2023 Rewind | சிவகார்த்திகேயன் முதல் த்ரிஷா வரை... பிரபலங்களைச் சுழற்றியடித்த சர்ச்சைகள்!

2023 Rewind | சிவகார்த்திகேயன் முதல் த்ரிஷா வரை... பிரபலங்களைச் சுழற்றியடித்த சர்ச்சைகள்!

பிரபலம் என்றாலே கூடவே சர்ச்சைகளும் அவர்களோடு இருப்பது வாடிக்கையாகி விட்டது. அப்படி திரையுலகில் இந்த வருடமும் பஞ்சாயத்துகளுக்குப் பஞ்சம் இல்லாமல் முடிந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் முதல் த்ரிஷா வரை இந்த வருடம் தமிழ் சினிமாவில் பிரபலங்கள் சந்தித்த சர்ச்சைகளை ரீவண்ட் பண்ணலாம் வாங்க...

சிவகார்த்திகேயன் - இமான் மோதல்:

நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் அவருக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் இமான். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இமான் -சிவகார்த்திகேயன் இணைந்து வேலைப் பார்க்கவில்லை. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பியபோது, சிவகார்த்திகேயன் தனக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும், தனது குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்து, இந்த விஷயம் குறித்து அதிகம் வெளிப்படையாக பேச முடியாது என்று இமான் கூற, பற்றிக் கொண்டது பஞ்சாயத்து. இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் சிவகார்த்திகேயன் இணைத்து வைக்க முயற்சித்ததைதான் இமான் அவ்வாறு கூறினார் என மோனிகா பேசினார். ஆனால், இதுவரை சிவகார்த்திகேயன் தரப்பு இதுகுறித்து இன்னும் வாய் திறக்கவில்லை.

ரஜினி vs விஜய்:

’சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு வெளிப்படையாகவே மோதிக் கொண்டார்கள் விஜயும் ரஜினியும். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என ரசிகர்கள் சண்டை ஆரம்பிக்க, ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘காகம்-கழுகு’ குட்டிக் கதை சொல்லி விஜயை சீண்டினார் ரஜினி. இதற்கு பதிலடியாக ‘லியோ’ வெற்றி விழாவில், ‘ஆசைப்பட்டா என்ன தப்பு?’ என கோல் போட்ட விஜய், சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான் என பின்பு சரண்டர் ஆனார்.

மன்சூர் அலிகான்-த்ரிஷா விவகாரம்:

’கைதி’ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு மன்சூர் அலிகானுக்கு மிஸ்ஸாக ‘லியோ’ படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. படம் முடித்ததும் வேறொரு படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மன்சூர் பேசியதுதான் சர்ச்சையானது. த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சியைப் படத்தில் எதிர்பார்த்ததாகவும் ஆனால், அது கிடைக்கவில்லை எனவும் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதை கண்டித்து த்ரிஷா ட்வீட் போட, தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு காவல்நிலையம் வரை விஷயம் சென்றது. மன்சூரிடம் விசாரணை நடத்தியது. இவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, கண்டிப்பு தெரிவித்துள்ளது நீதிமன்றம்.

விசித்ராவின் ‘மீ டூ’ புகார்: 

விசித்ரா
விசித்ரா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே கவனம் ஈர்க்கும் போட்டியாளராக விளையாடி வருகிறார் விசித்ரா. உங்கள் வாழ்க்கையில் வடுவாக பதிந்த விஷயம் எது என பிக் பாஸ் கேட்க, தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவர் தன்னை பாலியல் இச்சைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தியது குறித்தும், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஒருவனைப் பற்றி் சொன்னதற்காக அத்தனை பேர் முன்னிலையிலும் டான்ஸ் மாஸ்டர் கன்னத்தில் அறைந்ததும் ஆறாத வடுவாக மாறிவிட்டத்தைப் பகிர்ந்தார் விசித்ரா. இது பெரும் விவாதத்தை வெளியில் கிளப்பியது. அந்த நடிகர் பாலகிருஷ்ணா என இணையவெளியில் கண்டனம் கிளப்பியதோடு விசித்ராவுக்கும் பலரும் ஆதரவும் கொடுத்தனர்.

’பருத்திவீரன்’ பஞ்சாயத்து:

'பருத்திவீரன்' படப்பிடிப்பு சமயத்தில் நடந்த பொருளாதார பிரச்சினை தற்போது இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையிலான பிரச்சினையாக மீண்டும் வெடித்துள்ளது. படம் தொடர்பான வழக்கு 17 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் கார்த்தியின் 'கார்த்தி 25' விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என அமீர் தெரிவித்திருந்தார்.

இதனால் 'பருத்திவீரன்' பிரச்சினை மீண்டும் வெடித்தது. தன்னைப் பொருளாதார ரீதியாக அமீர் ஏமாற்றினார் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டிக் கொடுத்து இயக்குநர் அமீருக்கு திருட்டுப்பட்டம் சூட்டினார். இதற்கு பதில் அறிக்கை விட்ட அமீர், நடந்த உண்மை என்பது எல்லாருக்கும் தெரியும் எனவும், திரைத் துறையில் உண்மை தெரிந்தவர்களுமே அமைதி காப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், பாரதிராஜா, சேரன் என பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். அவசரத்தில் வார்த்தையை விட்டுவிட்டு இப்போது அவஸ்தையை அனுபவித்து வருகிறார் ஞானவேல்ராஜா.

x
காமதேனு
kamadenu.hindutamil.in