70-களில் தொடங்கி எண்பதிலும் தொடரும் ராஜாவின் ராஜாங்கம்!

70-களில் தொடங்கி எண்பதிலும் தொடரும் ராஜாவின் ராஜாங்கம்!

தூக்கமில்லாத இரவுகளைக்கூட கடந்துவிடலாம். ஆனால் இசையில்லாத இரவுகளே இல்லை. இரவின் தனிமையில், செவிகளுள் நுழைந்து, இதயத்தை முழுவதுமாக ஊடுருவி, உயிருடன் கலக்கும் இசையே, நம் இரவுகளின் தோழமை. இரவுப் பொழுதை நீட்டிப்பதும் அல்லது குறைப்பதும் இசையின் மாயாஜாலம். அரைத் தூக்கத்துடன் சாலைகளில் பயணிக்கும் டிரைவர்களுக்கு மூன்றாவது கண்ணாகவும் இன்னுமிரு கைகளாகவும் இருந்து பயணத்தை இலகுவாக்குவதும் உற்சாகப்படுத்துவதும் இசையே! அந்த செப்படி வித்தை இசைக்குச் சொந்தக்காரர்... இளையராஜா.

1976-ம் ஆண்டு தொடங்கிய ராஜாவின் பயணம், நம் வாழ்க்கைப் பயணத்துடன் இரண்டறக் கலந்துவிட்டதாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அறிமுகமாகி, ஐந்தாறு ஆண்டுகள் கழித்து கொஞ்சம்கொஞ்சமாக நம்மை வசீகரிக்கவில்லை, ராஜாவின் இசை. இலக்கு தப்பாத அம்பைப் போல், ‘அன்னக்கிளி’யிலேயே அந்த இசை நம்மைச் சொக்கிப் போட்டுவிட்டது.‘மச்சானைப் பாத்தீங்களா’ என்ற பாட்டைக் கேட்டுவிட்டு, ‘இந்தப் பாட்டைக் கேட்டீங்களா?’ என்று பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள் தமிழ் மக்கள். ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’ என்ற பாடலைக் கேட்டு, ‘இளையராஜாவின் முகம் எப்படியிருக்கும்’ என்று தேடத் தொடங்கியது ரசிகக் கூட்டம்.

1976-ம் ஆண்டுக்கு முந்தைய இசையையும் அதன் பின்னே நமக்குக் கிடைத்த இசையையும் கோடு கிழித்துப் பகுத்துப் பார்க்கலாம். ‘நம்மூர் இசை’ என்று ராஜாவின் இசையை வாரியணைத்துக்கொண்டான் ரசிகன். நான்கு நிமிடப் பாட்டுகளாகட்டும், இரண்டரை மணி நேரத் திரைப்படமாகட்டும்... பாடல்களும் பின்னணி இசையும் படம் பார்ப்பவர்களுக்குக் கதைகளைச் சொல்லின. சினிமா என்பது காட்சி மொழி என்பதையும் தாண்டி, திரைப்படம் என்பது இசையின் மொழியாகவும் இருக்கும் என்பதையும் இசையின் மூலமாகவும் கதையைச் சொல்லலாம் என்பதையும் இளையராஜாவின் இசை புதிய பாதையைப் போட்டுக் கொடுத்தது.

எழுபதுகளின் நடுவே அறிமுகமான இளையராஜா, எண்பதுகளின் தொடக்கத்துக்குள்ளேயே விதவிதமான பாடல்களைக் கொடுத்தார்; புதுசுபுதுசான இசையை வழங்கினார். இந்த நான்கு ஆண்டுகளில் வந்த பாடல்கள், இன்றைக்கும் நாம் முணுமுணுக்கிற, கேட்கிற, கேட்டுக் கிறங்குகிற பாடல்களாக அமைந்ததுதான் ராஜ இசையின் வசியத்துக்குச் சான்றுகள்!எழுபதுகளில் 1976-ம் ஆண்டு என்பது மத்திய வருடம். அதில் மே மாதம் என்பது மத்திய மாதம். நடுவில் அறிமுகமான இளையராஜா, இசையின் நடுநாயகனாக, நாயகனாக இன்றுவரை ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ராஜாங்கம் செய்துகொண்டிருக்கிறார். ‘அன்னக்கிளி’யில் ‘மச்சானைப் பாத்தீங்களா’ ஒலிக்காத ஊரும் கிராமமும் இல்லை. அடுத்து, ‘பாலூட்டி வளர்த்த கிளி’ படத்தில், ‘நான் பேச வந்தேன்’ என்ற பாடலில், காதலும் இசையும் கைகோத்துக்கொண்டு நம்மைக் கைப்பிடித்து எங்கோ அழைத்துச் செல்லும். அதே வருடத்தில், ‘உறவாடும் நெஞ்சம்’ என்றொரு படம்... ‘ஒருநாள் உன்னோடு ஒருநாள்’ என்ற பாட்டையும் டிக்டிக் ஓசையையும் புல்லாங்குழலையும் வயலினையும் இழையவிட்ட ஜாலத்தையும் யாரால் மறக்க முடியும்? ‘ஒருநாளா... ஒரு வருடமா... ஜென்மம் முழுக்க ராஜாவின் இசை தேவை’ என்பதை ஒவ்வொரு ரசிகனும் உணர்ந்து சிலிர்த்தான்.

இதே ஆண்டில், ‘பத்ரகாளி’ வந்தது. கணவனையே குழந்தையாக்கி, ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ என்ற பாடலை மெட்டமைத்துக் கொடுத்தார் இளையராஜா. இன்றுவரைக்கும், தம்பதியரின் தேசியகீதமாகத் திகழ்கிறது ‘ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா’ பாட்டு! கவிஞர் வாலியும் இளையராஜாவும் இணைந்தது இந்தப் பாடலின் மூலமாகத்தான். அடுத்து... 1977-ம் ஆண்டு. நடிகர் திலகம் சிவாஜியின் படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். ‘தீபம்’ படத்தின் ‘அந்தப்புரத்தில் ஒரு மகாராணி’ நம்மை ஆட்கொண்டது. ‘ஆளுக்கொரு ஆசை’ படத்தின் ‘கணக்குப் பார்த்து காதல் வந்தது’ பாடலும் ‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தின் ‘தேவன் திருச்சபை மலர்களே’ பாடலும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் குழல் குரலில், ‘கவிக்குயில்’ படத்தின் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலும் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தின் ‘விழியிலே மலர்ந்தது’ பாடலும் அந்தந்த தருணச் சூழலுக்கு நம்மைக் கடத்திச் சென்றன.

இதே ஆண்டில்தான் தமிழ் சினிமாவை மற்றுமொரு பாதைக்கு அழைத்துச் சென்ற, புதியதொரு பாதையையே உருவாக்கித் தந்த பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ வந்தது. நண்பனின் கனவுச் சித்திரத்துக்கு வண்ணங்கள் தீட்டி அழகு பார்த்தார் இளையராஜா. ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’ என்ற பாடலும் ‘என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே’ என்கிற ஏக்கமும் மயிலுக்கு இருந்தது. எங்களுக்கான இசையின் ராஜன் இளையராஜாதான் என்று மக்கள் மனதுக்குள் பச்சைக்குத்திக் கொண்டது அப்போதுதான்!

‘காயத்ரி’யின் ‘வாழ்வே மாயமா’ பாட்டு சோகப் பந்தைச் சுற்றவைத்தது; ‘ஓல்டெல்லாம் ஓல்டு’ என்கிற ‘ஓடி விளையாடு தாத்தா’ பாட்டு ஜாலி மூடுக்குக் கொண்டு சென்று குத்தாட்டம் போடவைத்தது.

1978-ம் ஆண்டு... ‘ஒரு வானவில் போலே’ பாட்டும் ‘காற்றினிலே வரும் கீதம்’ எனும் படத்தின் பேர்சொல்லும் பாட்டும் ‘சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ பாட்டும் ராஜ இசையின் அடுத்த பரிமாணங்களாயின. ‘அச்சாணி’ என்றொரு படம் மறந்திருக்கலாம். ஆனால், ‘மாதா உன் கோயிலில்’ இன்னும் நம் மனதுக்குள் மணியடித்துக்கொண்டே இருக்கிறது. மீண்டும் சிவாஜி படம். ‘தியாகம்’ படத்தின் எந்தப் பாட்டைச் சொல்வது? எதை விடுவது? ‘தேன்மல்லிப் பூவே’ என்று தேன் தடவி இசை தந்திருப்பார். ‘வசந்தகால கோலங்கள்’ என இசையால் கோலமும் ஜாலமும் படைத்திருப்பார். ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ என பலதரப்பட்ட சோகங்களின் சாட்சியாக இசையை நம் செவிகளில் நிறைக்கச் செய்திருப்பார்.

இதே ஆண்டில், ‘இது எப்படி இருக்கு’ என்ற ஜெய்சங்கர் படத்தில், ‘எங்கும் நிறைந்த இயற்கையின்...’ என்ற பாடலை நாம் சட்டென்று உள்வாங்கிப் பாட முடியாத மெட்டைப் போட்டு, கேட்டுக்கேட்டுக் கிறங்கச் செய்திருப்பார் இளையராஜா. ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய ‘நண்டூருது நரியூறுது’ பாடலும் ‘சிட்டுக்குருவி’ படத்தின் டபுள் ரோல் பாடலான ‘என் கண்மணி என் காதலி’ பாடலும் புதுசுதான்.

1978-ல் இவை மட்டுமா? ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தின் எல்லாப் பாடல்களும் நம் மனதுக்குள் செவிக்குள் சிந்தனைக்குள் இன்னும் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கின்றன. ‘கிண்ணத்தில் தேன் வடித்து’, ‘ஒரேநாள் உனை நான்’, ‘என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு’ என்று எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கினார். ‘சட்டம் என் கையில்’ படத்தின் ‘சொர்க்கம் மதுவிலே’ கேட்டாலே போதையேறும்படி செய்தார். ‘ஆழக்கடலில் தேடிய முத்து’ என்று இசையின் முத்தாக ஜொலித்தார் இளையராஜா.

‘வட்டத்துக்குள் சதுரம்’ என்றொரு படம் நினைவிருக்கிறதா? இதில் வரும் ‘இதோ இதோ என் நெஞ்சிலே’ என்ற பாட்டு என்னவோ செய்யும். எப்போது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் நம்மை என்னவோ செய்யும். பால்யம் தூண்டும். பால்ய நட்புக்கு ஏங்கச் செய்யும். இதே ஆண்டில்தான், ‘கிழக்கே போகும் ரயில்’ வந்தது. ‘மாஞ்சோலைக் கிளிதானோ’, ‘கோயில் மணியோசை’, ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ என்றெல்லாம் பாடல்கள் போட்டு, தடதடவென வேகவேகமாகப் பயணித்தார் இளையராஜா.
பாரதிராஜாவின் இரண்டாவது படம் இந்த ஆண்டில் வந்ததென்றால், மகேந்திரனின் முதல் படமான ‘முள்ளும் மலரும்’ வந்ததும் இதே வருடத்தில்தான். ‘செந்தாழம்பூவில்’ என்று நாமும் ஜீப்பில் பயணிப்போம். ‘நித்தநித்தம் நெல்லுச்சோறு’ என்று நம் நாசிக்குள் உணவு வாசனை ஊடுருவியது. ‘அடிப்பெண்ணே’ என்று பொன்னூஞ்சலில் ஆடவைத்தது பாட்டு. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என டப்பாங்குத்து போடவைத்தது. ‘மேகமே தூதாக வா’ என்று ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ பாட்டு இசைத்தூதாக நமக்குக் கிடைத்தது. ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் ‘நினைவோ ஒரு பறவை’ நம் நினைவுகளைப் பறக்கவிட்டது. ‘இந்த மின்மினிக்கு கண்ணிலொரு மின்னல் வந்தது’ என்று ராஜமின்னலின் வெளிச்சத்தில் கரைந்துபோனோம். ’அவள் அப்படித்தான்’ படத்தின் ‘உறவுகள் தொடர்கதை’யின் இசையும் ‘பன்னீர் புஷ்பங்களே’வின் இசையும் பெண்ணின் கனத்த சோகத்தை மென்மையான இசையாலேயே நமக்கு உணர்த்தின.

‘ப்ரியா’ படத்தின் எல்லாப் பாடல்களும் நாளைக்கு ரிலீஸ் ஆகிற பாடலின் புதுமையைக் கொண்டிருப்பதுதான் ராஜா செய்த பெரும் சாதனை. படத்தின் ஒரு பாடலைச் சொல்லிவிட்டு மற்றொரு பாடலைச் சொல்லாவிட்டால், நம் காதுகள் நம் கைகளிடம் சண்டைக்கு வரும். அத்தனையும் ஹிட்! இவை அனைத்தும் வந்த வருடமும் 78. அடுத்து... 1979-ம் ஆண்டில், ‘கண்மணியே காதல் என்பது’ என்று ‘ஆறிலிருந்து அறுபது வரை’, விஜயகாந்துக்கு முதல் ஹிட் பாடலாக அமைந்த ‘அகல்விளக்கு’ படத்தின் ‘ஏதோ நினைவுகள்’, ’பகலில் ஒரு இரவு’ படத்தின் ‘இளமை எனும் பூங்காற்று’ முதலான பாடல்கள் என ராஜா தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. ’அன்பே சங்கீதா’வின் ‘சின்னப்புறா ஒன்று’, ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தின் ‘நதியோரம்’, ஆர்.சி.சக்தியின் ‘தர்ம யுத்தம்’ படத்தின் ‘ஒரு தங்கரதத்தில்’, ‘ஆகாய கங்கை’ பாடல்கள், ’மணிப்பூர் மாமியார்’ என்று படம் வந்ததற்குச் சாட்சியாகத் திகழும் ’ஆனந்த தேன்காற்று தாலாட்டுது’, ‘காதல் வந்துருச்சி ஆசையில் ஓடி வந்தேன்’, ‘மலர்களில் ஆடும் இளமை’ என ‘கல்யாண ராமன்’ படப் பாடல்கள், ’மஞ்சள் நிலாவுக்கு’ என்று ரயில் சத்தத்துடன் அமைந்த ’முதல் இரவு’ படப்பாட்டு, ‘மயிலே மயிலே உன் தோகை இங்கே’ என்ற அதே ரயில் சத்தத்தை வேறொரு விதமாக இசைத்துக் கொடுத்த ‘கடவுள் அமைத்த மேடை’, ’திருத்தேரில் வரும் சிலையோ’, ‘எந்தன் பொன்வண்ணமே’ என்று ‘நான் வாழவைப்பேன்’ படத்தின் பாடல்கள் என்று ‘ராஜா கைய வைச்சா ராங்கா போகாத பாடல்கள் உருவான எழுபதுகள், அந்தப் பாடல்கள்... மறக்க முடியுமா என்ன?

1979-ல் வந்த ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தின் அத்தனைப் பாடல்களும் அழகு. ‘குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை’, ‘ஏய் மஸ்தானா...’, ‘நானே நானா யாரோதானா...’, ‘அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க..’ என்று மொத்தப் பாடல்களும் அழகு ப்ளஸ் இளமை. சிவாஜிக்கு ‘தேன்மல்லிப் பூவே’ போல, ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ போல், அப்படியொரு மெலடிப் பாட்டாக ‘சிந்து நதிக்கரை ஓரம்’ பாட்டு அமைந்தது. ‘பட்டக்கத்தி பைரவன்’ படத்தின் ‘எங்கெங்கோ செல்லும்’ பாட்டு, சிவாஜியை இளமையாக்கியது. ஜெயசுதாவுக்கு இன்னும் இளமை கூட்டியது. ’நிறம் மாறாத பூக்கள்’ படத்தின் எல்லாப் பாடல்களும் இசை மாறாத பூக்கள்தான்! ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் பாடல்கள் எல்லாமே புதுசுதான்! ‘பூந்தளிர்’ படத்தின் ‘வா பொன்மயிலே’ பாடலை இப்போது கேட்டாலும் நம் வயது குறைவது நிச்சயம். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் இளையராஜா வார்த்துக் கொடுத்ததெல்லாம் புத்தம்புது இசைதான்! இதே வருடத்தில் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தின் எல்லாப் பாடல்களும் எல்லா பூக்களுக்கும் இணையானவை. ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் ‘அழகிய கண்ணே’ ஒன்று போதும்... அந்தத் தாய்மையின் துக்கத்தைத் தாங்கிக்கொள்வதற்கும் ஏந்திக் கொள்வதற்கும்!

இவையெல்லாம் எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜா, எழுபதுகளின் நிறைவுக்குள் நமக்குக் கொடுத்திட்ட இசைப் பொக்கிஷம். அடுத்து எண்பதுகளின் தொடக்கம் வந்தது. அடுத்தடுத்து, புதிய இசையைப் பிரசவித்துக்கொண்டே இருந்தார். எண்பதுகளில் தென்னிந்திய சினிமாவையே கட்டி ஆண்டார் எனச் சொல்லலாம். இப்போது வயதின் எண்பதிலும் ராஜ இசையை வழங்கிக்கொண்டே இருக்கிறார்.

‘ஒரு ஊரில் ஒரு ராஜா...’ என்று குழந்தைகளுக்கு கதை சொல்லுவோம். ‘இசையில் ஒரு ராஜா... அவர்... இளையராஜா’ என்று உலகமே சொல்லிக்கொண்டிருக்கிறது. இது வெறும் கதையல்ல... சரித்திரம். இசையின் சரித்திரம். இளையராஜாவின் சரித்திரம்!


(இளையராஜா பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in