40-ம் ஆண்டில் `வாழ்வே மாயம்’ : நம் `நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா!’

40-ம் ஆண்டில் `வாழ்வே மாயம்’ : நம் `நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா!’

குடும்பத்தை மையமாகக் கொண்ட படங்களாகட்டும், கொள்ளைக்கூட்டத்தை மையமாக வைத்து எடுத்த படங்களாகட்டும், மாயாஜாலத்துக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களாகட்டும், ஆக்‌ஷனில் புழுதி பறக்க எடுத்த படங்களாகட்டும்... சில படங்கள் நம்முடன் இரண்டறக் கலந்துவிடும். காலங்கள் பல கடந்திருந்தாலும் அந்தப் படம் ஏதோ ஒருவகையில் நம்மை ஈர்த்து, தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த வகையில், காதல் படங்களுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. அந்தக் காலத்தில், ‘தேவதாஸ்’ அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘கல்யாண பரிசு’ இன்னொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘வசந்த மாளிகை’யும் பின்னர் வெளியான ‘ஒருதலைராகம்’ திரைப்படமும் நமக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவோ மறையவோ இல்லை. அப்படியொரு படமாக வந்து, நம்மை உலுக்கிப் போட்டு, உருகவைத்ததுதான் ‘வாழ்வே மாயம்’.

தமிழ்த் திரையுலகில், தன் படத்தின் நாயகனுக்கு ராஜா என்று பெயர் சூட்டி மகிழ்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி, ரீமேக் படங்களின் நாயகன் என்றே அழைக்கப்பட்டார். வேற்று மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்து, அதை மிகப்பிரமாண்டமாகவும், அழகு குறையாமலும் ஜீவன் குலையாமலும் படங்களை எடுப்பதில் சூரர் என்று பேரெடுத்தார். தன் இனிய நண்பர் சிவாஜியை வைத்து ஏராளமான படங்களைக் கொடுத்த கே.பாலாஜி, கமல், ரஜினியை வைத்து பல படங்களைத் தயாரித்து வழங்கினார். ‘பில்லா’, ‘தீ’ , ‘விடுதலை’ மாதிரியான படங்களும் ‘சவால்’, ’சட்டம்’, ‘வாழ்வே மாயம்’ என கமலை வைத்தும் பல வெற்றிப் படங்களை உருவாக்கினார்.

அண்ணனும் தம்பியும் பிரிந்திருக்க, அவர்கள் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று ‘சவால்’ படமும், ஒரே பெண்ணை நண்பர்கள் காதலிக்க, அந்தக் காதலால் உண்மையான நட்பில் பிரிவினை ஏற்பட, கடைசியில் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதை ‘சட்டம்’ படமும், காதலையும் நோயையும் தியாகத்தையும் ஒருபுள்ளியில் இணைத்து ‘வாழ்வே மாயம்’ படமும் கொடுத்தார் கே.பாலாஜி. ‘பில்லா’ ஆர்.கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தை இயக்கினார்.

வாழ்வே மாயம்
வாழ்வே மாயம்

பணத்துக்குப் பஞ்சமில்லாதவர் ராஜா. மிகப்பெரிய செல்வந்தரின் மகன். துடுக்குத்தனமும் விளையாட்டு குணமுமாக பொழுதைக் கழிக்கிற ஜாலியான பேர்வழி. ஒருநாள் விமானப் பணிப்பெண் தேவியைப் பார்க்கிறான். பார்த்ததும் காதல் கொள்கிறான். ஆனால், அவளுக்கு அவனை ஒருசதவிகிதம் கூடப் பிடிக்கவில்லை. அவனுடைய பேச்சும், நடத்தைகளும் அசடு வழிகிற சிரிப்பும் அவளுக்குள் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தவே இல்லை.

ராஜா, தேவியைக் காதலிக்கும் விஷயத்தில், தலையால் தண்ணி குடித்துப் பார்க்கிறான். எல்லாத் திட்டங்களும் எகனைமொகனையாக ஆகின்றன. தேவியின் தோழி பேபி மூலமாக, ராதா எனும் விலைமகளைக் கொண்டும் கெட்ட ஆட்டம் போடுகிறான். இதுவும் ஒர்க் அவுட்டாகவில்லை. இப்படியான ஏகப் பிரயத்தனங்களுக்குப் பிறகு, ஒருவழியாக தேவி ராஜாவைக் காதலிக்கத் தொடங்குகிறாள்.

மிகப்பெரிய பணக்கார அப்பா மறுக்கிறார். அதேபோல, மிடில் கிளாஸ் வக்கீல் அண்ணன், தேவியிடம் ‘வேண்டாமே இந்தக் காதல்’ என்கிறார். ஆனால் இரண்டு குடும்பமும் ஒருவழியாக சம்மதிக்கிறது. திருமண ஏற்பாடுகளும் நடக்கின்றன. பத்திரிகைகள் கொடுக்கும் வேலையும் ஆரம்பமாகிவிட்டது. ஆனால், தெரிந்த மருத்துவர் மூலம் ராஜாவுக்கு வந்திருக்கும் கேன்ஸர் குறித்து, தேவியின் அண்ணன் தெரிந்துகொள்ள, அவருக்குத் தெரிந்த சாஸ்திரிகள் மூலம், திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார். அண்ணனுக்குப் பிடிக்கவில்லை என்பதாக எடுத்துக் கொண்டு, இருவரும் கோயிலில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், தேவி கோயிலில் காத்திருக்கிறாள். மருத்துவமனைக்குச் சென்ற ராஜா, தனக்கு கேன்ஸர் என்பதை அறிகிறான்.

வாழ்வே மாயம்
வாழ்வே மாயம்

பிறகு தேவியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறான். முன்பெல்லாம் எப்போதும் சிகரெட்டும் கையுமாக இருப்பவன், இப்போது குடிக்கத் தொடங்குகிறான். விலைமகளான ராதாவின் வீடே கதியென்று இருக்கிறான். ராஜாவைத் தேடி தேவி, அங்கே வருகிறாள். ’‘உம் பின்னாடி எவ்ளோ சுத்தியிருப்பேன். என்னை நாயைவிட கேவலமா நடத்துனியே. அதுக்கு பழிக்குப்பழி வாங்கத்தான் காதலிக்கிற மாதிரி நடிச்சேன்; கல்யாணம் பண்றதுக்கும் சம்மதிச்சேன். அப்புறமா அதையும் நிறுத்தினேன். இப்போ உன்னை ஒரு பய கல்யாணம் பண்ணிக்கமாட்டான்’’ என்று சொல்ல, தேவி அதிர்ந்து போவாள். ஆவேசமாவாள். ஏற்கெனவே, அண்ணன் தன் நண்பனைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தி வந்த நிலையில் அந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள். திருமணம் செய்துகொள்கிறாள். திருமணக் கோலத்துடன், ராஜாவைப் பார்க்கவேண்டும், பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாள். அப்போது தேவியின் தோழியான பேபி, சகலத்தையும் சொல்லுகிறாள். கதறியடித்துக் கொண்டு ராஜாவைப் பார்க்க வருகிறாள்.

இதேபோல், ராஜாவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர், ராஜாவின் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர். பல வருடத்துப் பழக்கம். சொல்லப்போனால், அவர் பிரசவம் பார்த்துத்தான் ராஜாவே இந்த உலகுக்கு வந்தான். ஒருகட்டத்தில், தன் நண்பனின் மகன் என்று தெரிந்ததும் உடைந்து போவார் டாக்டர். வேறுவழியின்றி, நண்பனிடமும் நண்பனின் மனைவியிடமும் அவர்களின் மகனுக்கு வந்திருக்கும் வியாதியைச் சொல்ல, அவர்களும் பதறியடுத்துக் கொண்டு, ராஜாவைப் பார்க்க வருவார்கள்.

அங்கே... ‘’நீ இறந்துபோவதற்குள் எனக்குத் தாலி கட்டி, மனைவியாக ஏற்றுக் கொள். நான் செத்த பிறகு என்னை அசிங்கமாக எவரும் சொல்லக்கூடாது. இன்னாரின் மனைவி செத்து, ஊர்வலமா போயிக்கிட்டிருக்கானு சொல்லணும்’’ என்று ராதா, ராஜாவிடம் கோரிக்கை வைக்கிறாள். அதன்படி தாலி கட்டுகிறான். எல்லோரும் வருகிறார்கள். எல்லோருக்கு முன்பாகவும் எல்லோரையும் பார்த்தபடி, ராஜா கேன்ஸர் நோயால் இறக்கிறான். படம் முடிந்தும் கூட, எழுந்திருக்க மனமில்லாமல், கனத்த இதயத்துடன் ரசிகர்கள், கண்ணீருடன் எழுந்து வந்தார்கள்.

ராஜா எனும் கதாபாத்திரத்தில், கமல். ராஜா மாதிரிதான் படம் முழுக்க பேரழகுடன் வலம் வந்து அசத்துவார். தேவி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி. கண்ணியமான நடிப்பால் அந்தக் கேரக்டருக்கு ஜீவன் கொடுத்திருப்பார். ராதா என்கிற கேரக்டரில், ஸ்ரீப்ரியா. மாறுபட்ட நடிப்பால், படம் முழுக்க வெளுத்து வாங்கியிருப்பார்.

ஸ்ரீதேவியின் அண்ணனாக ஜெய்சங்கர். அவருடைய நண்பராக பிரதாப் போத்தன். சந்தியா எனும் கேரக்டரில் அம்பிகா. கெளரவத் தோற்றம். பேபி என்கிற கதாபாத்திரத்தில், மனோரமா நடிப்பில் பிரமாதம் பண்ணியிருப்பார். கமலின் நண்பர்களாக வி.கோபாலகிருஷ்ணன், ஜூனியர் பாலையா, கிருஷ்ணமூர்த்தி நடித்தார்கள். சாஸ்திரிகளாக ஜி.சீனிவாசனும் அவரின் மகளாக சிறுமி இளவரசியும் கமலின் அம்மாவாக சுகுமாரியும் டாக்டராக கே.பாலாஜியும் நடித்தார்கள்.

வாழ்வே மாயம்
வாழ்வே மாயம்

கமல், ஸ்ரீதேவியின் அழகும் நடிப்பும் கனக்கச்சிதம். அப்படியொரு பாந்தமான ஜோடி என்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீப்ரியாவின் நடிப்பு மிரட்டல். அவரின் பாடி லாங்வேஜும் வசன உச்சரிப்பும் மிகத்தெளிவான பெண் என்பதைக் காட்டும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும். அம்பிகாவும் மிகச்சிறிய கதாபாத்திரத்தில், ஆனால் மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்திருப்பார்.

எல்லாவற்றுக்கும் ஒரு காரணமும் செயலும் வைக்கப்பட்டிருக்கும். ஸ்ரீதேவியைக் காதலிக்கும் கமல், அம்பிகாவைப் பெண்பார்க்க வீட்டாருக்காகச் செல்லுவார். அங்கே அம்பிகா, ஸ்ரீதேவியைப் போலவே தலையோரத்தில் ஒற்றை ரோஜாவைச் செருகியிருப்பார். அவர் கண்ணுக்கு ஸ்ரீதேவியாகத் தெரிவார். சம்மதித்துவிடுவார். பிறகு அம்பிகாவிடம் மன்னிப்புக் கேட்பார். தோஷமுள்ள பெண் என்று புறக்கணிக்கிற வலியை அம்பிகா பகிர்ந்து கொள்வார். ‘’உங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சுன்னாத்தான், நான் என் கல்யாணத்தைப் பத்தியும் காதலைப் பத்தியும் யோசிப்பேன்’’ என்று கமல் சொல்ல, அம்பிகா நெகிழ்ந்து போவார். அதன்படி திருமணமும் நடைபெறும். ஆனால், அந்தப் பையனுக்கு இதயத்தில் பிரச்சினை. இதைச் சொல்லாமல் மறைத்து திருமணம் நடத்த, அவன் நாலே நாளில் இறந்துபோவான். இதைச் சாதாரணமாக வைக்காமல், கதைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைத்திருப்பார்கள். இதைக் கேட்டு, ஸ்ரீதேவி ஆத்திரமாவாள். ‘’இப்படியெல்லாம் ஏமாத்தறாங்களே. உண்மையைச் சொல்லிருக்கணுமே’’ என்று பொங்குவாள். அதன் பிறகு கேன்ஸர் வந்ததை அறிந்து கொள்ளும் கமல், ஸ்ரீதேவியை விட்டுப் பிரிவதற்கு அம்பிகா கணவரின் மரணத்தையே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வார்.

அதேபோல், ஜெய்சங்கரின் நண்பர் பிரதாப். சிறு வயதில் இருந்தே ஸ்ரீதேவியை மணந்து கொள்ள ஆசைப்படுவார். ஸ்ரீதேவி தனக்கு இல்லை. கமலுக்கும் அவருக்கும் திருமணம் நடக்கிறது என அறிந்ததும், தற்கொலை பண்ணிக்கொள்ள முனைவார் பிரதாப். இதையும் அறிந்த கமல், பிரதாப்பும் ஸ்ரீதேவியும் இணைய வேண்டும் என்கிற நோக்கத்தில், ஸ்ரீதேவியைப் புறக்கணித்து, காயப்படுத்தி அழவைத்துவிடுவார். தன் நண்பர்கள், காதலுக்கு கமிஷன் கேட்க, கடுப்பாவார் கமல்.

வாழ்வே மாயம்
வாழ்வே மாயம்

இதனால், நண்பர்கள், ஸ்ரீதேவியிடம் கமல் பற்றி போட்டுக் கொடுப்பார்கள். அதை ஸ்ரீதேவி நம்புவார். வெறுப்பார். பிறகு காதலிக்கத் தொடங்கியதும், கமலுக்கு கேன்ஸர் வந்த பிறகு, அதே நண்பர்களிடம், ஸ்ரீதேவியிடம் என்னைப் பற்றி தப்பும் தவறுமாகச் சொல்லச் சொல்லுவார். ஆனால் அவர்கள் சொல்ல மறுப்பார்கள். ஒருகட்டத்தில் கமல் பேச்சை மீற முடியாமல், ஸ்ரீதேவியிடம் கமல் பற்றி அவதூறு பரப்புவார்கள். ஆனால் இந்த முறை, அவர்களை நம்பாமல், அவர்களைத் திட்டி அனுப்பிவிடுவார் ஸ்ரீதேவி.

மிகச்சிறந்த கதாசிரியரும் இயக்குநருமான தாசரி நாராயணராவ்தான் இந்தப் படத்துக்கான கதையை எழுதியிருந்தார். ‘பிரேமாபிஷேகம்’ என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். பல இடங்களில் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், தன் எழுத்தால் புகுந்து விளையாடியிருப்பார். வழக்கமாகவே அழகனான கமல், இந்தப் படத்தில் பேரழகனாகக் காட்சி தருவார். பின்னாளில், இவர் கேன்ஸரால் உருக்குலைந்து அழகு குன்றிப் போவதைக் காட்டவேண்டும் என்பதற்காகவே அப்படியொரு அழகில், முன்பாதியில் வந்தாரோ என்னவோ!

‘தேவி ஸ்ரீதேவி’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கிராமங்களில் இந்தப் பாடல் ஒலிக்காத விழாக்களே இல்லை. , ‘ஏ ராதாவே’ என்ற பாடலும் டப்பாங்குத்துப் பாடலாக களைகட்டியது. ‘நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’ என்ற பாடல், அழகிய மெலடியாக அனைவரையும் மயக்கியது. இந்தப் பாடலுக்கு கமலும் ஸ்ரீதேவியும் அப்படியொரு அழகுடன் ஜொலிப்பார்கள்.

வாழ்வே மாயம்
வாழ்வே மாயம்

‘மழைக்கால மேகம்’ எனும் டூயட் பாடலும் உண்டு. ‘வந்தனம் என் வந்தனம்’ என்ற பாடலும் , ‘வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்’ என்ற பாடலும் நம் கண்களை ஈரமாக்கும் பாடல்கள். இன்றைக்கும் இரவு வேளையில் தமிழ் ரசிகர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கிற பாடல்கள் இவை! இந்தப் படத்தின் இசையைக் கேட்டுவிட்டு, இளையராஜாதான் இசை என்று பந்தயம் கட்டித் தோற்றவர்களெல்லாம் கூட உண்டு. அத்தனைப் பாடல்களையும் வெரைட்டியாக, பியூட்டியாக செய்து, ஹிட்டாக்கிக் கொடுத்தார் கங்கை அமரன்!

‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘சட்டம்’, ஒருவிடுகதை ஒருதொடர்கதை’ போல் இந்தப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர் கங்கை அமரன், இசையமைப்பாளர் கங்கை அமரன் என அவரின் பல முகங்களில், பல திறமைகளில்... இசையமைப்பாளர் என கொடி நாட்டிய முக்கியமான படமாக ‘வாழ்வே மாயம்’ அமைந்தது. பல தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்தும் சில தியேட்டர்களில் 200 நாட்களைக் கடந்தும் ஓடி சாதனை படைத்தது.

1982-ம் ஆண்டு வெளியானது ‘வாழ்வே மாயம்’. கே.பாலாஜியின் திருமண நாள் ஜனவரி 26. இந்தநாளில், தன் படங்களை ரிலீஸ் செய்வது அவர் வழக்கம். ‘வாழ்வே மாயம்’ படமும் ஜனவரி 26-ம் தேதிதான் வெளியானது. அவர் படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு வரும் ராஜா, ராதா பெயர்கள், இந்தப் படத்தில் கமலுக்கு ராஜா என்றும் ஸ்ரீப்ரியாவுக்கு ராதா என்றும் சூட்டப்பட்டிருக்கும். படம் வெளியாகி, 40 ஆண்டுகளாகின்றன. இன்றைக்கும் நம் மனதில், ‘நீலவான ஓடையில்’ என நீந்திக்கொண்டே இருக்கிறது வெண்ணிலா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in