‘பிரச்சினைகள் வந்தால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என அர்த்தம்’ - ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பரபரப்பு பேச்சு!

‘பிரச்சினைகள் வந்தால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என அர்த்தம்’ - ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பரபரப்பு பேச்சு!

'வாரிசு' பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன பேச போகிறார் என்பதுதான் அத்தனை ரசிகர்களின் எதிர்பார்ப்புமாக இருந்தது. ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் மேடை ஏறினார் விஜய். அப்போது, 'உங்க எல்லாருக்கும் என் அன்பை முத்தமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்றவாறு ஒரு அழகான ஸ்டைல் கிடைத்திருக்கிறது' என சொல்லி ரஞ்சிதமே ஸ்டைலில் ரசிகர்களுக்கு மேடையில் இருந்து முத்தம் கொடுத்தார்.

அதன் பிறகு சமீபத்தில் தந்தையான, ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு தன்னுடைய வாழ்த்துகளை சொன்ன நடிகர் விஜய், அடுத்த வாரிசு 2 எப்போது என்று என்னுடைய வழக்கமான அன்பான ஸ்டைலில் கேட்டார். அதன்பின்னர் ‘வாரிசு 2’ என்பது படத்தை பற்றிதான் கேட்டதாகவும் விஜய் சிரித்துக் கொண்டே பேசினார். இந்தப் படத்தில் அம்மா பாடல்தான் தனக்கு பிடித்தமானது என்பதை சொன்ன விஜய், எஸ்.ஜே.சூர்யா, குஷ்புவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். எஸ்.ஜே.சூர்யா அவர் நினைத்த உயரத்தை அடைந்து கொண்டிருக்கிறார் என்று பாராட்டினார்.

வழக்கமான தனது குட்டி ஸ்டோரியை 'வாரிசு' படக்கதையோடு சேர்த்து சொல்லிய விஜய், ‘அன்புதான் இந்த உலகில் ஜெயிக்கக் கூடிய விஷயம்’ என்பதையும் சொல்லி, தன்னுடைய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ரத்ததானம் செய்த விஷயத்தை குறிப்பிட்டு பாராட்டினார் விஜய். அதேபோல நடிகர் விஜய்யிடம் உங்களுக்கு போதை தரக்கூடிய விஷயம் எது என்று கேட்கப்பட்டது, அதற்கு ரசிகர்களுடைய அன்பு என்று பதில் கூறினார். பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது, அதெல்லாம் பழகிவிட்டது என்று சொன்னார் விஜய். எப்போது ஒருவர் உங்களை எதிர்க்க ஆரம்பித்து பிரச்சினைகள் வருகிறதோ, அப்பொழுது நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம் என்று பாசிட்டிவாக பேசினார்.

பின்பு அவர் பேசியதாவது, '1990-களில் ஒரு நடிகன் எனக்குப் போட்டியாக வந்தான். பின்பு அவன் எனக்கு சீரியஸான போட்டியாளனாக மாறினான். அவன் வெற்றியின் காரணமாக நானும் கடினமாக உழைத்தேன். அவனை விட நான் இன்னும் அதிகம் வெற்றிப் பெற வேண்டும் என நினைத்தேன். அவனைப் போல நம் எல்லாருக்கும் ஒரு போட்டி இருக்க வேண்டும். அந்தப் போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். ஆமாம், உங்களுடன் நீங்கள் போட்டியிடுங்கள்' என்று சொல்லி ரஞ்சிதமே பாடலை பாடினார். அதன்பின்னர் ரசிகர்களுடன் மேடையில் செல்ஃபி வீடியோ எடுத்து, அதனை தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் 'வாரிசு' பேச்சில் எந்தவிதமான அரசியல் பேச்சும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in