கிறிஸ்தவர் என்பதால் நடிகை அமலா பாலுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பா?: சர்ச்சையாகும் விவகாரம்

கிறிஸ்தவர் என்பதால் நடிகை அமலா பாலுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பா?: சர்ச்சையாகும் விவகாரம்

கேரளாவில் இந்து கோயிலுக்குள் நடிகை அமலா பால் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதற்கானக் காரணத்தை கோயிலின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடிகை அமலா பால் கேரளா மாநிலத்தில் பிறந்தவர். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இவர் கொச்சினில் உள்ள கல்லூரியில் படித்தார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'நீலதம்ரா' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர். இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தின் மூலம் தமிழில் அமலா பால் பிரபலமானார்.

இதன் பின் நடிகர் விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி கதநாயகன்களுடன் இணைந்து நடித்தார். இந்நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜயை கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் எர்ணா குளத்தில் உள்ள திருவைராணி குளம்மகாதேவர் கோயிலில் வழிபடச் சென்ற நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

திருவைராணி குளம்மகாதேவர் கோயிலில் சாமிதரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்துடன் கடந்த 16-ம் தேதி அமலா பால் சென்றுள்ளார். ஆனால்,, இங்கு இந்துக்கள் மட்டுமே செல்லவேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்று கோயில் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் கோயிலுக்கு வெளியில் நின்று அமலாபால் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அத்துடன் கோயிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் , "கோயிலுக்கு சாமிதரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. 2023-ம் ஆண்டிலும் மதப் பாகுபாடு நிலவுவது வருத்தமும் ஏமாற்றமுமாக இருக்கிறது. மதப்பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் இல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்படும் காலம் வரும்” என்று எழுதியிருந்தார். அமலா பால் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருவைராணி குளம் மகாதேவர் கோயில் நிர்வாகம் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இக்கோயில் அறக்கட்டளை நிர்வாகி பிரசூன் குமார், “பிறமதத்தைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கிறார்கள். அதுயாருக்கும் தெரியாது. ஆனால், பிரபலங்களை அனுமதித்தால் அது எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. பின் நடைமுறையை மீறியதாக சர்ச்சையாகி விடும். அதனால்தான் நடிகை அமலா பாலை அனுமதிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in