`இந்தியன்2’: விவேக் கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?

`இந்தியன்2’: விவேக் கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?

‘இந்தியன்2’ படத்தில் நடிகர் விவேக்கின் கதாபாத்திரத்தில் நடிக்க வேறு ஒரு நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’. ஷங்கர்- கமல்ஹாசன் இணைந்து வெற்றி படமாக வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் இது. ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. அதற்கடுத்து கரோனா பிரச்சினை, பட்ஜெட் பிரச்சினை என இனி ‘இந்தியன்2’ தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தின் மூலம் பெரும் வெற்றி பெற, இயக்குநர் ஷங்கரும் தெலுங்கில் நடிகர் ராம் சரணின் 15-வது படத்தில் இயக்கத்தில் பிஸியானார். இதனை அடுத்து நேற்று ‘இந்தியன்2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுகிறது எனவும், இதன் தயாரிப்பாளர்களில் ஒருவராக உதயநிதியின் ரெட் ஜெயன்ட்டும் இருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டு இந்தியன் தாத்தாவாக கமலின் புகைப்படம் இருக்கும்படியான புது போஸ்டர் ஒன்றும் வெளியானது.

‘இந்தியன்2’ படம் ஆரம்பிக்கும் போது இதில் நடிகர் விவேக்கின் பகுதியும் படமாக்கப்பட்டது. ஆனால், அவரது மரணம் காரணமாக இப்போது அவர் கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படம் ஆரம்பித்தது குறித்து, இயக்குநர் ஷங்கர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டது மட்டுமல்லாமல், ராம் சரணின் படம் மற்றும் ’இந்தியன்2’ படங்கள் இரண்டின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து நடக்கும். ராம் சரணின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ஹைதராபாத், விசாகப்பட்டினம் பகுதிகளில் தொடங்க இருக்கிறது எனவும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in