாராம். அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோரும் சம்பளத்தை அப்படியே உயர்த்தி விட்டர்களாம். ஆனால் சமீபத்தில் அங்கு அதிக பட்ஜெட்டில் உருவான படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’, பிரின்ஸ் மகேஷ்பாபுவின் ’சர்க்காரு வாரி பாட்டா’, ராமின் ’தி வாரியர்’ உட்பட பல படங்களை இதற்கு உதாரணம் சொல்கிறார்கள்.
இதனால்தான் இதற்கு ஒரு தீர்வைக் கண்டுவிட்டு தயாரிப்பு வேலைகளைப் பார்க்கலாம் என்று ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்கிறது டோலிவுட்!