`இன்னும் 3 நாளில் பிடிபடுவார்'- வெளிநாடு தப்பிய நடிகரைப் பிடிக்க இன்டர்போலை நாடுகிறது கேரள போலீஸ்

`இன்னும் 3 நாளில் பிடிபடுவார்'- வெளிநாடு தப்பிய நடிகரைப் பிடிக்க இன்டர்போலை நாடுகிறது கேரள போலீஸ்

பாலியல் வன்கொடுமை புகாரில், தப்பியோடிய நடிகரைப் பிடிக்க இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியை நாட கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் மலையாள நடிகை, கடந்த மாதம் 22-ம் தேதி போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார். சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, மயக்க மருந்துகளைக் கொடுத்து, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் அதை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

போலீஸார், விஜய் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவர் துபாய் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இளம் நடிகை கொடுத்த பாலியல் புகாருக்கு ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள போலீஸார், சரணடைவதை தவிர விஜய் பாபுவுக்கு வேறு வழியில்லை என்று கூறியிருந்தனர். இந்நிலையில் போலீஸாருக்கு மெயில் அனுப்பிய, விஜய் பாபு, ’’தான் பிசினஸ் டூரில் இருக்கிறேன். மே 19-ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு வருகிறேன்’' என்று கூறியுள்ளார்.

ஆனால், உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீஸார் பதில் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் அவரைப் பிடிக்க இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியை நாட கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிய, புளு கார்னர் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாகவும் இதற்காக உள்துறை அமைச்சகத்தை நாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜு கூறும்போது, ''இன்னும் 3 நாட்களில் விஜய் பாபு பிடிக்கப்படுவார்'' என்றார்.

Related Stories

No stories found.