
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க பிரபல ஹீரோயினிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா, பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சினை என்றும் படம் நின்றுவிட்டது என்றும் கூறப்பட்டது. இதை மறுத்திருந்த சூர்யா தரப்பு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறியிருந்தது. ஆனால், இன்னும் தொடங்கப்படவில்லை.
இதற்கிடையே சூர்யா அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருந்தார். இப்போது இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் 'ராதே ஷ்யாம்' உட்பட பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படக்குழுவினர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.