மூத்த நடிகர் திடீர் மரணம்: உடலை வாங்க உறவினர்கள் வராததால் அதிர்ச்சி

மூத்த நடிகர் திடீர் மரணம்: உடலை வாங்க உறவினர்கள் வராததால் அதிர்ச்சி

பிரபல மூத்த நடிகர் காலமானதை அடுத்து அவர் உடலை வாங்க உறவினர்கள் முன் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத்தில் 1967-ம் ஆண்டு வெளியான ’இந்துலேகா’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் ராஜ்மோகன். இயக்குநர் கலாநிலையம் கிருஷ்ணன் நாயரின் மருமகன் இவர். 1889-ம் ஆண்டு வெளியான, சந்துமேனன் எழுதிய ’இந்துலேகா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. கலாநிலையம் கிருஷ்ணன் நாயர் இயக்கிய இந்தப் படம் அப்போது வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து மேலும் சில படங்களில் நடித்த ராஜ்மோகன், திருமணத்துக்குப் பிறகு மனைவியைப் பிரிந்தார்.

பின்னர் நடிப்பை விட்டுவிட்டுத் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு வருடத்துக்கு முன் புலயனார் கோட்டையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு தங்கியிருந்த ராஜ்மோகனுக்கு கடந்த 4-ம் தேதி, உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று காலமானார். அவர் மறைந்த தகவல் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் உடலைப் பெற்றுக்கொள்ள வரவில்லை. இதையடுத்து கேரள திரைப்பட அகாடமி, அவர் உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் என்று கேரள அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in