54-ம் ஆண்டில் மாடிப்படி மாது : ’வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்!’

- மலைத்துச் சிரிக்கவைக்கும் கே.பி.யின் ‘எதிர்நீச்சல்!’
54-ம் ஆண்டில் மாடிப்படி மாது : ’வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்!’

இன்றைக்கு அபார்ட்மென்ட்கள் பெருகி வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. இதுவொரு கூடு, அதுவொரு கூடு என்பதாக வீடுகள், கூடுகளாகவும் கூண்டுகளாகவும் மாறிப்போய்விட்டன. ஆனால், அன்றைக்கு இதன் வேறொரு வடிவம் அப்படியில்லை. அதன் பெயர் ஒண்டுக்குடித்தனம் என்றிருந்தது. இந்த ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கும் குடும்பங்களையும் அங்கே இருப்பவர்களின் குணங்களையும் அந்த ஒண்டுக்குடித்தனத்தில் ஒண்டிக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் எவருமற்ற இளைஞனையும் அவர்களையெல்லாம் மீறி, எதிர்நீச்சல் போட்டு, எப்படி முன்னேறினான் என்பதைச் சொன்னதுதான் ‘எதிர்நீச்சல்’.

ஒண்டுக்குடித்தனத்தில், எஸ்.என்.லட்சுமி - ஹரிகிருஷ்ணன் குடும்பம், செளகார் ஜானகி - ஸ்ரீகாந்த் குடும்பம், மேஜர் சுந்தர்ராஜன் - வி.ஆர்.திலகம் குடும்பம், அண்ணனும் தங்கையுமாக இருக்கிற எம்.ஆர்.ஆர்.வாசு - மனோரமா வீடு, தனிக்கட்டையாக இருக்கும் மலையாள முத்துராமனின் வீடு, பேச்சிலர்ஸ் கல்லூரி இளைஞர்கள் குடியிருக்கும் போர்ஷன் என்கிற கலவையான குணச்சித்திரங்கள் கொண்ட ஒண்டுக்குடித்தனத்தில் மாடி இருக்கிறது. மாடிக்குக் கீழே ஒரு சந்துபொந்தான இடம் இருக்கிறது. அதில் இருந்தபடி, எல்லோர்க்கும் எல்லா வேலைகளையும் பார்த்துக்க்கொண்டு, வேலை நேரம் போகக் கிடைக்கிற நேரத்தில், கல்லூரிக்குச் சென்று படிக்கிறார் நாகேஷ்.

அத்தனை வேலைகளையும் அத்தனை வீடுகளுக்கும் பார்த்தாலும் நாகேஷுக்கு சம்பளமெல்லாம் இல்லை. ஒடுங்கிக் கொள்ள அந்த இடமும் ஒவ்வொரு வேளைக்கும் யாரோ ஒரு வீட்டில் முறைவைத்து உணவும் என அவரின் வாழ்க்கை இப்படியாகத்தான் கழிகிறது. ஆனால், சகல வலிகளையும் சிரித்துக்கொண்டே கடப்பதுதான் நாகேஷின் குணச்சித்திரம். அவரை அந்தக் குடித்தன வீடுகளில் எந்த வேலைகளையும் கொடுக்காமல், புரிந்து உண்மையான அன்பைக் காட்டுபவர் மேஜர் சுந்தர்ராஜன்தான்!

சொல்ல மறந்தேபோனேன்... அங்கே இருப்பவர்கள் லொடலொடவென பேசிக்கொண்டே, புறம் பேசிக்கொண்டே இருப்பதால் அவர்களைச் சொல்லியாகிவிட்டது. ஆனால், இருமிக்கொண்டே இருக்கும் தாத்தாவும் ஒரு கதாபாத்திரம்தான். அவரின் இருமலை வைத்துக்கொண்டே என்ன தேவைக்கு அழைக்கிறார் என்பதை நாகேஷ் அறிந்து உதவுவார். இது அவர்களுக்குள் இருமல் பாஷை!

நாகேஷின் பெயர் மாது. எனவே இனி நாகேஷை மாது என்றே அழைப்போம். வாரத்துக்கு ஒருவேளை சோறு போட்டுவிட்டு, ஒவ்வொருவரும் ஓராயிரம் வேலை வாங்குவார்கள். அடுப்பைப் பற்றவைத்துவிட்டு, அரிசி இல்லையே என்பாள் ஒருத்தி. ஷேவிங் க்ரீமை கன்னத்தில் தடவிய பிறகுதான் பிளேடு நினைப்பே வரும் ஸ்ரீகாந்துக்கு. மாதுவுடன் படிக்கும் மாணவர்கள், ‘’டேய், இந்த ரிக்கார்டு நோட்டுகளையெல்லாம் எழுதிக்கொடுடா எங்களுக்கு’’ என்று மிரட்டி காரியம் சாதித்துக் கொள்வார்கள். நாயர் என்கிற முத்துராமனும் மேஜர் சுந்தர்ராஜனும்தான் மாதுவுக்கு இருக்கிற ஒரே ஆறுதல்... இரண்டே ஆறுதல்.

எஸ்.என்.லட்சுமிக்கு ஜெயந்திதான் மகள். மனநோயாளியாக சிறிதுகாலம் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, தன் தம்பி தேங்காய் சீனிவாசன் மூலம் வீட்டுக்கு திரும்பவும் வந்திருப்பார்.

எம்.ஆர்.ஆர்.வாசுவைப் பேசி முடித்தாலென்ன... என்று தோன்றவே, பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது ஜெயந்தி மனநிலை சரியில்லாமல் இருந்தவள் என்பதை அறிந்துகொண்டதும், ‘’15 ஆயிரம் வரதட்சணை கொடுங்க. கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று சொல்ல, கசமுசாவாக, பேச்சு நின்றுபோகும்.

அந்தக் குடித்தனத்தில் இருப்பவர்கள், ஜெயந்தியை பைத்தியமாகவே பார்ப்பார்கள். உண்மையில், அன்புக்கும் பாராட்டுக்கும் ஏங்கி, பொறுமையில்லாமல் கத்தி ஆறுதல் தேடிக்கொள்கிற அவளின் குணத்தை, பெற்றவர்களே பைத்திய முத்திரை குத்தி, மனநல மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். அன்புக்கு ஏங்குகிற, பேச்சுத்தொடர்புக்கு தவிக்கிற, எல்லோருடனும் சகஜமாகப் பழகத் துடிக்கிற நம்மைப் போல் எளிய மனுஷிதான் ஜெயந்தியும்!

ஒருகட்டத்தில், ‘’யாருமே இல்லாத இந்த சனியன் மாதுவுக்கு, நம்ம வீட்ல சனியனா இருக்கிற மகளைக் கல்யாணம் பண்ணிவைச்சிட்டா என்ன? சோறு போட்ருக்கோம். மறுத்துருவானா?’’ என்று எஸ்.என்.லட்சுமி கணவர் ஹரிகிருஷ்ணனிடம் பேசுவதை, மாது கேட்டுவிட்டுத் துடிப்பார். ’அவங்க நம்மளை ஏமாத்திட்டதா நினைக்கறதுக்கு பதிலா, நாமளே அந்தப் பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா என்ன?’என்று யோசித்து மனதைத் தேற்றிக்கொள்வார்.

இருவரும் சந்திப்பார்கள். பேசுவார்கள். புரிந்துகொள்வார்கள். மாதுவின் நன்னடைத்தையால் பல உதவிகள் செய்துவரும் புரபஸர், மாதுவுக்கு தன் மகளையே கொடுக்க முன் வருவார். ஆனால், ‘எனக்கும் மாதுவுக்கும் காதல்’ என்பதை பைத்திய டிராமா ஆடியபடி உணர்த்திவிடுவார் ஜெயந்தி. இதனிடையே, அதிக மதிப்பெண் எடுக்கும் மாதுவை பரிட்சை எழுதவிடாமல் சதி செய்வார்கள் உடன் படிக்கும் மாணவர்கள். காதலிக்கும் விஷயம் தெரிந்ததால், மாதுவிடம் பேசுவதைப் புறக்கணித்து, அவனை வெறுக்கத் தொடங்கிவிடுவார் மேஜர் சுந்தர்ராஜன். பரிட்சையில் பாஸ் செய்தானா மாது? நல்ல வேலை கிடைத்ததா? ஜெயந்தியைத் திருமணம் செய்துகொண்டானா? மேஜரின் பழைய அன்பைப் பெற்றானா? என்று வாழ்க்கையில் அவன் போட்டுக் காட்டிய எதிர்நீச்சல்தான் ‘எதிர்நீச்சல்’ படத்தின் கதை!

நாடகமாக வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, பிறகு அதைத் திரைப்படமாகவும் எடுத்தார் கே.பாலசந்தர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித குணச்சித்திரங்களில் இருக்க, அத்தனை கேரக்டர்களையும் ரசிக்கவைத்திருப்பார் தன் திரைக்கதையாலும் பளீர் சுளீர் ஜிலீர் வசனங்களாலும்!

அசட்டு கணவராக கிட்டு ஸ்ரீகாந்த். எதற்கு எடுத்தாலும் சினிமாவையோ சினிமா நடிகரையோ சினிமாக் கதாபாத்திரங்களையோ உதாரணமாகச் சொல்லி பஞ்ச் வைக்கும் பட்டு மாமியாக செளகார் ஜானகி. இவர்கள் வருகிற காட்சிகளெல்லாம் நகைச்சுவை, துடுப்பாக இருந்து கதைக்கு வலு சேர்க்கும்.

‘மைக்கேல் மதன காமராஜன்’ திருட்டுப் பாட்டியான எஸ்.என்.லட்சுமிக்கு, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அம்மா கேரக்டர்தான். அவருக்கு கே.பாலசந்தர், ஒவ்வொரு படத்திலும் அட்டகாசமான கதாபாத்திரங்களை வழங்கியிருப்பார். இதிலும் வெளுத்து வாங்கிவிடுவார் எஸ்.என்.லட்சுமி.

அதேபோல், நடிகர் ஹரிகிருஷ்ணன் என்பவரைப் பலருக்கும் தெரியாது. ஆனால் அவர் திரையில் வந்தால், ‘நல்ல நடிகராச்சேப்பா. இன்னும் பல படங்கள்ல வந்திருக்கலாம்’ என்று எல்லோருமே சொல்லுவோம். அவரையும் கே.பாலசந்தர் நிறையவே பயன்படுத்திக்கொண்டார். ‘தில்லுமுல்லு’ படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு செகரட்டரியாக இருப்பாரே... அவரேதான் ஹரிகிருஷ்ணன்.

“நான் அது செய்யமாட்டேன், இது பண்ணமாட்டேன், அப்படி இருக்கமாட்டேன், இப்படி இருக்கமாட்டேன். ஆனா ஒரேயொரு கெட்டபழக்கம். பொய் மட்டும் சொல்லுவேன்” என்கிற எம்.ஆர்.ஆர்.வாசு அவர் பங்குக்கு முடிந்த பங்களிப்பைச் செய்திருப்பார். மனோரமா எப்போதுமே காமெடியில்தானே ரகளை பண்ணுவார். இந்த முறை அவர் காமெடிப் பக்கம் போகவில்லை. காமெடியைத் தூக்கி செளகார் ஜானகி கையில் கொடுத்திருப்பார் இயக்குநர் சிகரம்.

கையில் தட்டு ஏந்திக்கொண்டு, ‘நான் மாது வந்திருக்கேன்’ என்று அந்த ஒண்டுக்குடித்தனத்தில் யாரேனும் ஒரு வீட்டில் முறைவைத்து நின்று கேட்பார் நாகேஷ். அத்தனை வேலைகளையும் வாங்குபவர்கள், ‘வா மாது, இந்தா சாப்பிடு’ என்று மனதாரப் போடமாட்டார்கள்.

ஒவ்வொரு முறையும் திட்டிக்கொண்டும் சலித்துக்கொண்டும் போடுவார்கள். அந்த வலிகளை ஒருநிமிடம்... நமக்கு முகத்தாலேயே உணர்த்திவிட்டு, ‘நமக்கு இப்படித்தான் பொழப்பு நடக்கணும்னு இருக்கு’ என்பது போல் அசால்ட் மனநிலைக்கு வரும் நாகேஷின் ஒவ்வொரு தருணமும்... நமக்குத்தான் உள்ளே வலி நிமிண்டிக்கொண்டே இருக்கும்.

ஒருமுறை உணவு கிடைக்காத நிலை. நாயர் முத்துராமனிடம் வருவார் நாகேஷ். ‘’வேலைக்குப் போகலயா நாயர்’’ என்று கேட்பார் நாகேஷ். ‘’யடோ... இன்னிக்கி ஞாயித்துக்கிழமை’’ என்பார் முத்துராமன். ‘’சாப்பிட்டாச்சோ’’ என்பார். ’’இப்பதானே எண்ணெய் தேய்ச்சிக்கிட்டிருக்கேன், இனிதான் குளிக்கணும்’’ என்பார் முத்துராமன். ‘’கையில வாட்ச். எண்ணெய்க்குளியல். வாட்டர் ப்ரூப் வாட்ச் கேள்விப்பட்டிருக்கேன். இதென்ன ஆயில் ப்ரூப் வாட்ச்சா?’’ என்று நக்கலும் கேலியுமாகக் கேட்பார் நாகேஷ்.

‘’மாது, இந்த உலகத்தில் மூன்று விலைமதிக்க முடியாத விஷயம் என்னிடம் உண்டு. ஒன்று... என்னோட அம்மை. இன்னொன்று... என் நண்பன் கொடுத்த இந்த வாட்ச். மூணாவது... என்னோட மூளை’’ என்பார் முத்துராமன். அதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டே இருக்கும் நாகேஷ், ‘’ஏன் நாயர்... நீ சாப்பிட்டியானு நான் கேட்டேனே. ‘நான் சாப்பிட்டேனா’னு பதிலுக்கு நீ கேக்கமாட்டியா நாயர்?’’ என்று சோகமாகச் சொல்லுவார். நாம் அப்படியே உறைந்து போய், கரவொலி எழுப்புவோம்.

’படவா ராஸ்கல்’ என்று தனக்குப் பிடித்தமானவர்களைத் திட்டும் பழக்கம் கொண்டவர் கே.பாலசந்தர். கமலுக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறார் பாலசந்தர். ‘16 வயதினிலே’ பார்த்துவிட்டு, ‘மை டியர் ராஸ்கல்’ என்று ஆரம்பித்துத்தான் கடிதம் எழுதினார் பாலசந்தர். இது திரையில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் கே.பி.யின் குணச்சித்திரம் போல! இந்த ‘படவா ராஸ்கல்’ விஷயத்தை மேஜர் மூலமாக வெளிப்படுத்துவார். நாகேஷை ‘படவா ராஸ்கல்’ என்று செல்லமாக அவர் கூப்பிடும்போதெல்லாம், ‘’இது மாதிரி நம்மைக் கூப்பிடுறதுக்கு ஒருத்தர் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?’’ என்று ஏங்கவைத்துவிடுவார் பாலசந்தர்.

நாகேஷ் - ஜெயந்திக்குள் நடக்கிற காதலில், அவர்கள் சந்திப்பதற்கான சங்கேதமாக, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடல் பாடுவதாக வைத்திருப்பதில், பாலசந்தரின் ரசனை பளிச்சிடும். அதேபோல், ‘இருமல் தாத்தா’ என்பவரைக் காட்டாமலேயே அந்தக் கதாபாத்திரத்தை நமக்குள் பதியனிட்டிருப்பதை கே.பி.யைத் தவிர வேறு யார் செய்துவிடமுடியும்? இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தைக் கொண்டு ஒவ்வொரு அத்தியாயம் எழுத ஆசை. அவ்வளவு விஷயங்களை நாவல் போல் பண்ணியிருப்பார் பாலசந்தர்.

அந்த வீட்டில் திருட்டுகள் நடக்கும். மனோரமா வீட்டில் வெள்ளி டம்ளர் காணாமல் போகும். நாயரின் வாட்ச், செளகாரின் மூக்குத்தி, எஸ்.என்.லட்சுமியின் ஐம்பது ரூபாய், மாணவரின் மைனர் செயின், எம்.ஆர்.ஆர்.வாசுவின் டெர்லின் சட்டைகள் என காணாமல் போகும். இதெல்லாம் மாதுதான் திருடினான் எனக் குற்றம் சுமத்துவார்கள். மேஜர் வந்து நிற்பார். வரிசையாக எல்லாப் பொருட்களையும் சொல்லுவார்கள். சொல்லி முடித்ததும் ‘’ஆ... நாயர் வாட்ச்சை விட்டுட்டீங்களே’’ என்று நாகேஷ் சொல்ல, ‘நாகேஷ் திருடனில்லை’ என்பதை வெகு அழகாகப் புரிந்துகொள்வார் மேஜர்.

இன்னொரு கட்டத்தில் யாரோ திருடுவார்கள். நாகேஷ் கையும்திருட்டுமாகப் பிடித்துவிடுவார். பார்த்தால்... தேங்காய் சீனிவாசன். எஸ்.என்.லட்சுமியின் தம்பி. சத்தம் கேட்டு ஓடிவரும் எஸ்.என்.லட்சுமி, ‘’நல்லவேளை மாது. நீ பாத்தே. இல்லேன்னா மானமே போயிருக்கும்’’ என்று சொல்ல, எல்லோரும் வந்துவிடுவார்கள். ‘’சோறு போட்டு வளர்த்தேனேடா... சோறு போட்டு வளர்த்தேனேடா’’ வார்த்தைக்கு வார்த்தை சொல்லிவிட்டு, ‘’உண்மையச் சொல்லு மாது’’ என்று ‘சொல்லாதே’ என்பதை சொல்லாமல் சொல்லும் இடம், மனதை ரணப்படுத்திவிடும். நாயரும் கேட்பார். ஒருகட்டத்தில், “ஆமாம் நாயர், நான் திருடிட்டேன்” என்று நாகேஷ் சொல்ல, பொளேரென அறைந்து தள்ளுவார்.

‘’இன்னிலேருந்து நீ யாரோ நான் யாரோ’’ என்பார் முத்துராமன். அப்போது ஹரிகிருஷ்ணனும் ஜெயந்தியும் வீட்டிலிருந்து திருடிய பொருட்களையெல்லாம் கொண்டுவந்து கொடுப்பார்கள். தேங்காய் சீனிவாசன் தான் திருடினார் என்பது தெரியவரும். மாமா வெளுத்துவாங்குவார். முத்துராமனும் அடிப்பார். மீண்டும் மாமா தேங்காய் சீனிவாசனை அடிப்பார். விழுந்து விடுவார் தேங்காய் சீனிவாசன். ‘’விட்ருங்க சார். அவர் விழுந்துட்டார் சார். எந்திரிக்கும்போது, நிச்சயம் நல்லவனாத்தான் எந்திருப்பாரு’’ என்று நாகேஷ் சொல்ல, தியேட்டரில் விசில் பறக்கும்.

‘’உன்னையும் என்னையும் பிரிச்ச இந்த வாட்ச் எனக்கு வேணாம், நீ கட்டிக்கோ’’ என்று நாகேஷிடம் முத்துராமன் சொல்லுவார். ‘’என் கவலையெல்லாம் என்ன தெரியுமா நாயர்? நம்ம நட்பு இதனால போயிருமோனு நினைச்சேன். நாயர்... நண்பனோட மரணத்தைக் கூட பொறுத்துக்கமுடியும். ஆனா நட்போட மரணத்தைப் பொறுத்துக்கவே முடியாது நாயர்’’ என்று சொல்ல, பாலசந்தரின் ‘டச்’ வசனத்திலும் காட்சியிலும் இரண்டறக் கலந்திருப்போம்.

’’உலகத்திலேயே சிறந்த மூணு விஷயங்கள்... என் அம்மா. என் நண்பன் கொடுத்த இந்த வாட்ச்” என்று முத்துராமன் சொல்ல, ‘’மூணாவது... உன்னோட மூளை’’ என்பார் நாகேஷ். ‘’இல்லடே... எண்ட மாதுவின் நட்பு’’ என்று சொல்ல மாது மட்டுமா கலங்கிப் போவார்? நாமும்தான்!

நாகேஷின் காதலால் வெறுத்து ஒதுக்குவார் மேஜர். ‘படவா ராஸ்கல்’ என்று சொல்லமாட்டார். கதவை சார்த்திக்கொண்டு உள்ளே போய்விடுவார். அவரின் கைத்தடியை வைத்துக்கொண்டு, நாகேஷ், நாகேஷாகவும் மேஜராகவும் மாறிமாறிப் பேசி, ‘படவா ராஸ்கல்’ சொல்லி, பரிட்சைக்கு வாழ்த்தும் ஆசியும் சொல்லிக்கொள்ளும் இடம், பேரன்பின் பெரும் அடையாளம்!

சினிமாப் பைத்தியம், பொண்டாட்டிப் பைத்தியம், பணப்பைத்தியம் என்றெல்லாம் சொல்லி, ஜெயந்தி பைத்தியமே இல்லை என்பதை நாகேஷ் உணர்த்துகிற காட்சி, அப்ளாஸ் அள்ளும். எம்.ஆர்.ஆர்.வாசுவைப்பார்த்து, “பெரிய எம்.ஆர்.ராதான்னு நினைப்பு” என்பார் செளகார் ஜானகி. முத்துராமனின் கோபம் கண்டு, “வந்தாச்சு ‘முரடன் முத்து’ வாங்கோண்ணா போலாம்’’ என்பார். ‘சிவனின்றி சக்தியில்லை’ என்பார் ஸ்ரீகாந்த். ”பாத்துட்டேள் பாத்துட்டேள்... எனக்குத் தெரியாம ‘திருவிளையாடல் படம் பாத்துட்டேள்’’ என்பார் செளகார். ’’நீயாவது அன்பே வா, அது இதுன்னு சினிமாப் படம்லாம் வைச்சு எழுதினே. இவர் எனக்கு எப்படி லவ் லெட்டரை ஆரம்பிச்சார் தெரியுமோ... ‘எப்படி ஆரம்பிக்கறதுன்னே தெரியலை’ன்னு எழுதி ஆரம்பிச்சாரு’’ என்று ஸ்ரீகாந்தை இடறுவதாகட்டும், படத்தின் பெயர், கேரக்டரின் பெயர், நடிகர் நடிகைகளின் பெயர்களைச் சொல்லிப் பேசும் செளகார் ஜானகி அமர்க்களம் பண்ணியிருப்பார்.

படத்தில் நடித்த எட்டுப்பத்து கேரக்டர்களுக்கும் வேறு எவரையும் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நாயகன் நாகேஷின் கதாபாத்திரத்தை வேறு எவரும் இந்த அளவுக்குச் செய்யவே முடியாது.

வி.குமாரின் இசையில் எல்லாப் பாடல்களும் வெற்றி பெற்றன. வாலி அனைத்துப் பாடல்களையும் எழுதினார். ‘தாமரைக்கன்னங்கள்’, ‘சேதி கேட்டோ சேதி கேட்டோ’ என இன்றைக்கும் ரசிக்கலாம். எம்.எஸ்.வி. இசையமைத்த ‘என்னம்மா, பொன்னம்மா’ என்ற பாடலும் படத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்தப் படம் குறித்து இன்னொரு சுவாரஸ்யம்... நாகேஷ் கேரக்டரின் பெயர் மாது. பின்னாளில் பல வருடங்கள் கழித்து, கிரேஸி மோகன் நாடகக் கம்பெனி தொடங்கி, நாடகங்களை அரங்கேற்றினார். எல்லா கதைகளின் நாயகிக்கு ‘ஜானகி’ என தன் ஆசிரியை பெயரை வைத்தார். நாயகனுக்கு, ‘மாது’ எனப் பெயரிட்டார். ‘’எதிர்நீச்சல் மாதுவைக் கொண்டுதான் வைத்தேன். என் தம்பி பாலாஜி, இப்போது ‘மாது பாலாஜி’ ஆகிவிட்டான்’’ என்று கிரேஸி மோகனே சொல்லியிருக்கிறார்.

செளகாரின் பெயர் பட்டு. ஸ்ரீகாந்தின் பெயர் கிட்டு. இந்த ‘கிட்டு மாமா, பட்டு மாமி’ என்கிற பெயரை வைத்து, ஊர்வம்பு பேசுவது போலான நிகழ்ச்சிகளெல்லாம் எஃப்.எம்மிலும் வார இதழ்களிலும் வந்திருக்கின்றன.

இன்னொரு முக்கியமான விஷயம்... டைட்டிலில் ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ என்ற பாடலை கவிஞர் வாலி எழுத, சீர்காழி கோவிந்தராஜன், பாட்டு செம ஹிட்டு. படம் வந்த பிறகு, இயக்குநர் கே.பாலசந்தர், அந்த மனிதரைச் சந்தித்தார். பாலசந்தரைப் பார்த்ததும் அந்த மாபெரும் மனிதர் கேட்ட கேள்வி... ‘’வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் பாட்டு ரொம்ப அருமை. யார் எழுதினது? அந்தக் கவிஞருக்கு என் வாழ்த்துகளைச் சொல்லிருங்க’’ என்று சொல்ல, பாலசந்தரும் கவிஞர் வாலியிடம் அதை அப்படியே சொன்னார். அந்த மாபெரும் மனிதர்... அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா.

1968-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வெளியானது ‘எதிர்நீச்சல்’ திரைப்படம். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. படம் வெளியாகி, 54 ஆண்டுகளாகின்றன. முக்கியமாக, மக்கள் மனங்களில் எப்போதும் பார்க்கலாம் என்கிற படப் பட்டியலில், எந்த ‘எதிர்நீச்சல்’ போராட்டங்களும் இல்லாமலேயே, தனியிடம் கொண்டு கம்பீரமாக நிற்கிறான்... இன்னமும் கலகலக்க வைக்கிறான் ‘எதிர்நீச்சல்’ மாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in