`எல்லா தமிழ் சினிமா படங்களிலும் திமுகவின் நுண்ணரசியல் இருக்கிறது'

குற்றம் சாட்டுகிறது பாமக
`எல்லா தமிழ் சினிமா படங்களிலும்
திமுகவின் நுண்ணரசியல் இருக்கிறது'

சினிமாவிற்கும், பாமகவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். ரஜினிகாந்த் நடித்த 'பாபா' துவங்கி விஜய் நடித்த 'சர்க்கார்', சூர்யா நடித்த 'ஜெய்பீம்' வரை அக்கட்சி ஆற்றிய எதிர்வினை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் செய்யாதது. இப்போது சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையிட விடமாட்டோம் என்று பாமக எச்சரிக்கை விட்டது அடுத்த கட்ட பிரச்சினைக்கு பிள்ளையார் சுழியானது. ஆனால், அதனையும் மீறி 'எதற்கும் துணிந்தவன்' படம் இன்று வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலும், சினிமாவும் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பு கொண்டது. காங்கிரஸ் அல்லாத முதல் திராவிடக்கட்சி ஆட்சியைத் தோற்றுவித்த அறிஞர் அண்ணா சினிமாவோடு நெருங்கியத் தொடர்புடையவர். அவர் திரைப்படங்களுக்கு எழுதிய கதை, வசனம் தமிழ் சினிமாவிற்கு புத்துயிர் ஊட்டியவை. அண்ணாவின் அழகுத்தமிழைப் பேசி நடிக்க நடிகர், நடிகைகள் விரும்பினர். அவரின் வழித்தோன்றல் கலைஞர் கருணாநிதியின் திரை வசனங்கள் திரையரங்கில் தீப்பந்தங்களாக எரிந்தன. சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தின. அவரின் எழுத்துக்காகவே படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டின.

இதன் பின் வந்த எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா என தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர்கள் எல்லாம் திரைத்துறையில் கோலோச்சியவர்கள் தான். புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டது போல அறிமுக நடிகர்களும் 'வருங்கால முதல்வரே' என்று ரசிகர்கள் மூலம் போஸ்டர் அச்சடித்து மகிழ்கின்றனர்.

திலகபாமா
திலகபாமா

இதன் காரணமாகத்தான் என்னவோ, சினிமா என்றாலே பாமக எதிர்க்கிறது என்ற மனநிலை தமிழக பாமர மக்களிடம் பதிந்துள்ளது. இதுகுறித்து பாட்டாளி மக்கள் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமாவிடம் கேட்டபோது, `` 'ஜெய்பீம்' படத்தில் வன்னியர்களை வன்முறையாளர்களாக காட்சிப்படுத்தப்பட்டதால் தான் பாமக எதிர்த்தது. அதற்குத்தான் நடிகர் சூர்யாவை பொதுமன்னிப்பு கேட்கச் சொன்னோம். ஆனால், அவர் இதுவரை கேட்கவில்லை. ஒடுக்கப்பட்டட மக்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். ஆனால், பட்டியல் சாதியினர் மட்டும் தான் அந்த நிலையில் இருப்பது போன்ற திமுகவின் நுண்ணரசியல் இன்றைய எல்லா சினிமாக்களிலும் பிரதிபலிக்கிறது. கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தாக்கி எடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? எனவே, பாமக சினிமாவை எதிர்க்கிறது'' என்றார்.

சினிமா என்றால் கூட்டுச் செயல்பாடு தானே? இதில் சூர்யாவை மட்டும் என் குறிவைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, 'சூர்யா நடித்த படம் வெற்றி பெற்றால், அது இயக்குநரின் வெற்றி என்று கொண்டாடப்படுவதில்லை. சூர்யா வெற்றி என்றே பார்க்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. எனவே, 'ஜெய்பீம்' படத்தில் நடித்த சூர்யாவை பொது மன்னிப்பு கேட்கச் சொன்னதில் என்ன தவறு?' என்று கேள்வி எழுப்பினார்.

நடிகர் ஹலோ கந்தசாமி
நடிகர் ஹலோ கந்தசாமி

தணிக்கைக்குழுவால் சென்சார் செய்யப்பட்ட படத்தை எதிர்ப்பதற்கும், திரைக்கு வராத ஒரு படத்தை எதிர்ப்பதையும் எப்படி பார்க்கிறீர்கள் என்று நடிகர் ஹலோ கந்தசாமியிடம் கேட்டதற்கு, ' ஒரு படம் திரைக்கு வந்த பிறகு அந்த படத்தில் உள்ள நிறை, குறையைச் சொல்லலாம். ஆனால், 'எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையிடவே மாட்டோம் என்பது சினிமாவிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் நல்லதல்ல' என்று கூறிய அவர், 'ஒரு காலத்தில் குடும்பப்படங்களாக வந்தன. அடுத்து காதல் படங்களாக வந்தன. அவ்வப்போது மசாலா படங்கள் வரும். அடுத்து பேய் படங்களாக வந்தன. அடுத்து சாதிப்படங்களாக வருகின்றன. இது சீசனா? பேஸனா எனத் தெரியவில்லை. ஆனால், 'ஜெய்பீம்' நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட நல்லபடம். இதைத்தடுக்க ஒரு கூட்டம் என்றால், அதை எதிர்க்க ஒரு கூட்டம் இருக்கும். சாதி, மதத்தை வைத்து பிழைப்பு நடத்தக்கூடிய ஒரு கூட்டம், அவற்றைக் கட்டிக்காக்க நினைக்கிறது. அதற்கு சினிமாவையும் பயன்படுத்த நினைக்கிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல' என்றார்.

மதுக்கூர் ராமலிங்கம்
மதுக்கூர் ராமலிங்கம்

'பாமக சினிமாவை எதிர்ப்பதற்கு பின் இருக்கும் அரசியல் மலிவான விமர்சனம் சார்ந்தது' என்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் (பொறுப்பு) கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,' 'பாபா' துவங்கி பல்வேறு படங்களுக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படம் கருத்து ரீதியாக தங்களை தாக்கியது என்று பாமக சொன்னது. ஆனால், எதற்கும் துணிந்தவன் படத்தைப் பார்க்காமலே, திரையிட அனுமதிக்க முடியாது என்கிறது. இது பாமகவின் பாசிச மனநிலை. சிவசேனாவைப் போல தமிழகத்திலும் அப்படியான புதிய கலாச்சாரத்தை கொண்டு வர பாமக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்தானது' என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in