இந்த வருடமும் தமிழ்ப் படங்கள் அதிகளவில் தேசிய விருதை வென்று குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
டெல்லியில் இன்று மாலை 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த படங்கள், நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறது.
கடந்த வருடம் ‘மண்டேலா’, ‘சூரரைப் போற்று’, 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ‘ ஆகிய படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்ற வருடத்தைப் போலவே, இந்த வருடமும் தமிழ்ப் படங்கள் அதிக விருதுகளை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
சூர்யாவின் ‘ஜெய்பீம்’, தனுஷின் ‘கர்ணன்’, ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு விருதுகள் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், ஏமாற்றம் அளிக்கும் விதமாக இந்தப் படங்களுக்கு ஒரு பிரிவில் கூட விருதுகள் கிடைக்கவில்லை.
மாறாக, ஆஸ்கரைப் போலவே ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் தேசிய விருதிலும் ஆதிக்கம் செலுத்தியது. அதிகபட்சமாக இந்தப் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்தது. ‘புஷ்பா1’ திரைப்படம் 2 விருதுகளைத் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.