ஒன்பது சிவாஜிகளின் ஒப்பற்ற நடிப்பில் உருவான ‘நவராத்திரி!’

சிவாஜியின் 100-வது படம்: ஒரு மீள் பார்வை
ஒன்பது சிவாஜிகளின் ஒப்பற்ற நடிப்பில் உருவான ‘நவராத்திரி!’

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப் பயணம் என்பது அசாதாரணமானது. அவரின் திரை வரிசையில் முதல் படம் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல் 50-வது படம், 75- வது படம், 100-வது படம், 125-வது படம், 150-வது படம், 200-வது படம் என்பவையெல்லாம் சரித்திரமாகின. அந்த வகையில், 100-வது படம் மிக மிக முக்கியமான படமாக அமைந்தது. மிக மிக முக்கிய சாதனையையும் நிகழ்த்தியது. சிவாஜியின் 100-வது படமான ‘நவராத்திரி’யை யாரால்தான் மறக்கமுடியும்?

சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ 1952-ம் ஆண்டு வெளியானது. 100-வது படமான ‘நவராத்திரி’ 1964-ம் ஆண்டு வெளியானது. திரையுலகிற்கு வந்த 12 வருடங்களில் சிவாஜி செய்த சாதனைகள் ஏராளம். 100-வது படமான ‘நவராத்திரி’யில், சிவாஜி இன்னொரு ரூபமெடுத்தார். சொல்லப்போனால், ஒன்பது ரூபங்களெடுத்தார். ஒன்பது வேடங்களில் நடித்தார்.

ஒரு கேரக்டர்... அந்தக் கேரக்டருக்கு, காட்சிக்குக் காட்சி, நடிக்கவும் , நடக்கவும் என பல பரிமாணங்கள் காட்டிக் கொண்டிருக்கும் சிவாஜிக்கு, ஒன்பது வேடங்கள் என்றால், அவர் காட்டுகிற வெரைட்டியையும் ஸ்டைலையும் புதிதாகச் சொல்லவேண்டுமா என்ன?

இளைஞன், பணக்காரர், ரவுடி, தொழுநோயால் பாதிப்படைந்தவர், மருத்துவர், கூத்துக்கட்டுபவர்,போலீஸ்காரர், கிராமத்து விவசாயி என ஒவ்வொரு விதமான கேரக்டரை, ஒவ்வொரு விதமாகப் பண்ணியிருப்பார் சிவாஜி. டெக்னாலஜி, டிஜிட்டல், கிராபிக்ஸ் என பெயர் கூட உச்சரிக்காத காலகட்டம் அது! இந்த ஒன்பது கதாபாத்திரங்களைச் செயல்படுத்தியதை விடுங்கள். யோசித்ததற்கே விருதுகளை வழங்கவேண்டும் இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு!

புராணக் கதாபாத்திரங்களுக்கும் கதைகளுக்கும் உயிரூட்டி திரையில் உலவவிட்டவர் என்று போற்றப்பட்ட ஏ.பி.நாகராஜன், இந்தப் படத்தை தயாரித்து இயக்கினார். பின்னாளில், ’திருவிளையாடல்’, ‘திருவருட்செல்வர்’ மாதிரியான படங்களையும் ‘தில்லானா மோகனாம்பாள்’ மாதிரியான காவியங்களையும் படைத்திட்ட ஏ.பி.நாகராஜன் தனது மூன்றாவது படமாகக் கொடுத்ததுதான் சிவாஜியின் 100-வது படமான ‘நவராத்திரி’.

1962-ம் ஆண்டு சிவாஜியை வைத்து, ‘வடிவுக்கு வளைகாப்பு’ கொடுத்தார். 1963-ம் ஆண்டு சிவாஜியை வைத்து ‘குலமகள் ராதை’யைத் தந்தார். 1952-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்த சிவாஜியிடம் இருந்து வட்டியும் முதலுமாக நடிப்பைப் பெற்றுவிட வேண்டும் என தீரா ஆசை கொண்டிருந்தாரோ என்னவோ? 1964-ம் ஆண்டில் சிவாஜியை வைத்து ’நவராத்திரி’யை உருவாக்கினார்.

ஒரே படத்தில், இரண்டு மூன்று சிவாஜிகளைப் பார்த்திருக்கிற நமக்கு ஒன்பது சிவாஜி புதுசு. ஆச்சரியம். பார்த்தால் கதையே இன்னும் அதிசயம்தான். கல்லூரியில் படிக்கும் மாணவி உடன் படிக்கும் மாணவனைக் காதலிப்பார். இந்த சமயத்தில், பெண்ணின் தந்தை, திருமணம் செய்துவைக்க முடிவு செய்வார். மகளுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பார். இதைக் கேட்டு நொந்து நொறுங்கிப் போய்விடுவார் நாயகி.

ஆனால் தான் காதலிப்பவன்தான், மாப்பிள்ளையாக தன்னைப் பார்க்க வரப்போகிறான் என்பதை அறியாமல், வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் நாயகி.

இப்படி வெளியேறுவதும் அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசுதான். அப்படி வீடு விட்டு வந்த பெண், ஒன்பது நாட்கள் ஒவ்வொருவிதமான மனிதர்களைச் சந்திக்கிறார். அந்த ஒன்பது இரவுகள்தான் ‘நவராத்திரி’.

வி.கோபாலகிருஷ்ணன், நாகேஷ், மனோரமா என பலரும் நடித்திருந்தார்கள். எல்லோரும் அவரவர் பணியை செவ்வனே செய்திருந்தார்கள். இந்தப் படத்தை இரண்டுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்பது நாளும் சந்திக்கிற மனிதர்கள்... அந்தக் கேரக்டர்கள்... அவற்றை நாயகனே செய்வதால் இதை ஹீரோவுக்கான கதை என்று எடுத்துக்கொள்ளலாம். கல்லூரி மாணவி, வீட்டை விட்டு வெளியேறி, ஒவ்வொரு நாளும் எப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறாள், இறுதியில் என்னாகிறாள் என்பதைச் சொல்லுவதால், இது நாயகி சம்பந்தப்பட்ட, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்றும் எடுத்துக்கொள்ளலாம். ‘நவராத்திரி’ என்பதே அம்பிகைக்கு உரிய பண்டிகைதானே!

நாயகன் சிவாஜி. நாயகி சாவித்திரி. இருவரும் திகட்டத் திகட்ட, அலுக்காமல் சலிக்காமல் நடிப்பை வள்ளலைப் போல் வழங்கியிருப்பார்கள் எப்போதுமே! ‘நவராத்திரி’யிலும் அப்படித்தான். இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு, நடித்திருப்பார்கள்.

அற்புதம், இரக்கம், பயம், கோபம், சாந்தம், சிங்காரம், வெறுப்பு, வீரம், ஆனந்தம் என நவரசங்களையும் ஒன்பது கதாபாத்திரங்கள் மூலமாக நவரசம் காட்டி பிரமாதப்படுத்தியிருப்பார் சிவாஜி. அந்த ஒன்பது பேருக்குத் தக்கபடி, ஒன்பது சிவாஜிகளுக்கு ஏற்றபடி நவரசங்களுக்குத் தகுந்தது போல், தன் முகபாவங்களாலும் பரிதவிப்பாலும் படபடப்பாலும் ஏக்கதுக்கத்தாலும் நவரசங்கள் காட்டி பிரமிக்கவைத்திருப்பார் சாவித்திரி.

‘நவராத்திரி சுப ராத்திரி’ என்று ஆனந்தமாக ஆரம்பிக்கும் படம், போகப் போக, ஒவ்வொரு நாளையும் சாவித்திரி கடக்கக் கடக்க, பெற்ற வயிறு என்றில்லாமல் படம் பார்க்கிறவர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் படம் பார்த்தார்கள்.

விவசாயி சிவாஜி வெள்ளந்தி என்றால் ரவுடி சிவாஜி மிரட்டல். ஜமீன் சிவாஜி அடக்கம் என்றால் போலீஸ் சிவாஜி அதட்டல். தொழு நோய் சிவாஜி பரிதாபம் என்றால் கூத்துக்கார சிவாஜியோ பச்சாதாபம். நடிகர் சிவாஜிக்கு ஒன்பது கேரக்டர் சிவாஜியும் போட்டிதான். பத்தாவது போட்டியாக சாவித்திரியும் சிவாஜியிடம் நடிப்பில் போட்டி போட்டு அசத்தியிருப்பார்.

தமிழ் சினிமாவில் சிவாஜி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒவ்வொரு படங்களில் பண்ணுவதுமே ஸ்டைலாகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் வரும் ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ பாடலையும் பாட்டுக்கு சிவாஜியின் மிரள வைக்கிற விழிகளையும் போதையில் அவர் படியில் நடக்கிற விதத்தையும் பார்த்தால் மிரண்டுதான் போவோம். நாமே மிரளுவோம் என்றால், வீட்டை விட்டு ஓடிவந்திருக்கும் சாவித்திரியின் மனநிலையை கற்பனை செய்துபாருங்கள். அரண்டுபோய் மலங்கமலங்க முழித்தபடி பதறுவார்.

மேடையில் சிவாஜியும் சாவித்திரியும் ‘அதாகப்பட்டது...’ என்று ஆரம்பித்து ‘தங்கச்சரிகைச்சேலை’ என்று அதகளம் பண்ணுவார்கள். இந்தப் பாடல் முடிந்தும் கூட தியேட்டரில் கரவொலி அடங்க நேரமாயிற்று என்று பத்திரிகைகளில் விமர்சனங்கள் எழுதப்பட்டன.

ஒவ்வொரு சிவாஜியும் அதாவது ஒவ்வொரு கேரக்டரும் வந்துவிட்டுச் செல்ல, நம் மனதை விட்டு அகலாமல் அப்படியே நின்றுகொண்டார்கள். படத்தின் இறுதியில், தன் காதலன்தான் தன்னை மாப்பிள்ளை பார்க்க வரவிருந்தவன் என்பதை அறிந்துகொண்டு, காதலனைச் சந்திக்க ஓடோடி வருவார் சாவித்திரி. பிறகு கல்யாணத்தில் சுபமாக முடியும்.

அந்தக் கல்யாணத்துக்கு, நாயகி சாவித்திரி இந்த ஒன்பது நாட்களும் தான் சந்தித்த மனிதர்களையெல்லாம் அழைத்திருப்பார். வந்தவர்கள்... ஒரே ஃபிரேமில் வரிசையாக உட்கார்ந்திருப்பார்கள். அங்கே, நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு சிவாஜியும் தன் கேரக்டரைஸேஷனைக் கொண்டே ஒவ்வொரு விதமாக உட்கார்ந்து, புன்னகைத்து, ஆசீர்வதித்து அசத்திக் கொண்டிருப்பார் சிவாஜி. நாம் எந்த சிவாஜிக்கு கைதட்டுவது என்று தெரியாமல் கைதட்டிக்கொண்டே இருப்போம். எல்லா சிவாஜிக்குமாக சேர்த்து கரவொலி எழுப்பிக்கொண்டே இருப்போம்.

’நவராத்திரி சுபராத்திரி’, ‘சொல்லவா... பிறந்த கதை சொல்லவா’, ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’, ’போட்டது முளைச்சிதடி கண்ணம்மா’, முன்பு வந்த பல பாடல்களின் மெட்டுகளில் அமைந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரி கலாட்டாப் பாடல், ’ராஜாதிராஜா வந்தேனே...’ என்கிற எட்டுநிமிடப் பாடல்... ‘தங்கச்சரிகைச் சேலை... எங்கும் பளபளக்க’ என்ற பாடல் என்று எல்லாப் பாடல்களையும் இனிய பாடலாக்கிக் கொடுத்திருந்தார் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். ஒவ்வொரு பாடலிலும் தனக்கே உண்டான தத்துவார்த்தங்களையும் வாழ்வியலையும் வார்த்தைக்கு வார்த்தை கோர்த்துக்கொடுத்து அவற்றை அழகிய பாடலாக்கியிருந்தார் கவியரசர் கண்ணதாசன். ’இரவினில் ஆட்டம்’ பாடலில் அந்த நாயகனின் மன நிலையை அப்படியே பிரதிபலித்திருப்பார் கவிஞர்.

வீட்டை விட்டு பெண் ஓடிவிட்டாள் என்று நெகட்டீவ் விஷயத்தை எடுத்துக் கொண்ட கதைதான் என்றாலும் அவள் சந்திக்கிற மனிதர்கள் ஒவ்வொருவரும் மனிதத்துடன், நேயத்துடன்,மனிதநேயத்துடன் இருக்கிறார்கள் என்று பாஸிட்டீவ் கதாபாத்திரங்கள் மூலமாகவும் திரைக்கதையின் வாயிலாகவும் எனர்ஜியைத் தந்திருந்தார் ஏ.பி.நாகராஜன்.

‘நவராத்திரி’ என்று டைட்டில். டைட்டில் முடிந்ததும் அது சம்பந்தமான பாடல். மற்றபடி நவராத்திரிக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால், அந்தப் பாடலுக்காகவும் டைட்டிலின் போதும் ஏகப்பட்ட பொம்மைகளைப் படமாக்கி, அந்த பொம்மைகளைச் செய்தவர்களுக்கும் டைட்டிலில் பெயர் பதிவிட்டிருப்பார் ஏ.பி.என். அவரே தயாரித்து, கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

1964ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, தீபாவளி வெளியீடாக எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘உல்லாச பயணம்’ வெளியானது. இந்தப் படத்துக்கு இசை கே.வி.மகாதேவன். இதேநாளில், சிவாஜி, தேவிகா நடித்து, பி.ஆர்.பந்துலு இயக்கிய ‘முரடன் முத்து’ வெளியானது. இதற்கு டி.ஜி.லிங்கப்பா இசை. இந்தநாளில்தான் எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த ஜி.என். வேலுமணி தயாரிப்பில், டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் ‘படகோட்டி’ வெளியானது. இந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைத்தனர்.

இந்தநாளில், ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கி, சிவாஜியும் சாவித்திரியும் நடித்த ‘நவராத்திரி’ வெளியானது. நடிகர் திலகத்தின் 100வது படம் எனும் பெருமையைக் கொண்டது ‘நவராத்திரி’. படம் வெளியாகி, 58 ஆண்டுகளாகிவிட்டன. நடிகர்திலகத்தின் 100வது படம் வெளியாகி 100 ஆண்டுகளாகின்றன என்று அப்போதும் எவரேனும் இதேபோல் எழுதிக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

‘பாட்டுக்கு படகோட்டி; நடிப்புக்கு நவராத்திரி’ என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். வருடாவருடம் வருகிற ‘நவராத்திரி’ விழாவும் ஆனந்தம். சிவாஜியின் 100வது படமாக வெளியான ‘நவராத்திரி’ திரைப்படமும் பேரானந்தம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in