50-ம் ஆண்டில் ‘மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்!’

- ’லலிதா’ மூலம் கே.பாலசந்தர் தெறிக்கவிட்ட ‘அரங்கேற்றம்!’
பிரமிளா
பிரமிளாஅரங்கேற்றம் படத்தில்...

சில படங்களை எப்போது பார்த்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் நம்மை இம்சை பண்ணும். நம் மனதுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை, நிமிண்டிக்கொண்டே இருக்கும். நம் மனதை அறிந்த எவரிடமேனும் படத்தைப் பற்றிப் புலம்பினால்தான் கொஞ்சம் நிம்மதி என்று ஏங்கவைக்கும். லலிதா வழியே கே.பாலசந்தர் இந்த உலகுக்கு உணர்த்திய ‘அரங்கேற்றம்’ அப்படித்தான் நம்மை உலுக்கிப் போட்டது!

அழகிய, சின்னஞ்சிறிய கிராமத்து அக்ரஹாரம். அந்த அக்ரஹாரத்தில் வசிக்கும் ஆச்சாரமான குடும்பத்தில், குழந்தைச் செல்வங்களுக்குப் பஞ்சமே இல்லை. மற்ற எல்லாச் செல்வங்களும் பஞ்சத்தில் இருக்கிறது. வருடத்துக்கு ஒன்றென குழந்தைகளைப் பெற்றுப்போட்டு, ஏழ்மைக்குள் வாக்கப்பட்ட அந்தக் குடும்பத்தின் மூத்தவள்தான் லலிதா!

அந்த வீட்டின் தலைவர் ராமு சாஸ்திரிகள். நியம நிஷ்டைகளை அனுதினமும் கடைப்பிடிப்பவர். எட்டணா காசு கிடைத்தால், அவர்தான் குபேரன். ஆனால், ஒழுங்காக மந்திரங்களைத் திருப்பிச் சொல்லாமல் தர்ப்பணத்தை சரிவர செய்யாதவர்களிடம் திட்டி, கோபமாகி, அந்த எட்டணாவையும் சம்பாதிக்காமல் இருக்கிற கண்டிப்பு நிறைந்த சாஸ்திரிகள்.

அந்த வீட்டில், பசியும் பட்டினியும் எப்போதும் நிரந்தரம். உணவு என்பது எப்போதாவதுதான்! படிக்கிற பையனுக்கு நோட்டுப்புத்தகங்கள் வாங்கக்கூட ’நோட்டு’ கிடையாது. போதாக்குறைக்கு, குடும்பத்தலைவனின் சகோதரி, தன் வயதுக்கு வந்த மகளுடன் அங்கே நிரந்தரமாக இருக்கிறாள். ‘’எம் புருஷன் எங்களைவிட்டுட்டு ஓடிப்போயிட்டான்’’ என்று இங்கேயே ‘டேரா’ போட்டிருக்கிறாள்.

வறுமை சூழ்ந்த வீடுதான். ஆனாலும் கெளரவத்துக்கும் மரியாதைக்கும் குறைவே இல்லை. ஆனால், வறுமைதான் நம் குடும்பத்தின் எதிரி என்று புரிகிறது மூத்தவள் லலிதாவுக்கு. அப்பாவிடம் சண்டைபோட்டு சம்மதம் வாங்கி, வேலைக்குச் செல்கிறாள். வீட்டில் சந்தோஷம் கொஞ்சமாக எட்டிப்பார்த்து ‘உள்ளே வரலாமா’ என்று கேட்கிறது. அடுத்து மூத்த தம்பியின் டாக்டர் படிப்பு. சிபாரிசுக்காக சென்னை செல்கிறாள். அங்கே, சின்னாபின்னமாக்கப்படுகிறாள். சகலத்தையும் முழுங்கிக்கொண்டு, ஊர் திரும்புகிறாள்.

வேலையில் பதவி உயர்வு கிடைக்கிறது. இடமாற்றமும் நிகழ்கிறது. ஹைதராபாத் செல்கிறாள். அங்கே மேலதிகாரி, அவளைச் சூறையாடுகிறான். பிறகு அதையே தொழிலாக்கிக் கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறாள். தம்பி டாக்டருக்குப் படிக்கிறான், தங்கை பாடகியாவதற்கு இசைப்பயிற்சி கற்றுக் கொள்கிறாள். அடுத்தடுத்த தம்பி, தங்கைகள் என தெரு அளவுக்கு நீளமாக இருக்கிறார்கள். படிக்கிறார்கள். குடும்பத்தில் குடியிருந்த வறுமையை, ஹைதராபாத்தில் இருந்துகொண்டே தன்னைப் பறிகொடுத்து விரட்டியடிக்கிறாள் லலிதா!

அடுத்தடுத்த நிகழ்வுகளில், சமூகம் லலிதாவை எப்படிப் பார்க்கிறது. அந்தக் குடும்பத்துக்குத் தெரிந்ததும் லலிதாவை எப்படி அவர்கள் அணுகுகிறார்கள் என்பதையெல்லாம் காட்சிக்குக் காட்சி நம் சட்டையைப் பிடித்து உலுக்கியெடுத்துச் சொல்லியிருப்பதுதான் ‘அரங்கேற்றம்!’

கே.பாலசந்தரின் இயக்கம். டைட்டிலிலேயே, கோயில் வழிபாடு, ராமு சாஸ்திரிகளின் தர்ப்பண சிரத்தை, அதைச் சரிசெய்யாதவர்கள் மீது கோபம், ஊரின் எல்லையில் உள்ள சுமைதாங்கிக் கல், ‘ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச பாஹிமாம்’ என்று வீட்டுவாசல்களில் எடுக்கிற உஞ்சவிருத்தி, சுவரில் இருக்கிற ‘சீரான குடும்பம் சிறப்பான வாழ்வு’ எனும் விளம்பரம், அந்த விளம்பரத்துக்கு நேர்மாறாக மந்தைமந்தையாகச் செல்லும் ஆடுகள், ஆட்டுக்குட்டிகள். மேய்ச்சலில் இருக்கிற மாடுகள், கன்றுகள். ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கிற வாத்துக்கூட்டம், ‘அம்மா... ராப்பிச்சைம்மா... பசிக்குதும்மா’ என்கிற ஷீனமான குரல். கடைசியாக, தலைக்கு மேலே ஏற்றிவைத்திருக்கும் சுமையை, அந்த சுமைதாங்கிக் கல்லில் வைப்பது... அப்போது கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் - கே.பாலசந்தர்’ என்று டைட்டில் போட்டு முடித்திருப்பார்.

ராமு சாஸ்திரிகளாக எஸ்.வி.சுப்பையா. இவர்தான் அப்பா. அவரின் மனைவியாக எம்.என்.ராஜம். இவர்தான் அம்மா. லலிதாவாக பிரமிளா. டாக்டருக்குப் படிக்கும் தம்பியாக கமல். தங்கைகளாக ஜெயசுதா, ஜெயசித்ரா. ஊரில் இருக்கிற பெருந்தனக்காரர் செந்தாமரை. அவரின் மகன் தங்கவேலுவாக சிவகுமார். எல்லோரும் அவரவர் வேலைகளை செம்மையாகச் செய்திருப்பார்கள். அதிலும் பிரமிளா... பிரம்மாண்ட நாயகி. அப்படி ராட்சஷ நடிப்பை அவரிடமிருந்து வாங்கியிருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

ஒவ்வொரு சிரிப்புக்குமான அர்த்தங்களை அந்தக் காலத்திலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொல்லியிருப்பார். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் இருந்தே... ஒரு வெடிச்சிரிப்பு சிரிப்பார் பிரமிளா. அதுதான் அவரின் கதாபாத்திரம். குணச்சித்திரம். இந்தச் சிரிப்பே படத்தின் மொத்த ஜீவனையும் சொல்லிவிடும். அந்தச் சிரிப்புதான் இந்த சமூகத்தையும் அவலங்களையும் பார்த்துச் சிரிக்கிற கேவலமான சிரிப்பு!

கிழிசல் புடவையுடன் இருப்பார் பிரமிளா. சிவகுமார் அவருக்குப் புடவை தருவார். அதை பிரமிளாவின் அப்பா எஸ்.வி.சுப்பையா பார்த்துவிடுவார். எல்லோரும் சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது, ’’வீட்ல ஒருதப்பு நடந்திருக்கு. அது மன்னிக்கவே முடியாது’’ என்பார். அப்போது, ‘’அம்மா ராபிச்சைம்மா’’ என்று குரல் கேட்கும். ’’இதைப் பண்ணினதுக்கு பிச்சை எடுக்கலாம்’’ என்பார். கடைசியில் அந்தப் புடவையும் பிரமிளாவின் உணவும் பிச்சைக்காரிக்குப் போகும். நம் மனம் கனத்துப் போகும்!

அத்தைக்காரி சினிமாப் பைத்தியம். சினிமாவுக்குப் போக காசு கேட்பாள். போவாள். வீட்டில் உணவே இல்லை. சின்னப்பயலுக்கு செம பசி. யாருக்கும் தெரியாமல் வெளியே போய், ராப்பிச்சைக்காரியிடம் உணவு வாங்கிச் சாப்பிடுவான். தெரிந்ததும், நொந்து கோபமாவாள் அம்மா, அவமானப்பட்டு, அவனை அடித்து நொறுக்குவாள். ’’பசியைப் பொறுத்துக்கமுடியலியா உனக்கு’’ என்று அடிப்பாள். அப்போது... ’’உனக்கு கோபத்தைப் பொறுத்துக்கமுடியல. அத்தைக்கு சினிமா ஆசை. அதைப் பொறுத்துக்கமுடியல’’ என்பார் பிரமிளா.

அன்றிரவு. நடந்த அவமானம் தாங்காமல், விஷம் அரைப்பாள் அம்மா. அதைத் தடுத்துக் காப்பார் பிரமிளா. ’’இனிமே நான்தான் உனக்கு அம்மா. ஏன்... ராமு சாஸ்திரிகளுக்கும் சேர்த்துதான் அம்மா’’ என்பார் பிரமிளா. தன் குடும்பத்துக்காக, குடும்ப நன்மைக்காக, எதையும் செய்யத் தயார் மனநிலைக்கு அவள் வந்துவிட்டாள் என்பதை இங்கே, இந்த இடத்தில் சொல்லாமல் சொல்லியிருப்பார் இயக்குநர்.

சென்னையில், அந்த அதிகாரி தன் உடல்தேவைக்கு லலிதாவைப் பயன்படுத்திக் கொண்டு, தம்பியின் டாக்டர் படிப்புக்கான சீட் கொடுப்பான். ’’பரவாயில்லயே. காசுபணம் எதுவுமே இல்லாம, காரியத்தை சாதிச்சிட்டியே” என்பார் ஒரு பெண். உடனே பிரமிளா, ’’காசுபணம் இல்லாமலும் காரியத்தைச் சாதிக்க இங்கே வழி இருக்கு’’ என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார். கேட்கிற அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. ஆனால், படம் பார்க்கிற நாம், அழுதுகொண்டே கைத்தட்டினோம்.

தங்கைக்குத் திருமணம். ஊரில் இருந்து வந்திருப்பார் பிரமிளா. அம்மா எம்.என்.ராஜம், பிரமிளாவின் கண்ணில் படவே மாட்டார். பார்த்தால் அம்மாக்காரி மாசமாக இருப்பாள். அதாவது மகளுக்குக் கல்யாணம் நடக்கும் வேளையில், அம்மா கர்ப்பமாக இருப்பார். மூத்த மகளைப் பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு, நாணிக்கோணுவாள்.

அப்போது பின்னணியில், ‘அம்மா... ராப்பிச்சைம்மா’ என்று குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். செருப்பால் அடித்த மாதிரியான காட்சி இது. எம்.என்.ராஜம் கூனிக்குறுகுவார். பிரமிளா வைத்த கண் வாங்காமல் அம்மாவையே பார்த்துக் கொண்டிருப்பார். ராப்பிச்சைக்கு உணவு போடுகிற சாக்கில் நழுவி வாசலுக்குப்போவார் அம்மா. அங்கே வந்த பிரமிளா... ’’உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு கேக்கறேன். இத்தனை வருஷமா இங்கே இருக்கியே.. இதை நீ பாக்கவே இல்லியாம்மா’’ என்பார். கேமரா அவள் சொன்ன திசையைக் காட்டும். ’அளவற்ற குடும்பம், இரண்டுக்கு மேல் எப்போதுமே வேண்டாம்’ எனும் குடும்பக்கட்டுப்பாட்டுக்கான விளம்பரம். தியேட்டரே வெடித்துச் சிரிக்கும்.

நீலுவிடம் பேசிக்கொண்டிருப்பார் பிரமிளா. அப்போது குழந்தை ஒன்று, பிரமிளாவின் முந்தானையை எடுத்து விளையாடும். அது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார் பிரமிளா. பிறகு, ‘ஆம்பளன்னாலே மரத்துப்போச்சு’ என்பார். அதைக் கேட்ட எம்.என்.ராஜத்துக்கு திக்கென்றாகிவிடும். இதை தன் கணவர் எஸ்.வி.சுப்பையாவை தனியே அழைத்து கலங்கிப்போன நிலையில் சொல்லுவார். ஒருநிமிடம் மெளனமாக இருந்துவிட்டு, ‘’போடிபோடி அசடு... மறந்துபோச்சுன்னு சொல்லிருக்காடி’’ என்பார் சுப்பையா. நம்மைக் கலங்கவைத்துவிடுகிற, கனக்கச் செய்துவிடுகிற காட்சி இது!

தங்கையைத் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளையைப் பார்த்ததும் பிரமிளாவுக்கு ஷாக். அந்த மாப்பிள்ளைப்பையன் சசிகுமாரும், மணமகளின் அக்காவான பிரமிளாவைப் பார்த்ததும் அதிர்ந்துதான் போவான். அப்போது ஒரு ஃப்ளாஷ்பேக். ஹைதராபாத்துக்கு வந்த சசிகுமார், ’அந்த மாதிரி’ பெண்ணைத் தேடுவான். பிரமிளாவிடம் வந்திருப்பான். எல்லாம் முடிந்த பிறகு,’’நாளைக்கு ஊருக்குப் போறேன்’’ என்பான் அவன்.

’’ஆத்துக்குப் போனதும் தோப்பனார் என்ன சொல்லப்போறாரோ’’ என்று சொல்லிச் சிரிப்பார் பிரமிளா. தடக்கென இதைக் கேட்டு ஷாக்காவார் சசிகுமார். விறுவிறுவென அருகில் வந்து, ’’நீ பிராமணப் பெண்ணா” என்று பிரமிளாவிடம் கேட்பார். ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டுவார் பிரமிளா. இன்னும் ஆவேசமாகிற சசிகுமார், பொளேரென அவரை அறைவார். போகிறவனை நிறுத்துவார் பிரமிளா. சசிகுமாருக்கு அருகில் வருவார். அவரின் தோளில் இருக்கிற பூணூலை வெளியே எடுத்துக் காட்டுவார். , ’’நீ பிராமணனா’’ என்று கேட்டுவிட்டு, பொளேரென அறைவார் பிரமிளா. தியேட்டரே கைத்தட்டி, கனத்துப் போன இதயத்துடனும் கண்ணீருடனும் இந்தக் காட்சியை ரசிக்கும்!

பின்னொரு நாளில், ஊரைவிட்டு ஓடிப் போன சிவகுமாரை அப்படியொரு சந்தர்ப்பத்தில் பிரமிளா பார்ப்பார். சிவகுமாருக்கும் பேரதிர்ச்சி. பிரமிளாவின் நிலையை அறிந்து கலங்கி அழுவார். பிறகு தங்கை திருமணத்துக்காக பிரமிளா ஊருக்கு வந்திருப்பார். அங்கே, சிவகுமாரின் அப்பா செந்தாமரை, மகன் இறந்ததாக நினைத்துக் கொண்டு, தர்ப்பணம் செய்துகொண்டிருப்பார். ’’தர்ப்பணத்தை நிறுத்துங்க மாமா. தங்கவேலுவை நான் பார்த்தேன். உயிரோடதான் இருக்கான்’’ என்று பிரமிளா சொல்லுவார். நெகிழ்ந்து போகிற செந்தாமரை, ‘’சந்தோஷமா இருக்கியாம்மா’’ என்று கேட்பார். அதற்கு பிரமிளா, ‘’எல்லாரையும் சந்தோஷமா வைச்சிருக்கேன் மாமா’’ என்பார். இந்த ஒற்றைவார்த்தைக்குள்தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள்?

தன் மகள் என்ன செய்து குடும்பத்தை உயர்த்தியிருக்கிறாள் என்று அப்பா எஸ்.வி.சுப்பையாவுக்குத் தெரிந்துவிடும். ஆச்சாரமான சாஸ்திரிகளான அவர், உடனே மகள் இறந்துவிட்டாள் என்பதைச் சொல்லாமல் சொல்லும்விதமாக மகளுக்குத் தர்ப்பணம் செய்வார். பிறகு தம்பி கமல், அக்கா பிரமிளாவை வீட்டை விட்டே துரத்துவார். ’’அவ வேணாம், ஆனா அவ படிச்ச எம்.பி.பி.எஸ் மாப்பிள்ளை மட்டும் வேணுமா’’ என்பார் எம்.என்.ராஜம். சுப்பையாவும் சேர்ந்து, துரத்தச் சொல்லுவார்.

’’அவ இல்லேன்னு தர்ப்பணம் பண்ணிட்டு, இப்ப அவளை வெளியே போகச் சொல்ல எந்த உரிமையும் இல்ல உங்களுக்கு’’ என்பார் ராஜம். அப்போது பிரமிளா, ‘’அம்மா, அவர் இன்னிக்கிதான் தர்ப்பணம் பண்ணிருக்கார். நான் எப்பவோ செத்துட்டேம்மா’’ என்பார். ஆண் பெண் வித்தியாசமில்லாமல் படம் பார்த்த எல்லோரும் விசும்பி அழுத காட்சி இது!

அரங்கேற்றம்
அரங்கேற்றம்

பிரமிளாவை வீட்டை விட்டு துரத்துவார்கள். சிவகுமார் வீட்டில் தஞ்சம் அடைவார். ’’உனக்கும் என் பையனுக்கும் கல்யாணம். உன் சம்மதம் சொல்லப்போறியா இல்லியா’’ என்று பிரமிளாவை ஏற்றுக்கொள்கிற மனநிலையில் உறுதியாகக் கேட்பார் செந்தாமரை. அப்போது ‘’எது எதுக்கோ சம்மதிச்சவ நான். இப்ப என் கல்யாணத்துக்கு சம்மதிக்கணுமா?’’ என்று கேட்பார் பிரமிளா.

நிறைவாக, சிவகுமாருக்கும் பிரமிளாவுக்குக் கல்யாணமும் ஆகிவிடும். படத்தின் ஆரம்பத்திலிருந்தே, கடற்கரையில், ’டால்டா’ டப்பாவுடன் ’அத்தான்... அத்தான்... அத்தான்...’ என்று பைத்தியமெனத் திரிவாள் தங்கம் என்றொருத்தி! முன்னதாகத்தான் பிரமிளாவுக்கு... அந்தப் பைத்தியம் கடலலையில் இறந்துவிட்டது தெரியவந்திருக்கும். இப்போது, லலிதா எனும் பெண்ணான பிரமிளா, குடும்பத்துக்காக தன் கற்பையும் மானத்தையும் கெளரவத்தையும் தொலைத்து நிற்கிற பெண், டால்டா டப்பாவுடன், ’டபடபடபடபட...’ என்று தட்டிக்கொண்டே தங்கத்தைத் தேடி ஓடுவாள். வேகமெடுத்து ஓடுவாள்... வெறிகொண்டு ஓடுவாள்... எவர் பற்றிய அக்கறையும் இல்லாமல், தான் யாரென்பதே தெரியாமல் ஓடுவாள்... மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்!

நம் அன்றாட வாழ்வில், வழியெங்கும்... மனநிலை பாதிக்கப்பட்ட, மனச்சிதைவுக்கு ஆளான, நன்றி மறந்த, காயத்தால் துண்டிக்கப்பட்ட, துரோகத்தால் உலகமே இடிந்துவிட்டதாக கலங்கி வெடித்தவர்கள், இந்த உலக நினைப்பே இல்லாமல், சாலைகளில் நடமாடிக்கொண்டிருப்பார்கள். அவர்களில் லலிதாக்களும் இருக்கலாம். லலிதா என்பது ஒரேயொரு பெண் அல்ல... மனிதம் என்பதை நமக்கு உணர்த்தியிருப்பார் கே.பாலசந்தர்.

கலர்ப் படங்கள் அதிகரித்துவிட்ட நிலையிலும் அதிகமான கறுப்பு வெள்ளைப் படங்களை எடுத்தவர் கே.பாலசந்தராகத்தான் இருக்கும். கவியரசு கண்ணதாசனின் பாடல்களுக்கு வி.குமார் இசையமைத்தார். கலாகேந்திரா தயாரித்தது இந்தப் படத்தை!

ஜெயசித்ரா இசையைக் கற்றுக்கொண்டு பாடலைப் பாடுவார். ‘மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்’ என்றொரு பாடல்.

'மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்/ முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்/ மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன/ தியாகத்தால் எமை வளர்த்த தெய்வம் கண்ட லாபமென்ன’ என்று தெய்வத்துக்கு நிகராக தன் அக்காவைப் போற்றுகிற வரிகள். அந்த வரிகளுடன்... 'ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில்/ பெண்ணாக பிறந்து விட்டாய் நாங்கள்தான் உன் மடியில்/ தன்மானம் காப்பவள் நீ சன்மானம் யார் தருவார்’ என்றும் ’கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவு இல்லை/ எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய்/ கண்மூடும் வேளையிலும் எம்மைதான் கனவு கண்டாய்’

- என்கிற வரிகளும் சேர்த்து, லலிதாவின் மொத்த சோகத்தையும் அவை எதுவுமே தெரியாமலேயே இருக்கிற தங்கையின் மூலமாக நமக்கு உணர்த்துகிற கவியரசு கண்ணதாசன், அதனால்தான் காலங்கள் கடந்தும் நம்முன் நிற்கிறார்!

சிவகுமார், சசிகுமார், கமல் (இளைஞரான கமலுக்கு இதுவே அரங்கேற்றம்), செந்தாமரை, ஜெயசித்ரா, ஜெயசுதா என பலரும் தங்கள் பங்குக்குச் சிறப்பாக நடித்தாலும் எஸ்.வி.சுப்பையா கலக்கியிருப்பார். எம்.என்.ராஜம் கலங்கவைப்பார். பிரமிளா, நடிப்பில் விஸ்வரூபமே எடுத்திருப்பார்.

1973-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி வெளியான ‘அரங்கேற்றம்’, தெலுங்கில் ‘ஜீவித ரங்கம்’ என்றும் இந்தியில் ‘ஜனா’ என்றும் அங்கேயும் மிகப்பெரிய அதிர்வுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

படம் வெளியாகி, 50 ஆண்டுகளாகின்றன. இன்னும் நூறு ஆண்டுகளானாலும், லலிதாவையும் அந்த ‘டால்டா’ டப்பாவுடன் மனப்பிறழ்வுடன் திரிகிற பெண்ணையும் ‘மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்’ பாடலையும் பிரமிளாவின் அந்த வெடிச்சிரிப்பையும் இயக்குநர் சிகரத்தின் காட்சிக்குக் காட்சியிலான ‘டச்’களையும் எவராலும் மறக்கமுடியாது; எப்போது பார்த்தாலும் அன்றைய இரவில் தூங்கவும் முடியாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in