அடுத்த நயன்தாரா ஆகிறாரா அதிதி ஷங்கர்?

அடுத்த நயன்தாரா ஆகிறாரா அதிதி ஷங்கர்?

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர் இப்போதே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார். இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவுக்குள் நுழையும் அதிதி ஷங்கர், முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாவது பலரையும் புருவமுயர்த்தச் செய்திருக்கிறது. இந்நிலையில், அதிதி ஷங்கர் அடுத்த நயன்தாரா ஆவாரா எனும் எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.

கிராமத்து மனிதர்களின் வாழ்க்கைக் கூறுகளைப் பின்னணியாகக் கொண்டு ஆக்‌ஷன், சென்டிமென்ட் சேர்த்து முத்தையா இயக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் அவரது ‘விருமன்’ படத்தில் முழுக்க முழுக்க கிராமத்துப் பெண்ணாகவே நடித்திருக்கும் அதிதி, நம்பிக்கையூட்டும் நாயகியாக உருவெடுப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம். இப்படம் நாளை (ஆக.12) வெளியாகவிருக்கிறது.

கிராமிய வேடங்களில்தான் நடிப்பார் எனும் முத்திரை விழுந்துவிடாத வகையில், அடுத்தடுத்த படங்களில் கிளாமர் பக்கம் தாவ இருக்கிறாராம். அதற்குக் கட்டியம் கூறும் விதமாக, தற்போது கிளாமராக போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்திக்கொண்டிருக்கிறார். விரைவில் அவரின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் வெளியிட்ட படங்களில் நவீன உடைகளில் அசத்தியிருக்கிறார் அதிதி ஷங்கர்!

இந்நிலையில் அதிதியின் தற்போதைய டார்கெட் நடிகை நயன்தாரா தானாம். தமிழ்த் திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டா’ராக நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நயன்தாரா சமீபத்தில்தான் திருமணம் செய்துகொண்டார். பொதுவாக எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் திருமணம் ஆகிவிட்டால் அவர்களுடைய மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்துவிடும். அந்த வகையில், நயன்தாராவும் அப்படியான சவாலை எதிர்கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலை நன்கு உள்வாங்கியிருக்கும் அதிதி, நயன்தாராவின் இடத்தைப் பிடிக்க இப்போதே திட்டமிடுகிறார். இசை, நடனம், நடிப்பு என்று அனைத்தையும் முறைப்படி கற்றுத்தேர்ந்தவர் என்பதால், ‘நம்பர் ஒன்’ நடிகைக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் இருப்பதாகத் திரையுலகினரும் கருதுகிறார்கள்.

தற்போது பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் பார்வையும் அதிதி பக்கம் திரும்பியிருக்கிறது. முதல் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்தடுத்து பெரிய படங்களில் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் அதிதி தான் ஹீரோயின். சிம்புவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரைக்கு வந்து சிறப்பாக நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க நயன்தாராவுக்கு வாய்த்தது. திரைத்துறை சார்ந்த பல்வேறு திறமைகளுடன் திரைக்கு வரும் அதிதிக்கும் அந்த வாய்ப்பு அமையட்டும் என வாழ்த்துவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in