படத்தின் ஆடியோ ரிலீஸ் தொடங்கி, படம் திரையிடுவது வரை எண்ணற்ற இன்னல்களை சந்தித்திருக்கிறது நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம். தடைகளை தகர்த்து வந்ததாலோ என்னவோ உலகம் முழுமைக்கும் கவனிக்கப்படும் படமாக மாறிப்போனது லியோ!
லியோவை எதிர்பார்த்து மக்கள் காட்டும் ஆர்வம் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளமாக அமைந்துவிடக்கூடாது என்பதால் தான் லியோவுக்கு திமுக அரசு இத்தனை கெடுபிடிகள் காட்டியது என தமிழக அரசியல் வட்டாரம் பேசத் தொடங்கியிருக்கிறது.
லியோ ஆடியோ ரிலீஸுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் காரணமாக அவ்விழாவை படக்குழு ரத்துசெய்தது. அப்போது விஜய் ரசிகர்கள், ‘#DMKFearsThalapathyVIJAY’ என்ற ஹேஷ்டேக்கை மிகப்பெரிய அளவில் டிரெண்டாக்கினர். இத்தனைக்கும் விழா ரத்தானதற்கு அரசியல் அழுத்தமோ அல்லது மற்ற எந்த காரணமும் இல்லையென லியோ படத்தின் தயாரிப்பு தரப்பில் அழுத்தமாக விளக்கம் கொடுத்தார்கள். ஆனாலும் அதை நம்ப ரசிகர்கள் யாரும் தயாரில்லை.
இந்த விஷயத்தில் அதிமுக தாமாக முன் வந்து விஜய்க்கு ஆதரவாக ஆஜரானது இன்னொரு ஆச்சரியம். ”நடிகர் விஜய்யைக் கண்டு திமுக அரசு பயப்படுகிறது. அரசாங்கம் நடிகர்களிடையே எந்தவித பாரபட்சமும் பார்க்கக்கூடாது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய பின்னர் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை இல்லை. ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை கூறி காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனுமதி கொடுத்தனர். இப்படி பாரபட்சம் காட்டுவது திரைத்துறைக்கு நல்லது கிடையாது” என்று விமர்சித்தார் முன்னாள அமைச்சர் கடம்பூர் ராஜூ.
”இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்திற்கு மட்டும் ஏன் தர வேண்டும்? ஏனென்றால் அவர் கட்சி ஆரம்பிக்கபோகிறார் என்று தெரிகிறது. அதனால் அவருக்கு நெருக்கடி தருகிறார்கள். நடிப்பதை நிறுத்திவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வார்கள்? தூரத்தில் இருந்து பார்க்கும் நமக்கே கோபம் வருகிறது என்றால் விஜய்க்கு எப்படி இருக்கும்?” என்று சீமானும் நியாயம் கேட்டார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நடிகர் விஜய் ஒரு முக்கியமான நபர். சக்தி வாய்ந்த நடிகரும்கூட. அவருடைய அரசியல் வருகையை 100 சதவீதம் வரவேற்கிறேன். தமிழகத்தில் திமுக போன்ற பெரிய கட்சிகள் நல்லவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்கின்றன” என்று தன் பங்கிற்கு வசைபாடினார்.
விஜய்காந்த், கமல்ஹாசன் போல அதிரடியாக அரசியலுக்குள் நுழையாமல் மிகுந்த நிதானத்துடன் அரசியல் களத்தைப் படித்து வருகிறார் விஜய். அரசியலுக்கு வரும் முன்பாகவே அணிகளை தொடங்கி, அவர்களை அணி வாரியாக தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பல்ஸ் பார்த்து பயிற்சி அளிக்கிறார். சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களை கொண்டாடுவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. நிர்வாகிகள் சந்திப்புக்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
அண்மைக்காலமாகவே விஜய் நடிக்கும் படங்களில் அரசியல் வசனங்கள் அனல் தெறிக்கின்றன. கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயமாக களமிறங்கி சொல்லத்தக்க வெற்றியும் பெற்றார்கள். இப்படி எல்லா வகையிலும் தனது அரசியல் பிரவேசத்திற்கான அனைத்து வேலைகளையும் துல்லியமாக செய்து வருகிறார் விஜய். இப்படியான திட்டமிட்ட நகர்வுகளால் தான் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்கிறார்கள்.
இதற்கு முன்பு வந்த விஜயின் வாரிசு படத்துக்கும் சிக்கல்கள் எழுந்தன. தமிழகத்தில் உள்ள பிரதான திரையரங்குகளை எல்லாம் துணிவு படத்திற்காக உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் புக் செய்துகொண்டது. இதனால் விஜயின் வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் போனது. அப்போதும் இதேபோல ஒரு அசாதாரண சூழலை விஜய் எதிர்கொண்டார். ஆனாலும் அசராமல் நின்று அப்போதும் நிலைமையை சமாளித்தார்.
திமுகவின் வருங்கால தலைவராக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். கட்சி, ஆட்சி இரண்டிலும் ஸ்டாலினுக்கு அடுத்ததாக அவருக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தநிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால் அது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். இதைக் கணக்குப் போட்டு இப்போதிருந்தே விஜயை ஓரம் கட்டும் வேலைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள்.
அதேசமயம் விஜய்க்கு தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்படும் நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகிறார்கள். எக்ஸ் தளத்தில் ‘#WeStandWithLEO’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்குகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாது... தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளும் திமுகவுக்கு எதிராக கம்பு சுற்றுவதற்காக விஜய் விவகாரத்தை கையிலெடுத்து அவருக்கு ஆதரவாக பேசிவருகின்றன.
விஜயைக் கண்டு திமுக பயப்படுவதால் தான் அவருக்கு திமுக தரப்பிலிருந்து நெருக்கடிகள் தரப்படுகிறதா என்ற கேள்வியோடு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொண்டோம். “இப்போதைக்கு இதுகுறித்து எதுவும் பேச முடியாத நிலையில் இருக்கிறோம், விரைவில் விரிவாக பேசும் சூழ்நிலை வரலாம்” என்று மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்துக் கொண்டார் அவர். விஜய் தரப்பிலிருந்தும் அதிகாரபூர்வமாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
என்றபோதும் வலைதளங்கள் மூலமாக விஜய் ரசிகர்கள் திமுகவை கடுமையாக வறுத்தெடுத்து வருகிறார்கள். அதிலும் கடந்த 2014-ம் ஆண்டு விஜய் போட்ட ட்விட்டர் பதிவு ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர், ‘தலைவா நம்ம பயந்து ஒதுங்குறோமா... இல்ல பாய பதுங்குறோமா?’ என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த விஜய், ‘பயமும் இல்லை, பதுங்கவும் இல்லை. அனுபவம் தேடுகிறோம் அவ்வளவுதான்’ என கூலாக ரிப்ளை செய்திருந்தார்.
அந்த அனுபவங்களின் தொகுப்புக்குப் பின்னால் விஜயின் அரசியல் பிரவேசம் நிச்சயம் என்று சொல்லப்படும் நிலையில், நெருக்கடி கொடுத்தவர்கள் அப்போது என்ன செய்வார்கள் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.
எம்ஜிஆர் என்ற ஒரு நடிகரால் திமுக இழந்தது மிக அதிகம். அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீண்டுவர அக்கட்சிக்கு சுமார் 18 ஆண்டுகாலம் ஆனது. அதன்பின்னர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது ஏற்பட்ட சூழலால் ஆட்சியை இழந்து எதிர்கட்சியாகக்கூட அக்கட்சியால் அமரமுடியவில்லை. விஜய் மீது திமுக கண்வைக்க இதெல்லாமும் காரணம் என்கிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியிலும் இதேபோல் திமுக குடும்ப வாரிசுகள் திரைத்துறையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக புகார்கள் வெடித்தன. அடுத்து வந்த தேர்தலில் திமுக ஆட்சியை பறிகொடுத்ததற்கு இந்த உறுத்தல்களும் ஒரு காரணம். அதேபோல் இப்போதும் சர்ச்சை வெடித்திருக்கிறது. ஸ்டாலின் இதை எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்!
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!