‘பொன்னியின் செல்வன் 2’ காட்சிகள் மீண்டும் படமாக்கப்படுகிறதா?

‘பொன்னியின் செல்வன் 2’ காட்சிகள் மீண்டும் படமாக்கப்படுகிறதா?

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் காட்சிகள் மீண்டும் படமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு படக்குழு பதிலளித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகி வெற்றிப் பெற்ற திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 1’. விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் இந்தத் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் முதல் பாகத்தின் போதே அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முழுவதுமாக முடிந்துவிட்டது.

இரண்டாம் பாகத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு அடுத்து படம் வெளியாகும் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சில முக்கியக் காட்சிகள் இயக்குநருக்கு திருப்தி தராத நிலையில் அவை அனைத்தும் மீண்டும் படமாக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியானது. இது குறித்து படக்குழு தரப்பில் கேட்டபோது, ‘முக்கியக் காட்சிகளில் ஏதேனும் தவறு இருந்தால் மட்டுமே அவை மீண்டும் படமாக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால், ‘பொன்னியின் செல்வன்2’ படத்தில் அது போன்றத் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால், இது போன்ற செய்திகள் முற்றிலும் தவறானது. மேலும் படத்தின் ‘பேட்ச் வொர்க்’ நடக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. அந்த செய்திகளும் தவறானது’ இந்தச் செய்திகளை படக்குழு மறுத்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ பாகம் ஒன்றே உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட 500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று படக்குழுவினருக்கு லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த உற்சாகத்தில் படக்குழு இரண்டாம் பாகத்திற்கான வேலையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனால், மணிரத்னம் சொன்னதற்கு முன்பாகவே இந்தப் படம் வெளியாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in