அலோபீசியாவால் பாதிக்கப்பட்டேன், ஆனால்... - நடிகை சமீரா ஓப்பன் டாக்

அலோபீசியாவால் பாதிக்கப்பட்டேன், ஆனால்... - நடிகை சமீரா ஓப்பன் டாக்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஆஸ்கர் நிகழ்வில் வில் ஸ்மித் தன் மனைவி ஜடாவை பொது மேடையில் உருவ கேலி செய்ததற்காக கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம் இப்போது வரைக்குமே விவாத பொருளாகி இருக்கிறது.

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா, அலோபீசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இவர் கடுமையான முடி உதிர்வை சந்திக்க வேண்டி இருந்தது. இது குறித்து முன்பே ஜடா பொதுவெளியில் அறிவித்திருந்தார். முதன் முறையாக தனக்கு கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டபோது பயந்ததாகவும் பின்பு தன் தலையை மொத்தமாக மழித்து கொண்டதாகவும் ஜடா வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார். அப்படி இருக்கும்போது அவருடைய உடல் நிலையை வைத்து ஆஸ்கர் மேடையில் இப்படி கேலி செய்தது ஜடாவை காயப்படுத்தி இருக்கிறது. இது வில் ஸ்மித்தையும் கோபப்படுத்தி கிறிஸ் ராக்கை தாக்க வைத்தது.

இப்படி பொதுவெளியில் வில் ஸ்மித் ஒருவரை அடித்தது சரியா என்ற விவாதம் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அலோபீசியா நோய் பற்றியும் பலரும் தேட துவங்கி இருக்கிறார்கள். இந்தநிலையில்தான், நடிகை சமீரா ரெட்டி இந்த நோய் பற்றியும் இதனால் தான் பாதிக்கப்பட்டிருந்தது பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படையான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அதில், ‘இப்போது பலரின் கவனத்திற்கும் வந்திருக்கும் ஆஸ்கர் சம்பவம்தான் இந்த பதிவை நான் பகிர காரணம். நம் எல்லோருடைய வாழ்விலும் தனிப்பட்ட பிரச்சினைகள், போராட்டங்கள், அதில் இருந்து மீண்டு வந்திருக்கோம். அதை நாம் பகிர்வதன் மூலம் மற்றவர்களுக்கும் நம் நம்பிக்கையை கடத்த முடியும். அதைத்தான் நான் செய்ய போகிறேன். அலோபீசியா ஏரியாட்டா நோய் என்றால் அது ஒரு தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலை. அது கூந்தல் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. மேலும் தலையில் வழுக்கை பிரச்சினையை ஏற்படுத்தும். கடந்த 2016-ம் ஆண்டு என் பின் தலையில் இரண்டு இன்ச் வழுக்கையை கண்டறிந்தேன்.

இதை கையாள்வது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அலோபீசியா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் நிச்சயம் அது அவர்களை உடல் ரீதியாக சோர்வாக்காது. மேலும் இது தொற்றும் தன்மை கொண்டதும் அல்ல. ஆனால், இதனை உணர்வு ரீதியாக ஒருவர் சமாளிப்பது கடினம்’ என்கிறார் சமீரா.

இது குறித்தான சிகிச்சையில் இருந்தபோது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு முடி உதிர்வுக்கு பிறகு மெதுவாக முடி மீண்டும் அந்த இடத்தில் வளரும் மற்றும் தனக்கு கார்டிகோ ஸ்டீராய்டு ஊசி மூலம் உதிர்ந்த இடத்தில் மெதுவாக முடி மீண்டும் வளர தொடங்கியதாக சமீரா அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் நிச்சயம் சரியாகும் என்பது கிடையாது. அதேபோல, இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பதும் தெரியாது. இதில் மூன்று வகைகள் உள்ளன. மொத்த முடியும் இழந்து தலை மொத்தமும் வழுக்கையாகும் alopecia totalis, தலையின் பகுதியில் ஆங்காங்கே முடி உதிர்வும் வழுக்கையும் ஏற்படுத்தும் alopecia ophiasis, தலையை தாண்டி உடலின் மற்ற பகுதிகளிலும் முடி உதிர்வை ஏற்படுத்தும் alopecia universalis என்பதுதான் அது.

ஆனால், இப்போது எனக்கு நல்ல ஆரோக்கியமான முடிகள் இருக்கின்றன. இதை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் எனக்கு திரும்ப வரலாம். ஹோமியோபதி சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த பரபரப்பான உலகத்தில் மீது கருணையுள்ளவராக இருங்கள்’ எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீராவின் இந்த பதிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதோடு இந்த அலோபீசியாவால் பாதிக்கப்பட்ட சிலரும் தங்களது அனுபவங்களை சமீராவோடு பகிர்ந்து வருவதை இந்த பதிவில் பார்க்க முடிகிறது.

Related Stories

No stories found.