மீண்டும் ஹங்கேரி இசைக்குழுவுடன் கைகோத்த இளையராஜா: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘மியூசிக் ஸ்கூல்’

மீண்டும் ஹங்கேரி இசைக்குழுவுடன் கைகோத்த இளையராஜா: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘மியூசிக் ஸ்கூல்’

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் ஹங்கேரிக்குச் சென்று திரும்பினார். முன்னதாக மழை காரணமாக, துபாய் வழியாக ஹங்கேரி செல்லும் விமானத்துக்காக சென்னை விமான நிலையத்தில் அவர் ஏழு மணி நேரம் காத்திருந்தது செய்தியானது. ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் தங்கியிருந்த இளையராஜா, பழமைவாய்ந்த அந்நகரின் அழகிய காட்சிகளைப் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.

பின்னர் ஹங்கேரியிலிருந்து திரும்பியபோது விமான நிலையத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அவர் சந்தித்ததும், அது தொடர்பான காணொலியை சமூகவலைதளங்களில் ரஹ்மான் பகிர்ந்ததும் பேசப்பட்டன.

இந்நிலையில், ’மியூசிக் ஸ்கூல்’ எனும் திரைப்படத்துக்கான பின்னணி இசையை உருவாக்கும் பணிக்காக அவர் ஹங்கேரி சென்றிருந்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

‘தி சவுண்ட் ஆஃப் மியூசிக்’

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநருமான பாப்பா ராவ் பிய்யாலா, தற்போது ‘மியூசிக் ஸ்கூல்’ எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார். தற்போதைய கல்விச் சூழலில் குழந்தைகளின் கலையார்வம் பாதிப்புக்குள்ளாவது குறித்துப் பேசும் படைப்பாக இந்தப் படம் உருவாகிவருகிறது.

பாலிவுட் நடிகர் சர்மான் ஜோஷி, நடிகை ஸ்ரேயா சரண், பாடகர் ஷான் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்துக்காக மொத்தம் 11 பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் மூன்று பாடல்கள் புகழ்பெற்ற ஹாலிவுட் கிளாஸிக் மியூசிக்கல் திரைப்படமான ‘தி சவுண்ட் ஆஃப் மியூசிக்’ திரைப்படத்தில் இடம்பெற்றவை.

இப்படத்தில் இளையராஜாவின் பாடல்களுக்குப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடன இயக்குநர் ஆடம் முர்ரே, பாலிவுட் நடன இயக்குநர் சின்னி பிரகாஷ், கோலிவுட் நடன இயக்குநர் ராஜு சுந்தரம் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர்.

’தி சவுண்ட் ஆஃப் மியூசிக்’ படத்தின் பாடல்களை லண்டன் ஃபில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா துணையுடன் பதிவுசெய்த பாப்பா ராவ் பிய்யாலா, படத்தின் பின்னணி இசையை ஹங்கேரியின் புடாபெஸ்ட் சிம்பனி இசைக்குழுவின் துணையுடன் உருவாக்க விரும்பினார். இதையடுத்து இளையராஜாவுடன் ஹங்கேரி சென்றார்.

அங்கு இளையராஜாவின் இசைக்குறிப்புகளை புடாபெஸ்ட் சிம்பனி இசைக்குழுவினர் வாசித்து, பின்னணி இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

ஹங்கேரி இசைக் குழுவுடனான இளையராஜாவின் பயணம், ராஜீவ் அஞ்சல் இயக்கிய மலையாளப் படமான ‘குரு’ (1997) படத்திலிருந்து தொடங்கியது. அதன் பின்னர் கமல்ஹாசனின் ’ஹே ராம்’, ஹரிஹரன் இயக்கிய ‘பழசிராஜா’ உட்பட பல்வேறு படங்களுக்கு அந்த இசைக்குழுவை இளையராஜா பயன்படுத்திக்கொண்டார். அவர் இசையமைத்த ‘திருவாசகம் இன் சிம்பனி’ ஆல்பமும் ஹங்கேரியில்தான் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஹங்கேரி இசைக்குழுவுடன் இளையராஜா மீண்டும் பணியாற்றியிருக்கும் ‘மியூசிக் ஸ்கூல்’ திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in