பொதுவெளியில் அரைகுறை ஆடையுடன் நடமாடியதற்காக பிரபல பிக் பாஸ் நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.
இந்தி பிக் பாஸ் ஓடிடியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவித். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரக்கூடிய இவர் வித்தியாசமாக ஆடை அணிவதற்குப் புகழ் பெற்றவர். துணியை கிழித்து அணிவது, கீபோர்டால் உடை, நோட்டுப்புத்தகங்கள், காலிஃபிளவர் கொண்டு உடை அணிவது என இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் வித்தியாசமான ஆடைகளைக் கொண்டு எடுக்கப்பட்ட கவர்ச்சியான ஃபோட்டோஷூட்டால் நிரம்பி வழிகிறது. இதற்காக இணையவாசிகள் இவரை கிண்டல் செய்வதும் உண்டு.
சமீபத்தில் கூட, இந்தியில் வெளியான ’பூல் பூலையா’ படத்தில் இடம் பெற்ற ராஜ்பால் யாதவின் நகைச்சுவை கதாபாத்திரமான ’சோட் பண்டிட்’டை அவர் மறு உருவாக்கம் செய்து அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மத அடையாளங்களை புண்படுத்துகிறார் எனச் சொல்லி இவர் மீது சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், பொதுவெளியில் இவர் அரைகுறை ஆடையுடன் நடமாடுகிறார் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பை போலீஸார் நடிகை உர்ஃபி ஜாவித்தை கைது செய்யும்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், இந்த வீடியோ பொய்யானது என்றும் இந்த வீடியோவில் வரும் போலீஸார் ஏற்கெனவே சில படங்களில் பார்த்துள்ளதாகவும் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் உர்ஃபியை கைது செய்வதற்கான அரெஸ்ட் வாரண்ட் இல்லை எனவும் கூறி வருகின்றனர். இதுகுறித்து, உர்ஃபி இன்னும் விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.