நடிப்பில் இருந்து விலகுகிறேனா?- நடிகர் நாசர் அதிர்ச்சி

நடிப்பில் இருந்து விலகுகிறேனா?- நடிகர் நாசர் அதிர்ச்சி

``என் மூச்சு இருக்கும் வரை நடித்துக் கொண்டே இருப்பேன்'' என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது. வயதானதால் , ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்ததும் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள நடிகர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ``நான் நடிகனாகத்தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.

மேலும், வலைத்தளங்களில் சமீபமாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல; புனைவு. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன். அடையாளம் இல்லாதவர்கள் வலைத்தளங்களில் பதிவிடுவதை விட மக்களால் நம்பப்படுகின்ற நான் மதிக்கின்ற பொறுமையோடும் நட்போடும் பழகுகின்ற ஊடகங்களே அதை வெளியிடுவதுதான் வருத்தமளிக்கிறது.

எளிதாக தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும் தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம். என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன்'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in