ஒரே ஒரு ராஜாவும் சில குறுநில ராஜாக்களும்!

ஒரே ஒரு ராஜாவும்
சில குறுநில ராஜாக்களும்!

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழி இசையமைப்பாளர்கள் யாரைக் கேட்டாலும், “ராஜா சார் (இளையராஜா) பாதிப்பு இல்லாமல் எங்களால் இசையமைக்க முடியாது” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு 1,000 படங்களைக் கடந்து, எத்தனையோ வணிக வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்து, பல்வேறு வகைமையிலான இசையைக் கலந்து வழங்கி, தன் இசை மூலம் எத்தனையோ ரசிகர்களையும், எத்தனையோ கலைஞர்களையும் உருவாக்கியவர் இளையராஜா!

ஒரு காலத்தில் பண்டிதர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இசை, மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் வருகைக்குப் பின் ஜனநாயகப்படுத்தப்பட்டது. இவனுக்கு என்ன தெரியும் என்ற கேள்வி அங்கு மறைந்து போனது. எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்ற நிலை உருவானது. அது இசையிலும் நடந்தது. பயிற்சி எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது. ராஜாவின் வருகைக்குப் பிறகு இங்கு ஒரு பெரும் மாயாஜாலம் நிகழ்ந்தது. ‘ரூப்பு தேரா மஸ்தானா...’ கேட்டுக் கொண்டிருந்த தமிழக காதுகளைத் திருகி, இதோ நமது மண்ணின் இசையென ‘ஆட்டிக்குட்டி முட்டையிட்டு’ பாடலைக் கோழியின் இறகாய் குறுகுறுப்பை ராஜாவால் தர முடிந்தது. ‘இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது’ என்ற இசை காதில் விழுந்தபோது, வானம் அருகில் தெரிந்தது.

1976-க்குப் பிறகு இளையராஜாவைப் போலவே ராஜா, ராஜ் என்ற பெயர்களைக் கொண்ட பலர் திரையிசை தர வந்தார்கள்.

அந்நியப்பட்டிருந்த இசை நம் அருகில் வந்தது ராஜா செய்த மேஜிக். பெரும் வெடிப்பாகத் திரையுலகில் நிகழ்ந்த அதிசயமாகப் பார்க்கப்படும் இளையராஜாவைப் போல வர வேண்டும் என, எத்தனையோ பேர் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இசையுலகில் தனது சித்தப்பாக்களின் (இளையராஜா, கங்கை அமரன்) பெயர்களைக் கொண்டு பாவலர் மகன் இளையகங்கை எடுத்த முயற்சிகூட தோல்வியில்தான் முடிந்தது.

1976-க்குப் பிறகு அவர் மட்டுமல்ல ராஜாவைப் போலவே ராஜா, ராஜ் என்ற பெயர்களைக் கொண்ட பலர் திரையிசை தர வந்தார்கள். அவர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்தான் இந்தக் கட்டுரை.

சிவாஜி ராஜா

ராஜாவுக்குப் பிறகு, அவர் பெயரைப் பின்பாதியில் வைத்துக்கொண்ட சிவாஜி ராஜாவின் இசையில் வந்த பாடல்கள், பரவலாகக் கொண்டாடப்படவில்லையென்றாலும் இசை ரசிகர்களால் இன்றளவும் நினைவில் வைத்திருக்கப்படுகிறது. இலங்கை வானொலியில் இவர் பெயர் ஒரு காலத்தில் ஒலிக்காத நாளில்லை.

1982-ல் சிவாஜி ராஜா இசையில் வெளியான படம் ‘காற்றுக்கென்ன வேலி’.

பி.சுசீலாவுடன் ஜாலி ஆபிரகாம் பாடிய இந்தப் பாடல்தான் இலங்கை வானொலி நேயர்களின் அதிகபட்ச விருப்பப்பாடலாக இருந்தது.

ரேகா ரேகா ரேகா ரேகா
காதலென்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்
ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்...’

அந்தப் படத்தில் எஸ்பிபி பாடிய ‘சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டுப்போகும்’ பாடல் ஒன்று போதும் சிவாஜி ராஜாவின் பெருமையைச் சொல்ல!

1985-ல் விஜயகாந்த், ஜோதி நடிப்பில் வெளியான படம் ‘ராமன் ஸ்ரீராமன்’. இப்படத்தில் சிவாஜி ராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில்,

‘கன்னித் தென்றல் வீசும் நேரங்கள்
சந்தத்தமிழ் பாடும் காலங்கள்
இதுவே திருநாள் சுகமே இனிமேல்
விண்ணைத் தொடும் எண்ணங்கள்...’

என்ற அற்புதமான பாடல் இடம் பெற்றது. வாணி ஜெயராம் பாடிய ‘ரோஜா ராத்திரிக்குப் பூத்திரிக்கு’, மலேசியா வாசுதேவன் - சைலஜா பாடிய ‘நாளு ரொம்ப ஆச்சு ஆசை’, மலேசியா வாசுதேவன் - வாணி ஜெயராம் இணைந்த பாடிய ‘அய்யா அய்யா அய்யய்யா அய்யய்யா கையிருப்பு காணாதைய்யா’பாடல்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இதே ஆண்டில் ராஜேஷ், சுபத்ரா நடிப்பில் வெளியான ‘சித்திரமே சித்திரமே’ படத்தில், சிவாஜி ராஜா இசையில் அத்தனை பாடல்களும் மிகப் பெரிய ஹிட்ஸ். குறிப்பாக, மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் பாடிய

‘ஆசையுள்ள ரோஜாச்செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு...’ பாடல் இப்படத்தில் இடம் பெற்றதுதான்.

1986-ல் ‘நெஞ்சில் ஒரு தாஜ்மகால்’ படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா பாடிய ‘கொடிமரம் சாய்வதுண்டு மணிமுடி தோற்பதுண்டு’, சித்ரா பாடிய ‘இதழோரம் பூ ஒன்று மலருது இது ஒரு திருநாள்’, ‘ஒரு மல்லிகைப்பூவில் எத்தனை வாசம்’ பாடல்கள் சிவாஜி ராஜாவின் இசையில் கேட்க கேட்க திகட்டாதவை. இதே படத்தில் எஸ்.ஜானகி பாடிய ‘மார்கழி மாசம் பக்கத்தில் வந்தால்’, பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் இணைந்து பாடிய ‘இதயம் உருகும்’ என்ற டூயட் பாடலும் இடம் பெற்றுள்ளன.

2002-ல், ‘பத்திரமா பார்த்துக்குங்க’ என்ற தமிழ் படத்துக்கும் பல தெலுங்கு படங்களுக்கும் சிவாஜி ராஜா இசையமைத்துள்ளார்.

ஞானராஜா

1984-ல் கே.ரங்கராஜ் இயக்கத்தில் சிவகுமார், ராதிகா நடிப்பில் உருவான ‘நிலவு சுடுவதில்லை’ படம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், 1982-ம் ஆண்டு மலேசியா வாசுதேவன் இயக்கி நடித்த ‘நிழல் சுடுவதில்லை’ படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படத்துக்கு இசையமைக்க ஒரு ராஜா வந்தார். அவர் பெயர் ஞானராஜா. கவிஞர் சுரதா எழுதிய அற்புதமான பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய, ‘என் மன ஊஞ்சலில் உன் நினைவாடுதே பொன்மனி மேடையில் சொந்தங்கள்...’ எனும் அந்தப் பாடலின் மெட்டு அத்தனை அற்புதமானது.

இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய, ‘ஏழைக்கு இரவுகள் விடியாதா... இந்தப் பாவைக்கு துயரங்கள் முடியாதோ’ என்ற சோககீதமும் இடம்பெற்றுள்ளது.

இன்னொரு ராஜ்

1982-ல் இசையமைக்க ஒரு ராஜ் வந்தார். சக்கரவர்த்தி, டெல்லி கணேஷ், விஜயகலா, உஷா ராணி, கவுண்டமணி நடிப்பில் வெளியான படம் ‘முள் இல்லாத ரோஜா’. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டுமின்றி பாடல்களை எழுதினார் கே.ராம்ராஜ். அவருடன் பூவை செங்குட்டுவன் பாடலை எழுதியுள்ளார். இப்படத்தின் இசை இசை முரளி ராஜ்.
‘வசந்தமே வருகவே வசந்தமே வருக வருக கவிமலரில் பாடி பாடி மாலை சூடுவோம்... புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்’ என்ற அழகிய டூயட் பாடலை பி.ஜெயச்சந்திரன், பி.சுசீலா பாடினர். டி.ராஜேந்தரின் மனைவி உஷா அப்போது இப்படத்தில் வழக்கம் போல கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார். அவரும், கதாநாயகியும் ஆடும் பாடலிது. பி.சுசீலா, பி.எஸ்.சசிரேகா என்ற வித்தியாசமான காம்பினேஷனில் உருவான, ‘நெனச்சு நெனச்சு மனசு மயங்குது நேத்து படிச்ச பாடம் இனிக்குது’ என்ற பாடல் கொஞ்சம் ‘ஏ’ தனமானது. இந்தப் பாடலையும் இயக்குநரே எழுதியுள்ளார். எஸ்.ஜானகி பாடிய ‘ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு’ என்ற பாடலை பூவை செங்குட்டுவன் எழுதினார்.

1983-ல் ராஜீவ், சுபத்ரா நடிப்பில் வெளியான படம் ‘கிராமத்து கிளிகள்’. இப்படத்துக்கு இசையமைத்தவர் மணிராஜா. 1983-ல் கே.முரளிராஜ் இயக்கத்தில் ஆனந்த், லலிதா குமாரி நடிப்பில் ‘அன்பே என் அன்பே’ படம் வெளியானது. இந்தப் படத்திலும் ஒரு ராஜ், அதாவது இசையமைப்பாளர் உதயராஜ் வந்தார். பாடல்கள் பெரிதும் பேசப்படவில்லை.

1983-ல் தெலுங்கு நடிகர் ராமகிருஷ்ணா ஹீரோவாக நடித்த படம் ‘கோடுகள் இல்லாத கோலம்’. சுஜாதா நடிப்பில் வெளியான இப்படத்தை எச்.ஆர்.விஜயன் இயக்கினார். இப்படத்துக்கு இசையமைத்தவரும் ஒரு ராஜா தான். அவர் பெயர் தேவராஜா. ‘வா மேகங்கள் ஓடும் அழகே ஆடும் பூங்கொடியே’ பாடலை டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.ஜானகி இணைந்து பாடினர். ஜானகியின் அழகிய ஹம்மிங் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் ஒரு பாடல் வானொலியால் புகழ் பெற்றது. பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடிய அந்த புகழ்பெற்ற பாடல்,

பூ மலரும் வேளையிலே
கண் மலர்ந்தாள் பெண் மயிலாள்
வாய் மலர்ந்தால் வேங்குழல்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்...’

இதன்பின் தேவராஜா என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

1990-ல் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் சந்திரகாந்த், கனகா நடிப்பில் வெளியா படம் ‘எங்க ஊரு ஆட்டுக்காரன்’. இப்படத்துக்கு இசையமைத்தவர் யுவராஜ், 1991-ல் ராஜேஷ்குமார், யோகப்ரியா நடிப்பில் வெளியான ‘அவள்’ படத்துக்கும் அவர்தான் இசையமைத்துள்ளார்.

ஆனால், இதற்கு முன்பாக 1988-ல் யுவராஜ் இசையமைத்த ‘பூவிழி ராஜா’ படத்தின் அனைத்து பாடல்களும் பட்டையைக் கிளப்பும் ரகம். பிரபு, ராம்கி, நிஷாந்தி நடித்த இப்படத்தை சந்தானபாரதி இயக்கினார். இந்தப் படத்தில், மறைந்த கவிஞர் பிறைசூடன் எழுதிய இந்தப் பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா இணைந்து பாடியது. மிக அழகிய மெட்டு.

ஓ.... நெஞ்சோடு ராகம் யார் தந்ததோ
கண்மூடும் போதும் யார் வந்ததோ
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நீ செய்த காயம் உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன ஓ...ஓ...ஓ...ஓ
நேரிலே வந்தாலென்ன...’

சோகமாய் தொடங்கிப் பின் மகிழ்ச்சியாய் மாறும் வகையில் யுவராஜாவால் இசையமைக்கப்பட்ட பாடலிது. ‘ன்’ என்ற எழுத்தை வைத்து பாடல் முழுவதும் பிறைசூடன் விளையாடியிருப்பார்.

இதே படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம், வாணிஜெயராம் துள்ளல் குரல்களில், ‘வானில் வட்டமடிப்போம்... வாழ்வை எட்டிப்பிடிப்போம்’ எனும் பாடல் கேட்போரைக் கிறங்கடிக்கும்.

இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடிய
‘ஈரச்சேலை என்னென்னமோ பண்ணுது
ஓரக்கண்ணு என்னென்ன சொல்லுது...’
பாடல் கேசட் கடைகளின் தேசிய கீதமாக இருந்தது. ‘அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லம்மா’என எஸ்பிபி உச்சரிக்கும் அழகே அழகு. கங்கை அமரன் எழுதிய பாடலிது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய, ‘சின்னச்சிறு கூட்டுக்குள்ள பாடிடுதுங்க ஊமைக்குயில்’ எனும் சோகப்பாடல் பிறைசூடனின் கற்பனை.

1992-ல் சிவபிரசாத் இயக்கத்தில் வெளியான படம் ‘உயிரில் ஒரு ராகம்’. சஞ்சீவி, காவ்யா நடித்த இப்படத்துக்கு இசையமைத்தவர் பெயர் ஸ்டீபன் ராஜ். இவரும் இதன்பின் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

1992-ல் ஜமீன்ராஜ் இயக்கத்தில், ‘காசு தங்கக் காசு’ படத்தில் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் வைகை ராஜா இசையமைக்க வந்தார். யோகராஜ், மாதுரி நடித்த இப்படத்தின் 7 பாடல்களும் அழகிய மெட்டுகளோடு வெளிவந்தன. ஆனால், பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

கடந்த 2007-லும் ஒரு ராஜா இசையமைக்க வந்தார். ‘மதுரை பொண்ணு சென்னை பையன்’ என்ற படத்தில் இசையமைத்த அந்த இசையமைப்பாளர் பெயர், கண்மணி ராஜா. ஏற்கெனவே இளையராஜா வீட்டிலேயே கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருக்கிறார்கள். இன்னும் எத்தனை ராஜாக்கள் வந்தாலும், ஒன்லி ஒன் அது இளையராஜா மட்டும்தான் என்பதைக் காலம் உணர்த்திக்கொண்டேயிருக்கிறது.

ராஜா எனப் பேரு வெச்சாலும் (!) இளையராஜா ஆட்சி செய்ததுபோல, ஒரு இசை சாம்ராஜ்யம் அவர்களுக்கு வாய்க்கவில்லை. என்றாலும், அவரவர் தேசத்துக்கு அவரவர் ராஜாதானே!

Related Stories

No stories found.