தேசிய சினிமா தினம் : இன்று நாடு முழுவதும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.99க்கு டிக்கெட்!

மல்டிபிளக்ஸ் திரையரங்கு
மல்டிபிளக்ஸ் திரையரங்கு

’தேசிய சினிமா தினம்’ கொண்டாட்டத்தினை முன்னிட்டு, இன்று (அக்.13) ரூ.99 என்ற சலுகை கட்டணத்தில் நாடு முழுக்க 2500க்கும் மேலான மல்டிபிளக்ஸ் திரைகளில் பிரம்மாண்ட சினிமா அனுபவத்தை கண்டுகளிக்கலாம்.

கொரோனா காலம் என்பது இதர தொழில்துறைகளைப் போலவே சினிமா துறையையும் நசுக்கிப்போட்டது. பொதுமுடக்கம் காரணமாக சாதாரண டூரிங் டாக்கீஸ் திரையரங்குகள் முதல் ஐநாக்ஸ் திரையரங்குகள் வரை அனைத்துமே வெறிச்சோடிப் போயின. கொரோனோ பரவல் குறைந்ததை அடுத்து, அவை தொடர்பான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டதில் சகல துறைகளும் இயல்புக்கு திரும்ப ஆரம்பித்தன.

ஆனால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் காற்றுவாங்குவது மட்டும் தொடர்ந்தது. அதற்கு கொரோனா பரவலின் இன்னொரு பக்கவிளைவும் காரணம் எனத் தெரிய வந்தது. கொரோனோ காலத்தில் வீடடங்கிக் கிடந்த ரசிக மகா ஜனங்கள், ஓடிடி என்ற புதிய மாயையில் ஆழ்ந்து போயிருந்தனர்.

கொரோனா காலத்துக்கு பின்னர் ரசிகர்களை வரவேற்கத் தயாராகும் திரையரங்கு
கொரோனா காலத்துக்கு பின்னர் ரசிகர்களை வரவேற்கத் தயாராகும் திரையரங்கு

கொரோனா பரவல் உச்சத்திலிருந்த இரண்டரை ஆண்டுகளில் உலகளவில் ஓடிடி துறை உச்சம் பெற்றது. உள்ளங்கை செல்போன் முதல் வரவேற்பறை ஸ்மார்ட் டிவி வரை இந்த ஓடிடி அனுபவங்களை வீட்டிலிருந்தே ரசிக்க மக்கள் பழகியிருந்தனர். அவர்களது விருப்பத்துக்குரிய திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானதும் கூடுதல் காரணமானது. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் அவர்கள் மாறுவதாக தெரியவில்லை.

மக்கள் மத்தியிலான இந்த மாற்றத்தால், சாதாரண திரையரங்குகளைவிட மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகங்கள் பெரிதும் அடிவாங்கின. ஓடிடியில் கட்டுண்ட ரசிகர்களை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு இழுக்க இந்திய மல்டிபிளக்ஸ் சங்கத்தினர் கூடிக் கலந்தார்கள். என்னதான் ஓடிடி துறை ரசிகர்களை வளத்துப்போட்டிருந்தாலும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தரும் பிரம்மாண்ட ஒளி - ஒலி அனுபவத்தை அவற்றால் சற்றும் பூர்த்தி செய்ய முடியாது.

எனவே தேசிய சினிமா தினம் என்ற கொண்டாட்டத்தின் பெயரில், ஒரு நாளில் மல்டிபிளக்ஸ் திரைகளுக்கான கட்டணத்தை சல்லிசாக குறைத்து விளம்பரம் செய்தார்கள். அப்படித்தான் 2022-ல் தேசிய சினிமா தினம் அறிமுகமானது. 2 முறை ஒத்திப்போடப்பட்டு இறுதியாக செப்.23 அன்று தேசிய சினிமா தினத்தின் பெயரில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கான கொண்டாட்டம் கடந்தாண்டு அரங்கேறியது.

இந்திய மல்டிபிளக்ஸ் சங்கத்தினரின் கணிப்பு பொய்க்கவில்லை. ரூ75 என்ற சகாய கட்டணத்தில் மல்டிபிளக்ஸ் அனுபவங்களை ரசிக்க, ஒரே நாளில் 65 லட்சம் ரசிகர்கள் குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு புதியவர்கள். புதிய திரை அனுபவத்தை கண்டுகொண்ட பிறகு, அவர்களில் கணிசமானவர்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு படையெடுப்பது தொடர்ந்தது.

எனவே, தேசிய சினிமா தினத்தை ஆண்டுதோறும் கொண்டாட இந்திய மல்டிபிளக்ஸ் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இந்த வருடம் அக்டோபர் 13 அன்று தேசிய சினிமா தினம் கொண்டாட முடிவானது. இம்முறை ஜிஎஸ்டி தவிர்த்து ரூ99 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிவிஆர் போன்ற மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உணவு ரகங்களையும் ரூ99க்கு அறிவித்திருக்கிறார்கள். இதன்படி 11 சங்கிலித்தொடர் மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் சார்பில் இந்தியாவின் சுமார் 500க்கும் மேலான மலிடிபிளக்ஸ் வளாகங்களின், சுமார் 2500க்கும் மேலான திரைகளில் இன்றைய பிரம்மாண்ட திரைஅனுபவத்தை சகாய கட்டணத்தில் காணலாம்.

திரையரங்கு
திரையரங்கு

பிவிஆர் ஐநாக்ஸ், மிராஜ், சிட்டிபிரைட், சினிபொலிஸ், ஆசியன், முக்தா ஏ2, மூவி டைம், வேவ், எம்2கே, டிலைட் உள்ளிட்ட பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. வழக்கமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் ’புக்மைஷோ’ உள்ளிட்ட செயலிகள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த சலுகை கட்டணம் ஐமேக்ஸ், 4டிஎக்ஸ் போன்ற பிரீமியம் வடிவங்கள் மற்றும் சாய்வு இருக்கைகளுக்குப் பொருந்தாது. இது பான் இந்தியா சலுகை என்றபோதும், ஆந்திரா, புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஐமேக்ஸ் சங்க அறிவிப்பில் தெளிவில்லை. இந்த மாநிலங்களின் சினிமா ரசிகர்கள் தங்களது மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை தனிப்பட்ட வகையில் தொடர்புகொண்டு தேசிய சினிமா தின சலுகையை உறுதிசெய்து கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in