41ம் ஆண்டில், பாலு மகேந்திராவின் சீனு, விஜி, ‘சுப்பிரமணி!’

- என்றைக்கும் பெளர்ணமியென ஜொலிக்கும் ‘மூன்றாம் பிறை!’
கமல், ஸ்ரீதேவி (மூன்றாம் பிறை)
கமல், ஸ்ரீதேவி (மூன்றாம் பிறை)

மனப்பிறழ்வுக்கு ஆளானவர்கள் மீது பேரன்பு செலுத்துபவர்களை ‘தாயுமானவன்’கள் என்கிறோம். வளர்ந்த முழு நிலா ஒன்று, விபத்தினால் பிறை போல் தன்னைச் சுருக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட, அங்கே ‘தாயுமானவன்’ போல் ஒருவன் செலுத்துகிற அன்புதான் ‘மூன்றாம்பிறை’.

ஊட்டியில் வாத்தியார் வேலை பார்க்கும் சீனு என்கிற சீனிவாசன், சென்னையில் நண்பனைச் சந்திக்கிறான். அதேசமயத்தில், தன் நண்பர்களுடன் கடற்கரையில் பாடியும் ஆடியும் திரிந்துவிட்டு, காரில் பயணிக்கிறாள் பாக்யலட்சுமி. அப்போது விபத்துக்குள்ளாகிறது கார். பாக்கியலட்சுமியின் மூளை நரம்புகளும் நினைவுகளை இழக்கின்றன. கல்லூரி மாணவியாக இருக்கும் பாக்யலட்சுமிக்கு, ஏழு வயதுக்குள் உண்டான நினைவுகளே மிஞ்சியிருக்கின்றன. வழுக்கையான அப்பாவை யாரென்று கேட்கிறார். அம்மாவை யாரென்று கேட்கிறாள். ‘’எப்போது குணமாகும் என்று தெரியாது. ஆனால் ஒருநாள் குணமாகிவிடும்’’ என்கிறார் மருத்துவர்.

சிகிச்சையில் இருக்கும் பாக்யலட்சுமி, ‘’அம்மாகிட்ட போகணும்’’ என்று அழ, அவளை விபச்சார விடுதிக்கு அழைத்துச் சென்று விற்கிறான் எவனோ ஒருவன். விடுதியை நடத்தும் பெண்மணி இவளை சேர்த்துக்கொள்கிறாள். விஜி என்று பெயர் சூட்டுகிறாள். சென்னை நண்பன் விளையாட்டாக குடிக்க வைக்க, பிறகு ‘அந்த’ மாதிரி அனுபவம் உண்டா என்று கேட்டு, விடுதிக்கு அழைத்துவருகிறான். அங்கு விஜியைப் பார்க்கிறான் சீனு.

வெட்கத்துடனும் தயக்கத்துடனும் வாழ்வில், முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு அண்மையில் வரும் வேளையில், தம்ளரை வீசி அவனை அடிக்கிறாள் விஜி. ஆனால் அவளின் பேச்சும், ‘’அம்மாகிட்ட போகணும், பசிக்குது, சாப்பாடே போடலை’’ என்பதும் சீனுவை என்னவோ செய்கிறது. மீண்டும் அங்கு செல்கிறான். விஜியைப் பார்க்கிறான். அழுகிறாள். அவளிடம் உள்ள குழந்தைமையை உணருகிறான். மூன்றாவது முறையாக வந்து, ‘’வெளியே அழைச்சிட்டுப் போயிட்டு, காலைல கொண்டு வந்து விட்டுடறேன்’’ என்று விஜியை கூட்டிக்கொண்டு, ஊட்டிக்கு ரயிலேறுகிறான் சீனு!

யாருமற்ற அவனுக்கு பக்கத்து வீட்டு பாட்டிதான் எல்லாமே. அவளும் விஜியை அரவணைக்கிறாள். அங்கே லேத் பட்டறை வைத்திருக்கும் நடராஜ், விஜியை ஒருமாதிரியாகப் பார்க்கிறான். பள்ளி முதலாளி வயதானவர். அவருக்கு இரண்டாம் தாரமாக வந்து வாய்த்திருப்பவளுக்கோ, சீனுவின் மீது இரண்டுகண்களும்!

ஒரு குழந்தையாக விஜியைக் கவனித்தபடி வாழ்கிறான் சீனு. உள்ளே அவள் மீது அப்படியொரு பிரியம்; அப்படியொரு காதல். ‘’யாருமே இல்லாத நமக்கு இவள்தான் எல்லாமே!’’ என்று நினைத்தபடி வாழ்கிறான். இந்தநிலையில், ’மகளைக் காணோம்’ என்று அப்பா போலீஸில் புகார் கொடுக்கிறார். அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

வழியில் அழகான குட்டி நாயை எடுத்துக்கொள்ளும் விஜி, அதற்கு ‘சுப்பிரமணி’ என்று பெயரிட்டு வளர்க்கிறாள். பள்ளிக்கூட முதலாளியம்மா, அசடு வழிகிறார் என்பதைத் தெரிந்துகொண்ட போதும், அதற்கு கட்டுப்படாமலும் சிக்காமலும் நேர்மை காக்கிறான் சீனு. அதேசமயம், நாய்க்குட்டி போல் மடியில் சுருண்டு கிடப்பவளை, தாலாட்டுப் பாடி தூங்கவைக்கும் அளவுக்கு பேரன்பாளனாக இருக்கிறான்.

பேப்பரில் பாக்கியலட்சுமி என்கிற விஜியின் புகைப்பட அறிவிப்பு வருகிறது. அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு ஒருவர், அவளின் அப்பாவைப் பார்க்க, அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்று, விவரம் சொல்ல... கொஞ்சம் கொஞ்சமாக சீனுவை நெருங்குகிறது போலீஸ்.

இந்த சமயத்தில் மலையில் உள்ள சித்த மருத்துவர் குறித்து தெரிய வர, அங்கே விஜியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறான். அவளுக்குச் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அந்த சமயத்தில், போலீஸாரும் பாக்யலட்சுமியின் அப்பாவும் அம்மாவும் சீனுவின் வீட்டுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு இடமாகத் தேடி விசாரித்து, சிகிச்சை பெறுகிற இடத்தை அடைகிறார்கள். சிகிச்சை முடிகிறது. கண் விழிக்கிறாள். அப்பாவைப் பார்க்கிறாள். அம்மாவைப் பார்க்கிறாள். அவர்களை கட்டிக் கொள்கிறாள். அவளுக்குப் பழைய நினைவுகள் வந்துவிட்டன. அதாவது, பாக்கியலட்சுமியாக வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு திரும்பிவிட்டது. ஆனால், விஜியாக வாழ்ந்ததும், சீனு கொடுத்த வாஞ்சையும் அவளுக்குத் தெரியவே இல்லை.

பெற்றோர் வந்து அவளை அழைத்துச் சென்றதையும் ரயிலுக்குக் கிளம்புகிறார்கள் என்பதையும் அறிந்து, விழுந்தடித்துக்கொண்டு ரயிலடிக்கு ஓடுகிறான் சீனு. ரயிலுக்குள் அமர்ந்திருக்கும் விஜியைப் பார்க்கிறான்.

‘விஜி... விஜி..’ என்கிறான். அவள் திரும்பிக் கூட பார்க்கவில்லை. மீண்டும் ‘விஜி... விஜி..’ என்று கூப்பிடுகிறான். அவளுக்கு எதுவும் தெரியவில்லை. தன்னுடன் விஜி இருந்தபோது, என்னவெல்லாம் செய்து குஷிப்படுத்தினானோ... அதையெல்லாம் செய்துகாட்டுகிறான். ‘’யாரோ பைத்தியம் போல’’ என்று உணவுப்பொட்டலத்தை அவன் மீது வீசுகிறாள்.

ரயில் கிளம்புகிறது. அவனும் பின்னே ஓடுகிறான். ரயில் வேகமெடுக்கிறது. அப்படியே பரிதாபமாக விழுந்து, இடித்துக்கொண்டு, குட்டிக்கரணம் போட்டபடி, மெல்ல நகர்ந்து, பிளாட்பாரத்தின் பெஞ்ச்சில் அமருகிறான். விஜி பிரிந்துவிட்டாள். அந்த ‘தாயுமானவன்’ சீனுவை விட்டுப் பிரிய மனமின்றி, திரையரங்குகளில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியே வந்தோம்.

சீனுவாக கமல். பாக்கியலட்சுமியாக, விஜியாக ஸ்ரீதேவி. முதலாளி பூர்ணம் விஸ்வநாதன். அவரின் மனைவி சில்க் ஸ்மிதா. பாட்டியாக சீதாப்பாட்டி. லேத்பட்டறை கே.நட்ராஜ். நண்பனாக ஒய்.ஜி.மகேந்திரன். விபச்சார விடுதியாளராக காந்திமதி. ஸ்ரீதேவியின் அப்பா வீரராகவன். முக்கியமாக, அந்த ‘சுப்பிரமணி’ நாய்க்குட்டி! சுமார் பத்து கேரக்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு, ஒரு நாவலைப் போல் படமெடுத்திருப்பார் பாலு மகேந்திரா.

பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கிற நண்பன், நண்பன் வற்புறுத்தலால் சென்றபோதும் ‘ஸ்லிப்’ ஆகாமல் இருக்கிற சீனு, பணமும் வசதியும் இருப்பதால் கல்யாணம் செய்துகொண்ட பூர்ணம் விஸ்வநாதன், இரண்டாவது மனைவி என்று வாழ்ந்தாலும் இளமைக்கு ஏங்குகிற சில்க் ஸ்மிதா, ‘யாராக இருந்தாலென்ன, அவளின் அனுமதியெல்லாம் பார்க்காமல், எப்படியாவது அவளை அடையவேண்டும்’ என வன்புணர்வு செய்யப் பார்க்கும் கே.நட்ராஜ்... இப்படி ஒவ்வொருவருக்குள்ளேயும் உணர்வுகளின் ஓட்ட மாறுபாடுகளையும் சொல்லி, இப்படியான மனிதர்களுக்கு மத்தியில்தான் கதையின் நாயகன் சீனு, சிறுமி மனநிலையில் இருக்கும் ஓர் இளம்பெண்ணை குழந்தையாகவே பாவிக்கிறான் என்று கதையோட்டத்தை படைத்திருப்பார் பாலுமகேந்திரா.

இளம்பெண்ணுக்கான ஸ்டைலும், குழந்தைத்தனத்துக்கே உண்டான நெளிவுசுளிவு பாடி லாங்வேஜும் கொண்டு, மழலை பேசி காட்சிக்குக் காட்சி அசத்தியிருப்பார் ஸ்ரீதேவி. இயலாமையை பூர்ணம் விஸ்வநாதன் இயல்பாக வெளிப்படுத்த, தாபத்தை, மிக கண்ணியமாக தன் நடிப்பால் கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருப்பார் சில்க் ஸ்மிதா. கே.நட்ராஜின் வெறித்தனமும், இரண்டொரு காட்சிகளில் வருகிற ஒய்.ஜி.மகேந்திரனையும் மறக்கமுடியாது. அதேபோல், காந்திமதியின் இழுத்து இழுத்து பேசியது அந்த கதாபாத்திரத்துக்கு நியாயமானது.

மலங்கமலங்க முழிக்கும் ஸ்ரீதேவியிடம் ‘’உங்க வீடு எங்கே இருக்கு?’’ என்று கேட்பார் கமல். ‘’கோயில் இருக்குமே... கோயில் கோபுரத்துல கூட புறால்லாம் இருக்குமே... கைத்தட்டினா புறால்லாம் பறந்துருமே... அந்தக் கோயிலுக்குப் பக்கத்துல’’ என்பார் ஸ்ரீதேவி. வழியில், குரங்காட்டியாக லூஸ் மோகன் சொல்லும் வசனங்களையும் குரங்கின் சேட்டைகளையும் பார்த்துவிட்டு, ஸ்ரீதேவியை குஷிப்படுத்த, குழந்தையாகவே மாறி கமல் விளையாடும் அழகு, ரசனைமிக்க கவிதை எபிசோடு.

‘’மணியாயிருச்சு படு’’ என்று ஸ்ரீதேவியிடம் சொல்லிவிட்டு, ‘’பாத்ரூம் போயிட்டுதானே வந்தே?’’ என்று குழந்தையிடம் கேட்பது போல் கேட்பதாகட்டும், சாக்கடையில் நிறம் மாறிவிட்ட நாயை எடுத்துவந்த பிறகு, நரிக்கதை சொல்லி, ஸ்ரீதேவியுடன் லூட்டி அடிப்பதாகட்டும், இங்க் பாட்டிலை எடுத்து ‘சுப்பிரமணி’க்கு பொட்டு வைக்கிறேன் என்று அந்த ஷெல்ப்பையே உடைத்து, எழுதிவைத்த ரிக்கார்டு நோட்டையெல்லாம் நாசம் செய்யும் போது ஸ்ரீதேவி மீது வருகிற இயல்பான கோபமாகட்டும், அந்தக் களேபரத்தில், சமையல் வீணாகிப் போவதாகட்டும்... ஒரு நாவலுக்கே உண்டான சம்பவ யதார்த்தங்களை அப்படியே வார்த்து காவியம் படைத்திருப்பார் பாலுமகேந்திரா.

இப்படியொரு படத்தை, அதன் அழகியலைச் சிதைக்காமல், துணிச்சலுடன் எடுத்ததற்காக தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் ஜி.தியாகராஜனை பாராட்ட வேண்டும். இப்படியான படங்கள் பாலுமகேந்திராவுக்கும் கமலுக்கும் புதிதில்லை. ஆனாலும், அந்த ஜீவனை அப்படியே உள்வாங்கி, எந்த வணிக சமரசங்களும் இன்றி இருவருமே அவரவர் எல்லையில் நின்று ஜாலம் பண்ணினார்கள்.

‘வானெங்கும் தங்கவிண்மீன்கள்’ என்ற பாடலில், ’கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்/ கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்’ என்ற வரிகளிலும் ‘வானிலொரு தீபாவளி நாம் காணலாம்’ என்ற வரியிலும் கவிப்பேரரசு வானவில் எழுத்துகளால் வசீகரித்திருப்பார். எஸ்.பி.பி - ஜானகி விளையாடியிருப்பார்கள்.

‘ஓடி வந்த குள்ள நரி கால் தவறி வீழ்ந்ததடி/ நீல நிறச் சாயம் வெச்ச தொட்டி ஒன்றிலே/ அது நிறம் மாறிப் போனதடி சின்ன பொம்பளே’ என்ற பாடலையும் வைரமுத்து எழுத, அதில் ஸ்ரீதேவியை கேரக்டரை உணர்த்தும் விதமாக ‘சின்ன பொம்பள’ என்று பயன்படுத்தியிருப்பார். கமலும் ஸ்ரீதேவியும் பாடினார்கள்.

’பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது’ என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் நெக்குருகிப் பாடினார். காதலியைத் தூங்கவைக்கும் பாடலாக 'கண்ணே கலைமானே’ பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியதையும், அதுவே நம் கவியரசரின் கடைசிப் பாடலாகவும் அமைந்ததையும் யாரால் மறக்கமுடியும்?

கமல், சில்க் ஆடுகிற ஆட்டம் புது தினுசு. காஸ்ட்யூம் புது ரகம். 'இளமை இது ஏங்கும் வயது இரு விழியும் தூங்காது/ இனிமை சுகம் வாங்கும் மனது...’ எனும் பாடலை கங்கை அமரன் எழுதினார்.

எல்லாப் பாடல்களையும் ஹிட் கொடுத்து அசத்தினார் இளையராஜா. அதிலும் பின்னணி இசை, அந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளை நமக்குள் ஊடுருவச் செய்திருப்பார். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கத்தைச் செய்து தன் ஆளுமை மிக்க படைப்பாகை வெளிப்படுத்தினார் பாலுமகேந்திரா.

சிறந்த நடிகர் எனும் தேசிய விருது, தமிழக அரசின் விருது, சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது, தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான ஸ்ரீதேவிக்கு விருது என வாங்கிக் குவித்தது இருக்கட்டும். இப்படியொரு படம், மக்களின் படமாக, மக்களின் ரசனையை மேம்படுத்தும் படமாக வெள்ளிவிழா கொண்டாடியதுதான் ‘மூன்றாம் பிறை’யின் முழுமையான சாதனை!

1982ம் ஆண்டு, பிப்ரவரி 19ம் தேதி வெளியானது ‘மூன்றாம் பிறை’. படம் வெளியாகி, 41 ஆண்டுகளாகின்றன. இன்னமும், ‘பொன்மேனி உருகுதே’ பாடலில் உருகித்தான் போகிறோம். ‘பூங்காற்று புதிரானது’ என குழம்புவதை ரசிக்கிறோம். ‘வானெங்கும் தங்கவீண்மீன்கள்’ என்று கேட்டு மிதக்கிறோம். ‘முன்னமொரு காலத்துல’ என்று நாமும் நம் குழந்தைகளுடன் விளையாடிப் பாடுகிறோம். ‘கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே’ என்று நெகிழ்ந்து போகிறோம்.

பாலுமகேந்திராவின் சீனுவும் விஜியும் அந்த ‘சுப்பிரமணி’யும் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், முழு பெளர்ணமியென நம் மனதில் ஜொலித்து, தகதகத்துக் கொண்டே இருப்பார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in