காதலில் தோற்றவர்களுக்கு இதம் சொன்ன ‘எங்கிருந்தாலும் வாழ்க!’

61-ம் ஆண்டில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்!’
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்

காதலில் பல கோணங்களைச் சொன்னவர்களில் மிக மிக முக்கியமானவர் இயக்குநர் ஸ்ரீதர். தொண்ணூறுகளில், பார்த்த காதல், பார்க்காமலேயே காதல், சொன்ன காதல், சொல்லாமலேயே விட்ட காதல் என்றெல்லாம் வந்ததுபோல, ஐம்பதுகளின் மத்தியில் இருந்து காதலின் பல பரிமாணங்களைக் காட்டி அசத்தினார் இயக்குநர் ஸ்ரீதர்.

காதலில் தோல்வியுற்று ‘கல்யாண பரிசாக’ தன் குழந்தையையே கொடுத்த கதையும் ஸ்ரீதர் பண்ணியிருக்கிறார். போன ஜென்மத்தில் சேராத காதலை, இந்த ஜென்மத்திலும் பிரிக்கும் வகையில் அதே வில்லன் இருப்பதை ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மூலமும் உணர்த்தினார். அப்படித்தான், முன்னாள் காதலி, அவளின் நோய்வாய்ப்பட்ட கணவன், அவர்களுக்கு நடுவே சிகிச்சையளிக்கப் போராடுகிற மருத்துவர் எனும் முக்கோணத்தில், காதலையும் உணர்வையும் குழைத்து ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ கட்டினார் ஸ்ரீதர்.

ஒரு படத்தை முழுக்க முழுக்க ஆஸ்பத்திரியில் எடுக்கமுடியுமா? முடியும் என நிரூபித்ததுதான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.

கேன்ஸர் மருத்துவமனை. அதில் உள்ள முக்கியமான டாக்டர்... முரளி. அன்பே மருந்து, கருணையே சிகிச்சை என வாழ்பவர். அங்கே... வயதான கிறிஸ்தவர், சிறுமி ஒருத்தி, நகரத்தில் வாழும் பெண், கிராமத்தைச் சேர்ந்த பெண் என எல்லோரும் சிகிச்சையில் இருக்கிறார்கள். அப்போது, வேணு என்பவர் கேன்ஸர் நோயாளியாக அங்கே அட்மிட் ஆகிறார். அவரின் மனைவி சீதா.

மருத்துவர் முரளி, சீதாவைப் பார்த்ததும் அதிர்ந்து போகிறார். சீதாவும் நிலைகுலைந்து போகிறாள். இருவரும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்தார்கள். கல்யாணம் செய்துகொள்ளத் துடித்தார்கள். அப்போது, மருத்துவ மேல்படிப்புக்காக முரளி வெளிநாடு செல்ல, இங்கே தன் அப்பாவுக்கு வியாபாரம் நொடித்துப் போக, அவசரம் அவசரமாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலை சீதாவுக்கு!

சகலத்தையும் மறந்து, ‘இனி இவனே நம் கணவன், இவனே நம் வாழ்க்கை’ என்றிருக்கிறாள் சீதா. ஆனால் டாக்டர் முரளியோ, காதலியின் நினைவாகவே வாழ்கிறார். வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்யும் மனநிலையில் அவர் இல்லை. அம்மா கெஞ்சிக் கேட்டாலும் திருமணத்துக்கு மறுத்துக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில்தான்... டாக்டர் முரளி, முன்னாள் காதலியை நோய்வாய்ப்பட்ட கணவருடன் சந்திக்கிறார்.

‘’என் கணவரை எப்படியாவது காப்பாற்றுங்கள்’’ என்று காதலனைக் கேட்கும் நிலையில் சீதா இருக்கிறாள். ‘’இந்த டாக்டரை எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு. நல்ல மனிதர்’’ என்று சீதாவின் கணவர் வேணு, டாக்டரை ரொம்பவே மதித்து நேசிக்கிறார்.

ஒருகட்டத்தில், தன்னுடைய மனைவியும் டாக்டரும் ஒருகாலத்தில் காதலித்திருக்கிறார்கள் என்பது வேணுவுக்குத் தெரியவருகிறது. மனைவியைச் சந்தேகிக்கிறார் வேணு. அதேபோல், முன்னாள் காதலனான டாக்டரிடமே தன் கணவரை அழைத்து வந்திருக்கிறோமே... அவர் முறையாக சிகிச்சையளித்து, நம் கணவரைக் காப்பாற்றுவாரா என்கிற குழப்பமும் தவிப்பும் சீதாவுக்குள் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில், சீதாவின் தெளிந்த மனதைப் புரிந்துகொள்கிறார் கணவர். இன்னொரு பக்கம், டாக்டரின் தீவிர முயற்சியை அறிந்துகொள்கிறார் சீதா.

‘’ஒருவேளை ஆபரேஷனில் நான் இறந்துவிட்டால், நீ இன்னொரு திருமணம் செய்துகொள்ளவேண்டும்’’ என்கிறார் மனைவியிடம். ‘’அப்படியொரு திருமணத்தை நீங்கள்தான் என் மனைவிக்கு நடத்தித் தரவேண்டும்’’ என்று டாக்டரிடமும் கோரிக்கை வைக்கிறார். இதையெல்லாம் புரிந்துகொண்டு, தன் அம்மாவிடம், ‘’பெண் பாருங்கள், உடனே திருமணம் செய்துகொள்கிறேன்’’ என சம்மதம் கொடுக்கிறார் டாக்டர். மகிழ்ந்து போகிறார் அம்மா. அதேசமயம் இதைத் தெரிந்துகொண்ட வேணு, ‘’டாக்டர், நான் மரணித்துவிட்டால், என் மனைவியை தாங்களே திருமணம் செய்துகொள்ளவேண்டும்’’ என நிபந்தனை விதிக்கிறார்.

இப்படியொரு இக்கட்டான உணர்வுகள், படம் மொத்தமும் சூழ்ந்திருக்க, படம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்குதான் பிபி எகிறும். டாக்டர் முரளியாக கல்யாண்குமார். வேணுவாக முத்துராமன். சீதாவாக தேவிகா. கல்யாண்குமாரின் அம்மாவாக மீனாகுமாரி. கிராமத்தில் இருந்து வரும் இளம் நோயாளியாக மனோரமா. கேன்ஸர் நோயாளியாக கிறிஸ்தவரான வி.எஸ்.ராகவன். அதே நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுமி குட்டி பத்மினி. மனோரமாவைப் பார்க்க வரும் எஸ்.ராமராவ், மனைவியைப் பார்த்து விவாகரத்து கேட்டு தொல்லை பண்ணும் கணவர். குட்டி பத்மினியைப் பார்க்க வரும் விதவை அம்மா. கம்பவுண்ட்டர் நாகேஷ். மற்றுமொரு டாக்டராக சி.கண்ணன். படத்தின் மொத்த கதாபாத்திரங்களுமே அவ்வளவுதான்.

சாமி கும்பிட்டுவிட்டு, குட்டி பத்மினிக்கு விபூதி பூசி விடுவார் தேவிகா. அந்த விபூதியை வாங்கிச் சென்று கிறிஸ்தவரான வி.எஸ்.ராகவனுக்குக் கொடுப்பார் குட்டிபத்மினி. ‘’நீயே வைச்சுவிடும்மா” என்பார் வி.எஸ்.ராகவன். ‘’ஐயா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க’’ என்று தேவிகா கேட்பார். ‘’தீர்க்கசுமங்கலியா இருக்கணும்மா’’ என்று வாழ்த்துவார் வி.எஸ்.ராகவன்.

கணவர் ஆபரேஷனில் உயிர் பிழைப்பாரோ மாட்டாரோ என்று தவிப்பு தேவிகாவுக்கு. குட்டி பத்மினியின் விதவை அம்மாவிடம் ‘’நாளைக்கி வரும் போது, எனக்கு நிறைய மஞ்சளும் பூவும் வாங்கிட்டு வாங்க’’ என்பார் தேவிகா. ‘’குட்டி பத்மினி பிழைத்துக் கொண்டால், என் கணவரும் பிழைத்துக் கொள்வார் என்று ஒரு குருட்டு நம்பிக்கை’’ என்பார் தேவிகா. குட்டிபத்மினிக்கு ஆபரேஷன் நடக்கும். சக்ஸஸ் என்பார்கள். சந்தோஷப்படுவார் தேவிகா. அடுத்த பத்தாவது நிமிடம், ‘ஃபிட்ஸ்’ வந்துவிட, இறந்துவிடுவாள் சிறுமி. துடித்துப் போவார் தேவிகா.

கல்யாண்குமார் அறைக்குச் சென்று அவரிடம் இருந்து பழைய புத்தகம் வாங்கி வருவார் முத்துராமன். அந்தப் புத்தகத்துக்குள்ளே கல்யாண்குமாரும் தேவிகாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ இருக்கும். கல்யாண்குமார் பதறிப்போவார். தேவிகாவின் கையிலிருக்கும் புத்தகத்தில் இருந்து போட்டோ கீழே விழும். இப்போது டாப் ஆங்கிளில் முத்துராமனுக்கும் தேவிகாவுக்கும் நடுவே இருக்கிற போட்டோ காட்டப்படும்.

முத்துராமனை அங்கிருந்து அறைக்கு அழைத்து வந்துவிட்டு, பிறகு புகைப்படத்தை எடுக்க ஓடுவார் தேவிகா. அங்கே புகைப்படம் இருக்காது. கேமரா அப்படியே நகரும். புகைப்படத்தை எடுத்த வேகத்தில் வேகவேகமாக படியேறுகிற கல்யாண்குமாரின் முதுகு காட்டப்படும். நாகேஷின் அலப்பறையும் ராமராவின் கிராமத்துக் காமெடியும் ரசிக்கவைக்கும். பதற்றப் பரபரப்புடனே இருக்கும் கதைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் போர்ஷன் இவைதான்!

ஒருமுறை ஆறுதலுக்கும் வேண்டுதலுக்கும் சுவாமி படம் எடுத்து வரச்சொல்லியிருப்பார் தேவிகார். வேலையாள் எடுத்துவருவார். பிறகு அதே வேலையாளிடம், சிதார் எடுத்துவரச் சொல்லுவார் முத்துராமன். ’’சிதார் வாசிக்கணும். அதை நான் கேக்கணும்’’ என்று சொல்ல தேவிகா பாடுவார்.

‘சொன்னது நீதானா... சொல் சொல் என்னுயிரே...’ என்று! தமிழ் சினிமாவில், இப்படியொரு காட்சியை எந்தப் படத்திலும் இத்தனை கோணங்களில் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. படம் முழுக்கவே ஆஸ்பத்திரி. இந்தப் பாடல் முழுக்கவே ஆஸ்பத்திரி அறை. சிதார் வாசித்துப் பாடுவார் தேவிகா. எனவே அவர் எழுந்திருக்க வாய்ப்பில்லை. படுக்கையில் முத்துராமன். பாடச் சொல்லி கேட்பவர் அவர்தான். எனவே அவரும் எழுந்திருக்கமாட்டார்.

ஆனால், இருவருமே அவரவர் இடத்தில் அமர்ந்தபடி, இந்தப் பாடல் இருக்க, ஒளிப்பதிவு மேதை வின்சென்ட் வித்தை காட்டியிருப்பார். ஜன்னல் வழியே, கதவு வழியே, கட்டிலோடு, கட்டிலுக்குக் கீழே, சிதார் நரம்புகளும் விரல்களுமாக, சிதாரும் தேவிகாவின் முகமுமாக, தேவிகாவின் முகம் மட்டும், தேவிகாவும் அருகில் உள்ள கண்ணாடியில் தெரிகிற முத்துராமனும் என்று, இந்தப் பாடலுக்கு ஐம்பது ஷாட்டுகளுக்கும் குறைவில்லாமல் வைத்திருப்பார்கள்!

க்ளைமாக்ஸில், முத்துராமனுக்கு ஆபரேஷன். பல நாள் போராட்டங்கள், ஆய்வுகளுக்குப் பிறகு தூக்கம் கூட இல்லாமல் கல்யாண்குமார் ஆபரேஷன் செய்துவிட்டு படபடப்புடன் வருவார். சிறிது நேரத்துக்குப் பிறகு ‘சக்ஸஸ் டாக்டர்’ என்று மருத்துவர்கள் ஓடி வந்து சொல்லுவார்கள். அந்தத் தகவலைச் சொல்ல, தேவிகாவின் அறைக்குச் செல்வார். கதவைத் தட்டுவார். திறக்கமாட்டார் தேவிகா. அங்கே பிரார்த்தனையில், மயங்கியபடி இருந்து நீண்ட நேரம் கழித்துத் திறப்பார். அதற்குள் கல்யாண்குமாருக்கு பதற்றம் தொற்றிக்கொள்ளும். இருதயம் வேகமாகத் துடிக்கும். வாயிலிருந்து ரத்தம் கசியும். ‘’உன் கணவரைக் காப்பாத்திட்டேன் சீதா’’ என்று சொல்லிவிட்டு டாக்டர் இறந்து போவார். நாம் கனத்த இதயத்தில் வாயடைத்து மூர்ச்சையாகிப் போவோம்.

இறந்து போய்விடுவோமோ... எனும் கவலையில் உள்ள முத்துராமன், வேலையாளிடம் சொல்லி, பட்டுப்புடவையும் நகைகளும் எடுத்து வரச்சொல்லுவார். மணப்பெண் போல் தேவிகாவை அலங்கரித்து வரும்படி சொல்லுவார். ‘’ஞாபகம் இருக்கிறதா சீதா...’’ என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு, திருமணத்தையும் முதலிரவு தருணத்தையும் வர்ணிப்பார்.

குறுகிய நாட்களில் ஒரே லொகேஷனில், ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடித்தார் இயக்குநர் ஸ்ரீதர். அவரின் நண்பரான சித்ராலயா கோபுவின் பங்கும் அளப்பரியது. கவியரசு கண்ணதாசனின் பாடல்கள். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை.

‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்ற பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை. பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடினார். ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று காதலுக்கும் காதலிக்கும் காதலர்களுக்கும் புதுமையையும் யதார்த்தத்தையும் போதித்த இந்தப் பாடலைப் பாடாத காதல் தோல்வியாளர்களே இல்லை.

‘’இனிமே கவிஞர்கிட்ட பாட்டு கேக்கமாட்டேன். ரொம்ப தாமதப்படுத்துறாரு’’ என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. சொல்லிவிட்டாராம். அதையடுத்து, இந்தப் படத்துக்கு ஒரு காட்சிக்கு பாடலை கவியரசர் எழுதவேண்டும். மெல்லிசை மன்னரைப் பார்த்தபடியே, ‘சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே’ என்று எழுதினாராம் கண்ணதாசன்.

இயக்குநர் ஸ்ரீதர் ‘சித்ராலயா’ நிறுவனத்தைத் தொடங்கியதும் இந்தப் படத்தை எடுக்கத்தான் முடிவு செய்தார். ஆனால், ‘’முதல் தயாரிப்பு. அது இவ்வளவு சோகமான படமாக இருக்கவேண்டுமா?’’ என்று நண்பர்கள் சொல்ல, ஜாலியான படமாக 1961ம் ஆண்டு, ‘தேனிலவு’ படத்தை எடுத்தார். 1962ம் ஆண்டு, ஜனவரி 26-ம் தேதி, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை தயாரித்து இயக்கினார். தமிழில் சிறந்த படம் எனும் தேசிய விருது இந்தப் படத்துக்குக் கிடைத்தது. ஜனாதிபதி விருதும் கிடைத்தது ஸ்ரீதருக்கு!

முழுக்க முழுக்க ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு, முழுக்க முழுக்க சிறையைக் களமாகக் கொண்ட அமெரிக்கப் படம் ஏற்படுத்திய தாக்கம்தான் கரு என்று இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்திருக்கிறார்.

படம் வெளியாகி, 61 ஆண்டுகளாகின்றன. ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்றும் ‘சொன்னது நீதானா’ என்றும் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்றும் நம் செல்போன்களில், பைபாஸ் சாலையோரக் கடைகளில், பேருந்துகளில், இரவுகளின் எஃப்.எம். தருணங்களில் இந்தப் பாடல்கள் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. நாமும் முணுமுணுத்துக் கொண்டேதான் இருக்கிறோம்!

நம் நினைவில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் காவியம்தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்!’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in