திமுக செஞ்ச உதவிகள நெனச்சா இப்பவும் எனக்கு கண்ணீர் வருது!

நெகிழும் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் போண்டா மணி
போண்டா மணி
போண்டா மணி

திடீர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் என்றாலும், திமுக ஆட்சியின் கரிசனம் மிகுந்த பார்வையால் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறார் மனிதர்.

”இது எனக்கு இரண்டாவது பிறவிண்ணே!” என நெகிழ்ச்சியாகச் சொல்லும் போண்டா மணி, மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பி இருக்கிறார். மன்னார்குடியில் கலைநிகழ்ச்சி ஒன்றிலிருந்த அவரைத் தொடர்பு கொண்டோம். அதை முடித்துவிட்டு வந்து ரிலாக்ஸ்டாக பேசினார்.

சிகிச்சையில் இருந்தபோது...
சிகிச்சையில் இருந்தபோது...

‘’பருவக்காதல்’னு ஒரு படத்துல இப்ப நடிச்சிட்டு இருக்கேண்ணே. அதுல நான் தான் ரெண்டாவது ஹீரோ. துக்க வீடுகள்ல தப்பாட்டம் ஆடுற குழுவுக்கு தலைவனா நடிச்சிருக்கேன். இந்தப் படத்தோட படப்பிடிப்பு பெரம்பலூர்ல நடந்தப்பத்தான் எதிர்பாராத விதமா என்னோட உடல்நிலை பாதிச்சிருச்சு.

மனக் கஷ்டத்துல இருக்கிற நான் சாராயத்தைக் குடிச்சுச்சு சாக்கடையில விழுந்து சாகுறதுதான் சீன். அந்தக் காட்சியில வழக்கம் போல நான் ரொம்பவே ஒன்றிப்போய் நடிச்சேன். அதுக்காக நிஜமாவே சாக்கடையில விழுந்ததுல சாக்கடைத் தண்ணி வாய்க்குள்ள போயிருச்சு. அப்ப இருந்தே பேசமுடியாம சிரமப்பட்டேன். அதுக்குக் காரணம், சாக்கடைத் தண்ணிய குடிச்சதுதான்னு அப்புறம்தான் தெரிஞ்சுது.

அதுவா சரியாகிடும்னு நினைச்சுட்டு கோவா கலைநிகழ்ச்சிக்கு கிளம்பிட்டேன். மூணு ஃப்ளைட் மாறிப் போய் நிகழ்ச்சியை முடிச்சுட்டு மதுரைக்கு வந்துட்டேன். மதுரைக்கு வந்ததுல இருந்தே எனக்கு மூச்சுவிடமுடியல. நான் சிரமப்படுறதப் பாத்துட்டு நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போனாங்க. அருட் சகோதரி லில்லிங்கிறவங்க எனக்கு வைத்தியம் பார்த்தாங்க. அமெரிக்காவுல பணி செஞ்சுட்டு தாய்நாடு திரும்பி இருக்கிற அந்தச் சகோதரி, இங்க ஏழை, எளிய மக்களுக்கு இலவசமா வைத்தியம் பாத்துட்டு இருக்காங்க. அவங்க என்னைய சோதிச்சுப் பார்த்துட்டு, ‘கழிவு நீரைக் குடிச்சது மட்டும் காரணமில்ல... உங்க உடம்புல ரத்தம் ரொம்பக் கம்மியா இருக்கு. சென்னைக்குப் போனதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை எடுத்துருங்க’ன்னு சொன்னாங்க.

லில்லி அம்மா எனக்கு அந்த ஆலோசனையச் சொல்லீருக்காட்டா இப்ப இந்த போண்டாமணி உங்கட்ட பேசிட்டு இருந்திருக்க மாட்டேண்ணே. அது மாத்திரமில்ல... சென்னையில ஐசியுவில் இருந்த நாட்கள் எனக்கு நல்ல மனிதர்களை மதம் கடந்து, கட்சிகள் கடந்து அடையாளப்படுத்திருக்குண்ணே” என்று தழுதழுத்தார் போண்டாமணி.

பூச்சி முருகனுக்கு நன்றி சொல்லும் போண்டா மணி
பூச்சி முருகனுக்கு நன்றி சொல்லும் போண்டா மணி

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த போண்டாமணி, மறுநாள் சிகிச்சைக்கு செல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென வீட்டிலேயே மயங்கியிருக்கிறார். அரை மயக்கத்தில் இருக்கும்போதே, தனக்குத் தெரிந்த சினிமா தயாரிப்பாளர் குமரகுருபரனைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்தான் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடனடியாக அட்மிட் ஆகும்படி வழிகாட்டியிருக்கிறார்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மூச்சுப் பேச்சு இல்லாமல் சுருண்டுபோனார் போண்டாமணி. அடுத்து நடந்தவைகளை விவரித்த போண்டாமணி, “நான் அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர். இலங்கையில் இருந்து அகதியாக வந்தபோது, எடப்பாடி அகதிகள் முகாமில் தங்கி வளர்ந்தவன். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தோட்டத்துல வேலை செஞ்சிருக்கேன். தேர்தல் நேரத்துல அதிமுகவுக்காக தமிழகம் எங்கும் கடுமையாப் பிரச்சாரம் செஞ்சவன் நான். ஆனா அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம, அரசு மருத்துவமனையில எனக்கு தரமான சிகிச்சை அளிக்க திமுக அரசு நிறைய உதவிகளைச் செஞ்சுது. அதையெல்லாம் நெனச்சா இப்பவும் எனக்கு கண்ணீர் வருது.

நடிகர் விவேக்கின் உதவியாளர் செல் முருகனும், நடிகர் சங்க நிர்வாகியும், திமுகவின் முக்கியப் புள்ளியுமான பூச்சி முருகனும் மருத்துவமனைக்கே நேரடியா வந்துட்டாங்க. சீஃப் டாக்டர் ஆனந்தகுமாரைச் சந்திச்சு எனக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளைச் செய்யச் சொல்லி வலியுறுத்தினாரு பூச்சி முருகன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நன்றி சொன்னபோது..
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நன்றி சொன்னபோது..

நான் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருக்கேன்னு தெரிஞ்சதுமே சிஎம் வீட்டுல இருந்தும் தொடர்பு கொண்டு நலம் விசாரிச்சிருக்காங்க. அதனாலயும் எனக்கு அங்க ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கிடைச்சுது. போதாதுக்கு, அமைச்சர் மா.சு அண்ணன் தன்னோட உதவியாளர் கருணாநிதியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வெச்சார். நடிகர் முரளிக்கு கார் டிரைவரா இருந்த கருணாநிதியை எனக்கு முன்னமே தெரியும். அவரும் வந்து என்னையப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு, அங்கருந்த ஜெயலட்சுமின்ற டாக்டர்ட்ட என்னைய கவனிச்சுப் பாத்துக்கச் சொல்லிட்டுப் போனார். மயில்சாமி அண்ணன், தன்னால முடிஞ்சளவுக்கு சினிமா பிரபலங்கள்ட எனக்காக நிதி திரட்டிக் குடுத்தார். இப்படி எனக்காக நேசக்கரம் நீட்டிய அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல எனக்கிட்ட வார்த்தைகள் இல்ல.

அதிமுக தரப்புல இருந்தும் பலபேரும் அழைச்சு நலம் விசாரிச்சாங்க. சக நகைச்சுவை நடிகர்களோட நேசத்தாலயும் திமுகவும், முதல்வரும் காட்டிய பாசத்தாலயும் ரொம்பவே நெகிழ்ந்து போய்ட்டேண்ணே. அதிமுக பேச்சாளர்தானே நமக்கென்ன வந்துச்சுன்னு திமுக தரப்புல பேசாம இருந்துருக்கலாம். ஆனா, அவங்க அப்படிச் செய்யல. ஏதோ சம்பிரதாயத்துக்காக சொன்னோம்னு இல்லாம ஒவ்வொரு நாளும் என்னோட உடல் நிலைய அக்கறையோட விசாரிச்சுட்டே இருந்தாங்க. திமுகவினர் காட்டிய அந்தப் பாசத்தப் பார்த்து மலைச்சுப் போய்ட்டேன்.

சாக்கடைத் தண்ணிய குடிச்சதால நுரையீரல்ல தான் எனக்குப் பிரச்சினை. ஆனா, எனக்கு மாரடைப்புன்னு சேனல்கள்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் செய்தி பரவியிருக்கு. என்னோட இதயம் நல்லாத்தான் இருக்கு. உங்க ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்லணும்னுதான் அது துடிக்குது. எனக்கு உடல்நிலை சரியில்லாத தகவலை வெளி உலகத்துக்கு எடுத்துச் சொல்லி உதவிகள் கிடைக்க உதவிய மீடியாக்களுக்கும், சினிமா பிஆர்ஓ-க்களுக்கும் நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேண்ணே” என்று மீண்டும் உணர்ச்சிவசப்பட்டார்.

மீண்டும் கலை நிகழ்ச்சிகளில்...
மீண்டும் கலை நிகழ்ச்சிகளில்...

நலம்பெற்றுத் திரும்பிய கையுடன் சிவகாசி, அருப்புக்கோட்டை, கும்பகோணம், மன்னார்குடி என தனது கலைப்பயணத்தைத் தொடங்கிவிட்டார் போண்டா மணி. ‘சுஜி என்கிற நான்’ எனும் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதையெல்லாம் நமக்கு பெருமைபொங்கச் சொன்னவர், “வந்துட்டேன்ல... இனி கலக்குறேன் பாருங்க!” என்று விடைகொடுத்தார்.

கலக்கட்டும் சிறக்கட்டும் போண்டா மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in