’மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி!’

’மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி!’

65 ஆண்டுகளாகியும் அதே அரசியல் பேசும் ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா!’

நாவலைப் படமாக்கி எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றன. அதேபோல், தமிழ் சினிமா கதைகளில், வில்லனின் கதாபாத்திரம், கனகச்சிதமாகப் பொருத்தப்பட்டு, அவர்கள் வருகிற காட்சிகளெல்லாம், நாயக, நாயகியருக்கு மட்டுமின்றி, படம் பார்க்கிற நமக்கே வயிற்றில் புளியைக் கரைக்கும். பீதியைக் கிளப்பிவிடும். அப்படியொரு நாவல் படமாகி வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வில்லன், வெகுவாக ரசிக்கப்பட்டு பேசப்பட்டார். ‘மகாதேவி’ என்கிற எம்ஜிஆர், சாவித்திரி நடித்த படத்தை யாரால்தான் மறக்கமுடியும்?

இரண்டு நாடுகளுக்கு இடையே போர். போரில் வெற்றி பெற்றதும் அந்த நாட்டு ராஜாவையும் இளவரசியையும் கைது செய்து, தங்கள் நாட்டுக்கு அழைத்து வருகிறான் தளபதி. அங்கே நடக்கிற உரையாடலில், கைது செய்யப்பட்ட ராஜாவின் நல்ல குணத்தைப் புரிந்துகொண்டு, அவளின் மகளையும் ஏற்றுக்கொண்டு, தங்கள் தேசத்தின் விருந்தினர்களாக, அரண்மனையில் முழு சுதந்திரத்துடன் உலவவிடுகிறார் ஜெயித்த ராஜா.

ராஜாவுக்கு வளர்ப்பு மகள் உண்டு. சொந்த மகனோ சிறுவன். படையின் தலைமைத் தளபதி கருணாகரன் (பி.எஸ்.வீரப்பா), தோற்றுப்போன ராஜாவின் மகள் மகாதேவியை (சாவித்திரி) அடைய விரும்புகிறான். அடுத்த தளபதியாக இருக்கிறான் வல்லபன் (எம்ஜிஆர்).

கருணாகரனுக்கு மகாதேவி மீது ஆசை. மகாதேவிக்கோ வல்லபவன் மீது பிரியம். இன்னொரு தளபதியும் (ஓ.ஏ.கே.தேவர்) மகாதேவியை அடைய விரும்புகிறார். போட்டி நடக்கிறது. சண்டையில் யார் ஜெயிக்கிறாரோ அவருக்கு மகாதேவி மணம் முடித்துத் தரப்படுவாள் என்று அறிவிக்கிறார் மகாராஜா. ஓஏகே.தேவருக்கும் பி.எஸ்.வீரப்பாவுக்கும் சண்டை. வீரப்பா ஜெயித்துவிடுகிறார்.

இந்தச் சண்டையைப் பற்றிக் கவலைப்படாமல், ஒதுங்கியிருக்கும் வல்லபனை (எம்ஜிஆர்) சிறிய பையனான இளவரசன் மூலம் தூண்டிவிடுகிறார் மகாதேவி. இப்போது ஜெயித்த வீரப்பாவுக்கும் எம்ஜிஆருக்கும் போட்டி. இதில் எம்ஜிஆர் வென்றுவிடுகிறார். மகாதேவிக்கும் அவருக்கும் திருமணம் நடக்கிறது.

ஆனாலும் பி.எஸ்.வீரப்பாவுக்கு மகாதேவியை அடையும் ஆசை மாறவே இல்லை. சந்திரபாபுவையும் ஆட்களையும் விட்டு தூக்கி வரச் சொல்லுகிறார். பார்த்தால்... அது மகாதேவி இல்லை. ராஜாவின் வளர்ப்புமகள் (எம்.என்.ராஜம்). சட்டென்று ‘’உன் மீதுதான் காதல்’’ என்று புது நாடகம் போட, அதை நம்பி, வீரப்பாவுக்கும் எம்.என்.ராஜத்துக்கும் திருமணம் நடந்தேறுகிறது. இப்போதும் மகாதேவி மீது இருக்கும் மோகத்தை எள்ளளவும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

ராஜாக்கள் இருவரும் தேசாந்திரம் செல்கிறார்கள். சிறிய பையனான இளவரசனுக்கு முடிசூட்டிவிட்டு, அவனுக்கும் தேசத்துக்கும் பாதுகாவலனாக வல்லபன் எம்ஜிஆரை நியமித்துச் செல்கிறார் ராஜா. இரண்டு ஜோடிக்கும் குழந்தை பிறக்கிறது. ஆனாலும் ‘அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்று பித்துப்பிடித்தது போல் சொல்லிக்கொண்டே இருக்கிறார் வீரப்பா.

சூழ்ச்சி. சதி. இளவரசனை மகாதேவி விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டாள் என்றொரு நாடகமாடுகிறார் வீரப்பா. மகாதேவியைச் சிறையில் அடைக்கிறார். வெளியூர் சென்றிருக்கும் எம்ஜிஆரைக் கொல்லவும் ஆள் அனுப்புகிறார். அந்த ஆள், எம்ஜிஆருக்கு விசுவாசியாகிறான். இறப்புக்குப் போராடிக்கொண்டிருக்கும் இளவரசனை உயிர் பிழைக்க வைக்கிறார் எம்ஜிஆர். வீரப்பாவின் எதிரியாக இருக்கும் ஓஏகே.தேவர், எம்ஜிஆருக்கு உதவுகிறார். பிறகு மகாதேவியைக் காப்பாற்ற எம்ஜிஆர் போராடுவதும் எம்.என்.ராஜம் உதவுவதும் பி.எஸ்.வீரப்பாவை இறுதியில் வீழ்த்தி, ராஜாங்கத்தைக் கைப்பற்றி, நல்லாட்சி செய்வதுமாக நிறைவு பெறுகிறது ‘மகாதேவி’.

எம்ஜிஆர்., சாவித்திரி, எம்.என்.ராஜம், பி.எஸ்.வீரப்பா, ஓஏகே.தேவர், சந்திரபாபு, டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி முதலானோர் நடித்த இந்தப் படம், ஆர்.ஜி.கட்கரி என்பவரின் ‘புண்ய பிரபவ்’ எனும் நாவலைத் தழுவி சில மாற்றங்கள் செய்து, திரைப்படமாக எடுக்கப்பட்டது. பிரபல இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னி தயாரித்து இயக்கிய இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் மற்றும் சில பாடல்களை கவியரசு கண்ணதாசன் எழுதினார்.

தமிழில் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் வில்லன் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் ‘பஞ்ச்’ வசனங்களாக இடம்பெற்ற படம் இதுவாகத்தான் இருக்கும். பி.எஸ்.வீரப்பாவுக்கு வசனம் எழுதும் போது, கொஞ்சம் வில்லத்தனம், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஆவேசம், கொஞ்சம் ஜொள்ளு என்று கலந்து கட்டி கவிதைகளாக கோர்த்துக் கொடுத்திருப்பார் கண்ணதாசன். ‘மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்கிற வசனம், இன்றைக்கும் பிரபலம். ‘அத்தான்’ என்று எம்.என்.ராஜம், வீரப்பாவை அழைப்பார். ‘இந்த ஒற்றைவார்த்தையைக் கேட்டு இந்தக் கருணாகரன் செத்தான்’ என்பார் வீரப்பா. தெறித்துச் சிரித்தார்கள் தமிழக மக்கள்.

எம்ஜிஆர் கொள்ளை அழகுடன் காட்சி தருவார். சுறுசுறுவென நடிப்பார். அவர் சுறுசுறுப்புக்குச் சொல்லவா வேண்டும்? அவரின் தமிழ் உச்சரிப்பும் வசனம் பேசுகிற ஏற்ற இறக்கமும் நம்மை வசீகரித்துவிடும். சாவித்திரிதான் கதையின் நாயகி. இவர்தான் மகாதேவி. பிரமாதமான நடிப்பைக் கொடுத்திருப்பார். எம்.என்.ராஜம், தான் பண்பட்ட நடிகை என்பதை நிரூபித்திருப்பார். வில்லனுடன் காமெடியன் இருந்தால், அந்தக் காமெடியை பெரும்பாலும் நாம் ரசிக்கமாட்டோம்தானே. இதிலும் வீரப்பாவுடன் இருக்கும் சந்திரபாபுவை ஏனோ ரசிக்கமுடியவில்லை. ஆனால் அவரின் பாடல்கள் மட்டும் நமக்கு வெல்லக்கட்டியாக இனித்தன.

ஏரு பூட்டுவோம் சோறு போடுவோம் கொடியை நாட்டுவோம்’ என்றொரு பாடல். ’தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்/ தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்/ அடி கிங்கினி கிங்கினி கினி கினி சுத்த மாங்கனி மாங்கனி தவமணியே/ தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்/ பாம்பை கூட நம்பிடலாம் அதன் பாசானத்தையும் நம்பிடலாம்/ இந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டையேந்தி

தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்’ என்றொரு பாடல். தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருப்பார்.

பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே/ சத்தியமா நீ உத்தமியா/

இந்த கத்தி முனையிலே துள்ளிக்கிட்டு என்னை வெத்து பய போல எண்ணாதே/ என்று வரிகளில் குலுங்கவைத்திருப்பார்.

கவிஞர் மருதகாசி எழுதிய ‘காக்கா காக்கா மை கொண்டா/ காடைக் குருவி மலர் கொண்டா/ பசுவே பசுவே பால் கொண்டா/ பச்சைக் கிளியே பழம் கொண்டா’ என்ற பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடினார்.

கண்ணதாசன் எழுதிய, ‘கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே/ கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே’ என்ற பாடலில், ’மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்/ சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே/ கண் மூடும்.... கண் மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும் / கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே’ என்ற பாடலை எம்ஜிஆருக்கு ஏ.எம்.ராஜா பாடினார். பி.சுசீலா இணைந்து பாடினார்.

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய ‘தாயத்து தாயத்து/ பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு சங்கதியை சொல்ல வரும் தாயத்து/ சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே/ தண்டோரா போட வரும் தாயத்து’ என்று எழுதினார்.

தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு/ சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ/ இத நெல்லாக்கி புல்லாக்கி அல்ல நடுவேராக்கி/ எல்லாம் வெளக்கிப்போடும் பாருங்கோ /

’பொம்பளைங்க பித்துக்கொண்ட புடவை பக்தர்களுக்கு/ புத்தியை புகட்ட வந்த தாயத்து / செம்பு தகட்டை பிரிச்ச திரையில் மறஞ்சிருந்து/ சேதிகளை சொல்லும் இந்த தாயத்து/ மந்திரம் வசியமில்லை மாயாஜால வேலையில்லை/ வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம்/ இதில் மறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம்/ உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்/ உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு/ உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு/ ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு என்று சுளீர் வரிகளைப் போட்டுவிட்டு,

’கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்/ காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்/ கண்ட கண்ட பக்கம் திரிஞ்சா கையும் காலும் வாழ்வும்/ துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும் என்று தாயத்தை வைத்துக் கொண்டு நமக்கு மந்திரித்து விட்டிருப்பார் பட்டுகோட்டையார்!

இன்னுமொரு பட்டுகோட்டையார் பாட்டு. ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா தம்பி/ இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா/ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா’ என்று எழுதினார்.

’இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா/ வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா/ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா/ விளையும் பயிரை வளரும் கொடியை/ வேருடன் அறுத்து விளையாடும்... / விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்’ என்று சொடுக்கியிருப்பார். சுளீரென்றிருக்கும் நமக்கு! மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் மெய்ம்மறந்துபோவோம்!

இப்படி, கதையும் சிறப்பு. திரைக்கதையும் அழகு. வசனங்களும் அபாரம். பாடல்களும் தேன் சுவை. பி.எஸ்.வீரப்பாவின் வெறித்தனமான ‘ஹாஹாஹாஹாஹா’ சிரிப்பு. எம்ஜிஆரின் வாள் வீச்சு என கலந்து வந்து நம்மை மயக்கினாள் ‘மகாதேவி!’ 1957ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டது இந்தப்படம்.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, வைகுண்ட ஏகாதசி முதலான நாட்களில் இந்தப் படத்தை நள்ளிரவுக்காட்சியாகப் போடுவார்கள். விழாவுக்கு குடும்பத்துடன் வந்திருக்கும் கூட்டம், அப்படியே எம்ஜிஆரையும் ‘மகாதேவி’யையும் பார்த்துவிட்டு சந்தோஷமாகத் திரும்பும் என்பதையும் படம் பார்த்த நினைவுகளையும் மதுரையைச் சேர்ந்த திரை ரசிகர் கணேசன் பகிர்ந்துகொண்டார்.

படம் வெளியாகி, 65 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா’ பாடல் இன்றைக்கும் அர்த்தத்துடன் தெருவோர டீக்கடைகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. கேட்டு ரசித்தபடி, ‘ஆமாம் பட்டுகோட்டையாரே’ என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in