
மனைவி ஆலியாவின் மறுபக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் நவாசுதீன் சித்திக்.
நடிகர் நவாசுதீன் சித்திக் மீது அவரது மனைவி ஆலியா அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனிடையே, நடிகர் நவாசுதீன் சித்திக் இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது அமைதியின் காரணமாக அனைத்து இடங்களில் நான் மோசமானவர் என சித்தரிக்கப்படுகிறேன். என் பிள்ளைகள் அதை வேடிக்கையாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் நான் அமைதியாக இருந்தேன். எனது குணம் குறித்து ஒருதலைபட்சமாக சொல்லப்படும் கட்டுக்கதைகள் மற்றும் சமூக வலைதளங்கள், பத்திரிகைகளில் வெளியாகும் வீடியோவை பார்த்து ஒரு குறிப்பிட்ட மக்கள் ரசிக்கின்றனர். சில விஷயங்களை நான் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
முதலாவதாக நானும் ஆலியாவும் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழவில்லை. நாங்கள் ஏற்கெனவே விவாகரத்து செய்துவிட்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே எங்களிடம் ஒரு புரிதல் இருந்தது. துபாயில் படிக்கும் குழந்தைகள் ஏன் இப்போது இந்தியாவில் இருக்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?. 45 நாட்களாக அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என பள்ளியிலிருந்து எனக்கு தினமும் கடிதம் அனுப்புகிறார்கள். எனது குழந்தைகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளியை தவறவிடுகிறார்கள். பணத்துக்காக பிள்ளைகளை துபாயில் இருந்து இந்தியா அழைத்து வந்துள்ளார் ஆலியா. மாதம் 10 லட்ச ரூபாய் அவருக்கு கொடுத்து வருகிறேன்.
அது தவிர கல்வி, மருத்துவம் உட்பட அனைத்து செலவுகளையும் நான் தான் கவனித்து வருகிறேன். அவர் துபாய் செல்வதற்கு முன்பு 5 லட்சம், 7 லட்சம் ரூபாய் வரை மாதம் கொடுத்து வந்தேன். அவருக்கு சீரான வருவாயை உறுதி செய்ய வேண்டி 3 படங்களுக்கு நான் நிதி உதவி வழங்கினேன். மேலும், சொகுசு கார்களை வாங்கி கொடுத்தேன். ஆனால், அவர் அதனை விற்றுவிட்டார். மும்பையில் குழந்தைகளுக்காக அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குடியிருப்பை வாங்கி கொடுத்துள்ளேன். அதில் ஆலியா இணை உரிமையாளராக உள்ளார். துபாயில் அவர்கள் தங்கியுள்ள வீட்டுக்கு வாடகை செலுத்தி வருகிறேன். இருந்தும் ஆலியாவுக்கு பணம் தான் முக்கியம். அதனால் பல்வேறு வழக்குகளை என் மீதும், என் தாயார் மீதும் அவர் தொடுத்துள்ளார். இதை கடந்த காலங்களிலும் அவர் செய்துள்ளார். இது அவரது வழக்கம். அவர் கேட்கும் பணத்தை கொடுத்தால் வழக்குகளை வாபஸ் பெறுவார். இது குற்றச்சாட்டு அல்ல, ஆனால், எனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.