60 லட்சம் ரூபாய் செலவில் அமிதாப் பச்சன் சிலை: ஆச்சரியப்படுத்திய அமெரிக்கவாழ் இந்தியர்!

60 லட்சம் ரூபாய் செலவில் அமிதாப் பச்சன் சிலை: ஆச்சரியப்படுத்திய அமெரிக்கவாழ் இந்தியர்!

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது அவர் மீதான தங்கள் அபிமானத்தை ஏதேனும் ஒரு வகையில் அவர்கள்: வெளிப்படுத்துகிறார்கள். அப்படியான ரசிகர்களில் ஒருவரான கோபி சேத், அமெரிக்காவில் தான் வசிக்கும் வீட்டுக்கு வெளியிலேயே அமிதாப் பச்சனுக்குச் சிலை வைத்து அசத்தியிருக்கிறார்.

குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி சேத், 1990-ல் அமெரிக்காவுக்குச் சென்றார். நியூ ஜெர்ஸி மாநிலத்தில், எடிசன் சிட்டி நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். ‘லிட்டில் இந்தியா’ என அழைக்கப்படும் அளவுக்கு இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது. அமிதாபின் மிகத் தீவிர ரசிகரான கோபி பல ஆண்டுகளாக அமிதாப் குறித்த இணையதளத்தையும் நடத்திவருகிறார். கோபி மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் அனைவருமே அமிதாபின் ரசிகர்கள்தான்.

இந்நிலையில், தனது அபிமான கலைஞரான அமிதாபுக்குச் சிலை வைக்க கோபி முடிவெடுத்தார். இதையடுத்து 60 லட்சம் ரூபாய் செலவில் அமிதாபின் சிலை உருவானது. அமிதாபுக்குப் பெரும் புகழ் சேர்த்த ‘கவுன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் அவர் அமர்ந்திருக்கும் வகையிலான உருவத்தில் சிலை தயாரானது. ராஜஸ்தானில் உள்ள சிற்பக் கலைஞர்கள் இந்தச் சிலையை உருவாக்கி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். பெரிய அளவிலான கண்ணாடிப் பெட்டிக்குள் இந்த முழு உருவச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரமுகரான ஆல்பெர்ட் ஜஸானி அமிதாபின் சிலையைத் திறந்துவைத்தார். 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி பெரும் கோலாகலமாக நடைபெற்றது. அமிதாப் பச்சனின் பாடல்களுக்கு நடனக் குழுவினர் நடனமாடினர். பட்டாசு வெடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர் ‘பிக் பி’ ரசிகர்கள்.

இதுகுறித்து பேசிய கோபி, “சிலை வைக்கும் விவரம் அமிதாப் ஜிக்குத் தெரியும். ‘சிலை வைத்தெல்லாம் கெளரவப்படுத்தும் அளவுக்கு நான் ஒன்றும் செய்துவிடவில்லை’ என்று அமிதாப் ஜி சொன்னார். எனினும், சிலை வைக்கும் முயற்சியை அவர் தடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “எனக்கும் என் மனைவிக்கும் அமிதாப் பச்சன் கடவுள் போல. அவரது ரீல் வாழ்க்கை மட்டுமல்ல, ரியல் வாழ்க்கையும் எங்களை நிறைய ஊக்கப்படுத்தி இருக்கிறது. பொதுவெளியில் அவர் தன்னை எப்படி நிர்வகிக்கிறார், எப்படி வெளிப்படுத்துகிறார், எப்படி மற்றவர்களை அணுகுகிறார் என்பது பற்றி நன்றாக உங்களுக்குத் தெரியும். அவர் மற்ற நட்சத்திரங்களைப் போல் இல்லை. அதனால்தான் எங்கள் வீட்டிற்கு வெளியே அவரது சிலையை வைத்து அவரைக் கெளரவப்படுத்தியுள்ளோம்” என்று நெகிழ்கிறார் கோபி!

நடிகைகளுக்குச் சிலை வைக்கும் ரசிகர்கள் உள்ள தமிழகத்துக்கு இது சற்றே வித்தியாசமான செய்திதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in