`பீஸ்ட்' படத்தை தெறிக்கவிட நானும் ஆர்வமாக உள்ளேன்'- நடிகை வர்ஷா பொல்லம்மா

`பீஸ்ட்' படத்தை தெறிக்கவிட நானும் ஆர்வமாக உள்ளேன்'- நடிகை வர்ஷா பொல்லம்மா

தமிழில் ‘சதுரன்’ படம் மூலம் அறிமுகமான வர்ஷா பொல்லம்மா ‘பிகில்’, ‘96’ படம் மூலம் தனக்கான ரசிகர்களை அதிகம் பெற்றார். தெலுங்கு, தமிழ் என தற்போது பிஸியாக இருப்பவரின் சமீபத்திய வெளியீடு ‘ஜெயில்’ படம். ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருப்பவரிடம் ஒரு மினி பேட்டி!

தமிழில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறீர்களே?

`96' படத்திற்கு பிறகு எனக்கு கிடைத்த பட வாய்ப்பு இது. அந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருப்பேன். அதேபோன்ற கதாப்பாத்திரம் ‘செல்ஃபி’ படத்திலும் சோலோ கதாநாயகி மற்றும் வலுவான வித்தியாசமான கதை என்பதால் கேட்டதும் ஒத்து கொண்டேன். மேலும் ஜி.வி.பிரகாஷ்ஷூடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. பெரிய நடிகர், இசையமைப்பாளர் என்ற எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் மிக இயல்பாக என்னுடன் பழகினார். நடிப்பில் நிறைய டிப்ஸ் எல்லாம் எனக்கு கொடுத்தார்.

சமீபமாக உங்களை அதிகம் தெலுங்கு படங்களில் பார்க்க முடிகிறதே? தமிழில் குறைவான படங்கள் ஏன்?

`பிகில்’ படத்திற்கு பின்பு ஒரே மாதிரியான கதாப்பாத்திரங்கள் வந்ததால் தவிர்த்து விட்டேன். மேலும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் கதைகளை எதிர்ப்பார்த்து இருந்ததால் தமிழில் படங்கள் குறைவாக இருந்திருக்கலாம். அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து இப்போது ‘செல்ஃபி’ மூலம் வந்து விட்டேனே.

‘பிகில்’, ‘96’ படங்களில் நான் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். இந்த படங்களின் கதை நன்றாக இருக்கும் என தெரியும். ஆனால், இந்த படங்களில் என்னுடைய கதாப்பாத்திரங்கள் இந்த அளவிற்கு பேசப்படும் என்பதை நான் அப்போது உணரவில்லை. ‘பிகில்’ படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் பல பெண்களுக்கான இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. அதை நிறைய பேர் என்னுடன் பகிர்ந்து இருக்கிறார்கள். விஜய், விஜய்சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே அதிர்ஷ்டம்தான். அதிலும் என்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அமைந்து பேசப்பட்டதை மறக்க மாட்டேன்.

எது போன்ற கதாப்பாத்திரங்கள் நடிக்க விருப்பம்?

சைக்கோவாக நடிக்க விருப்பம். எனக்கு தெரியும் என்னை அந்த கதாப்பாத்திரத்தில் பலரும் பொருத்தி பார்ப்பது கடினம். ஆனால், அதில் நடிக்க சவாலான விஷயங்கள் நிறைய இருப்பதால் அது போன்ற கதாப்பாத்திரங்கள் நடிக்க விருப்பம். ஒரே மாதிரியாக கதாப்பாத்திரங்களில் நடித்தால் எனக்கும் போர் அடித்து விடும்.

நீங்கள் தளபதி ரசிகை மற்றும் மீம் கிரியேட்டர். ‘பீஸ்ட்’ படத்திற்கு உங்கள் ரியாக்‌ஷன் என்ன?

ஆமாம். ‘பீஸ்ட்’ டிரெய்லர் எதிர்ப்பார்த்ததைவிடவே பயங்கரமாக இருந்தது. டிரெய்லரில் ‘Meaner, Leaner, Stronger’ என்ற வசனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை வைத்து நான் ‘smarter, Cuter, Vera leveler’ என ட்வீட் செய்திருந்தேன். ‘பீஸ்ட்’ படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் பார்த்து தெறிக்கவிட நானும் ஆர்வமாக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்

Related Stories

No stories found.