`போண்டாமணிக்கு உதவி செய்வேன்'- திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த நடிகர் வடிவேலு உறுதி

`போண்டாமணிக்கு உதவி செய்வேன்'- திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த நடிகர் வடிவேலு உறுதி

"நடிகர் போண்டாமணிக்கு தன்னால் முடிந்த உதவி செய்வேன்" என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து அகதியாக வந்த கேதீஸ்வரன் என்ற போண்டாமணி, நடிகர் பாக்யராஜ் இயக்கிய `பவுனுபவுனுதான்' என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். இவரது பெயரை போண்டாமணி என மாற்றியவர் கவுண்டமணி. இவர் வடிவேலு குழுவில் இணைந்து 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். போண்டா மணிக்கு மாதவி என்ற மாற்றுத்திறனாளி மனைவியும், சாய்குமாரி என்ற மகளும், சாய்ராம் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், 2 சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நெருக்கமான சில நடிகர்கள் நிதி உதவி திரட்டி வருகிறார்கள். இரண்டு சிறுநீரகம் செயலிழந்த நிலையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் தனக்கு உதவ வேண்டும் என்று போண்டாமணி வீடியோ மூலம் உருக்கமாக வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நலம் விசாரித்தார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் போண்டா மணியின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் போண்டாமணிக்கு தன்னால் முடிந்த உதவி செய்வேன் என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் நடிகர் வடிவேலு நேற்று இரவு தரிசனம் செய்ய வந்தார். அங்கு அவருக்கு கோயில் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் நகைச்சுவை இருக்கிறது என்றும் நாய் சேகர் ரிட்டன் படத்தில் நான் பாடிய பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெரும் என்றும் கூறினார்.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டாமணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவருக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்வேன் என்று தெரிவித்தார் வடிவேலு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in